அறிந்து கொள்ள வேண்டிய நாளந்தா பல்கலைக்கழகம்!
இந்தியாவின் செழுமையான கல்வி
வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டு நாளந்தா பல்கலைக்கழகம். நாமெல்லாம் மெக்காலே கல்வி முறையின்
வாரிசுகள் என்று சொல்லிக் கொண்டாலும் இந்தியாவிற்கென்ற கல்வி முறை இருந்திருக்கிறது
என்பதற்கு நாளந்தா பல்கலைக்கழகம் நல்ல சாட்சியம்.
64 துறைகள், 2,000 ஆசிரியர்கள்,
10,000 மாணவர்கள் என்று இயங்கிய தொன்மையான பல்கலைக்கழகம்தான் நாளந்தா. உலகின் முதல்
பல்கலைக்கழகம் என்ற சிறப்பும் இந்தப் பல்கலைக்கழகத்திற்கு உண்டு.
ஐந்தாம் நூற்றாண்டில் குமார
குப்தரால் இப்பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. பின்வந்த ஹர்ஷர் போன்ற அரசர்களாலும்
இப்பல்கலைக்கழகம் ஆதரிக்கப்பட்டிருக்கிறது. பனிரெண்டாம் நூற்றாண்டு வரை நாளந்தா பல்கலைக்கழகம்
கல்விச் சேவையில் இணையற்றுச் செயல்பட்டிருக்கிறது.
14 ஹெக்டேர் பரப்பளவில் நாளந்தா
பல்கலைக்கழகம் செயல்பட்டிருக்கிறது. ஒன்பது மாடிகள் கொண்ட நூலகம் நாளந்தா பல்கலைக்கழகத்திற்கு
இருந்திருக்கிறது. அந்த நூலகத்தில் 90 லட்சம் சுவடிகள் வரை நூல்களாக இடம் பெற்றிருக்கின்றன.
சீனப் பயணியான யுவான் சுவாங்கின்
குறிப்புகள் நாளந்தா பல்கலைக்கழகத்தைப் பலவிதமாகச் சிறப்பித்துச் சொல்கிறது. பல்கலைக்கழகமாக
முழு வளர்ச்சி பெறும் காலத்திற்கு முன்பே நாளந்தா மிகச் சிறந்த கல்வித் தலமாகச் செயல்பட்டிருக்கிறது.
அப்போது புத்தர் போன்றோர் நாளந்தாவிற்கு வந்து சென்றிருப்பதை யுவான்சுவாங்கின் குறிப்புகள்
காட்டுகின்றன.
இந்தியாவின் மிகச் சிறந்த
வானவில் அறிஞரான ஆர்யபட்டர் நாளந்தாவின் மாணவராக அறியப்படுகிறார். நாளந்தா பல்கலைக்கழகத்திலிருந்தே
ஆயுர்வேதம் இந்தியா முழுவதும் பரவியிருக்கிறது. தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த
தர்மபாலர் நாளந்தா பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்துள்ளார்.
நாளந்தா பல்கலைக்கழகம் புத்த
சமயத்தின் மகாயனக் கருத்துகளைச் சிறப்பாகப் போதிக்கமிடமாகக் கருதப்பட்டாலும் அங்கு
வேதங்கள், இலக்கணம், தர்க்கம், வானவியல், மருத்துவம் போன்ற பல துறைகள் சிறப்பாகச் செயல்பட்டிருக்கின்றன.
உணவும் இருப்பிடமும் இலவசமாக
வழங்கப்பட்டு இப்பல்கலைக்கழகம் அறிவுப் பரப்பில் பெரும் கல்விச் சேவை ஆற்றியுள்ளது.
இதற்கென இருநூறு கிராமங்களின் வருவாயைக் கொண்டு நாளந்தா பல்கலைக்கழகம் இயங்கியிருக்கிறது.
இன்று இந்தியர்கள் கல்வி
கற்க வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை நாடிச் சென்றாலும், அன்று கிரேக்கம், பாரசீகம்,
திபெத், சீனா, கொரியா, இலங்கை, ஜப்பான், மங்கோலியா போன்ற நாடுகளில் இருந்து கல்வி கற்க
இந்தப் பல்கலைக்கழகத்தை நாடி வந்திருக்கிறார்கள்.
உலகின் சில மோசமான சம்பவங்கள்
கல்வி உலகையும் அறிவுப் பரவலையும் மோசமாகப் பாதித்திருக்கிறது. அப்படித்தான் உலகின்
பல நூலகங்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன. பனிரெண்டாம் நூற்றாண்டில் பக்தியார் கில்ஜி
என்பவரால் நாளந்தா பல்கலைக்கழகத்தின் நூலகம் எரிக்கப்பட்டிருக்கிறது. மூன்று மாத காலம்
வரை நூலகம் எரிந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.
முன்னால் குடியரசுத் தலைவர்
அப்துல் கலாம் அவர்களின் முனனெடுப்பை ஏற்று 2014 ஆம் ஆண்டிலிருந்து நாளந்தா பல்கலைக்கழகத்தை
அதன் பாரம்பரிய பெருமைகளுக்காக இந்திய அரசாங்கம் மீண்டும் புதுப்பித்துத் தொடங்கியுள்ளது.
தற்போது இந்தப் பல்கலைக்கழகம் 450 ஹேக்டேர் பரப்பில் செயல்படுகிறது.
நாளந்தா பல்கலைக்கழகத்தை
யுனெஸ்கோ உலக பாரம்பரியக் தளங்களில் ஒன்றாக அறிவித்திருக்கிறது.
இப்படிப்பட்ட நாளந்தா பல்கலைக்கழகத்தைப்
பற்றி நாமெல்லாம் அறிந்து வைத்திருப்பது அவசியம்தானே!
*****
No comments:
Post a Comment