Sunday 2 July 2023

NMMS தேர்வை யார் எழுதலாம்?

NMMS தேர்வை யார் எழுதலாம்?

முதலில் NMMS தேர்வு என்றால் என்னவென்று தெரிந்து கொள்வோம்!

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வே NMMS  (National Means Cum Merit Scholarship Scheme)  என அழைக்கப்படுகிறது.

ஏன் இத்தேர்வு நடத்தப்படுகிறது?

சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், விளிம்புநிலை மாணவர்களின் மேல்நிலைக் கல்வி தடைபட்டு விடக் கூடாது என்ற நோக்கத்தில் மத்தியக் கல்வித் துறை சார்பில் ஆண்டுதோறும் NMMS எனும் இத்தேர்வு நடத்தப்பட்டு நாடு முழுவதும் ஒரு லட்சம் பேருக்கு மாதந்தோறும் ரூ.1000/- கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. 

ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இத்தேர்வை யார் எழுதலாம்?

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்புப் படிக்கும் மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதலாம்.

உதவித்தொகை எவ்வளவு?

இத்தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு ஒன்பதாம் வகுப்பில் இருந்து பனிரெண்டாம் வகுப்புப் படிக்கும் வரை மாதம்தோறும் ரூ.1000/- கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

பத்தாம் வகுப்பில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே, அடுத்த ஆண்டுக்கு உதவித் தொகை வழங்கப்படும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு 5 சதவீதத் தளர்வு உண்டு.

இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் என்ன?

ü  அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகளில் (ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சிப் பள்ளிகள்) படிக்கும் மாணவர்கள் இத்தேர்வு எழுதத் தகுதியானவர்கள். 

ü  தனியார் பள்ளி மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத இயலாது. 

ü  கேந்திரிய வித்யாலயா / ஜவஹர் நவோதயா பள்ளி மாணவர்களும் இத்தேர்வை எழுத இயலாது.  

ü  தேர்வெழுதும் மாணவர்கள் முந்தைய வகுப்பில் 55 சதவீத மதிப்பெண்களைப் பெற்று இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு 5 சதவீதத் தளர்வு உண்டு. 

ü  இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோருடைய ஆண்டு வருமானம் ரூ.3.5 லட்சத்துக்கு அதிகமாக இருக்கக்கூடாது.

உதவித்தொகையைப் பெற செய்ய வேண்டியது என்ன?

Ø  தேர்வில் வெற்றி பெற்றோர் SBI போன்ற பொதுத்துறை வங்கிகளில் தங்கள் பெயரில் தனி வங்கிக் கணக்கைத் தொடங்க வேண்டும். 

Ø  மத்திய அமைச்சகம் சார்பில் ஒவ்வொரு மாதமும் மாணவரின் தனி வங்கிக் கணக்கிற்குப் பணம் வரவு வைக்கப்படும். 

Ø  ஒவ்வோர் ஆண்டும் உதவித்தொகையைப் பெற புதுப்பிக்க வேண்டியது அவசியம். 

இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

மாணவர்கள் இத்தேர்வை எழுதக் கீழே இணைப்பில் உள்ள இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

 http://scholarships.gov.in

அரசுப் பள்ளிகளில் பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களே ஆர்வமும் திறனும் மிகுந்த மாணவர்களை இத்தேர்விற்காக விண்ணப்பிக்கச் செய்து வழிகாட்டுகின்றனர். மாணவர்கள் அவர்களின் வழிகாட்டுதல்களையும் உதவிகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

*****

No comments:

Post a Comment