Sunday, 25 June 2023

ஏன் தேவைப்படுகிறது இரண்டாவது வருமானம்?

ஏன் தேவைப்படுகிறது இரண்டாவது வருமானம்?

ஒன்றுக்கு இரண்டாக இருந்தால் நல்லதுதானே. ஒன்று உதவாவிட்டாலும் இன்னொன்று உதவும். இப்படி துணைவர், துணைவி தவிர மற்ற எல்லாம் இரண்டாக இருந்தால் நல்லதுதான். ஊதியமும் அப்படி இரண்டாக இருந்தால் செலவினங்களுக்கு உதவியாக இருக்கும்.

முதல் வேலையோடு இரண்டாவதாக ஒரு பகுதி நேர வேலையை வைத்துக் கொள்வது இரண்டாவது வருமானம் பெறுவதற்கு உதவியாக இருக்கும்.

பகதி நேர வேலைதான் என்றில்லை. வீட்டைக் கட்டி வாடகைக்கு விடுவதும் இரண்டாவது வருமானத்தைத் தரும்.

வீடு கட்டி வாடகைக்கு விடுவதை விட நிரந்த வைப்பு (பிக்சட் டெபாசிட்) கூடுதல் வருமானம் தரும்.

உங்களால் ஒரு புத்தகத்தை எழுத முடியுமானால் புத்தங்கள் எழுதிப் பதிப்பித்து வெளியிடுவதும் இரண்டாவது வருமானத்தைத் தரும்.

வியாபார முதலீடுகள், பரஸ்பர நிதி முதலீடுகள், பங்குச் சந்தை முதலீடுகள் போன்றவையும் முதல் பெருக்கத்தின் மூலமாகவும் ஈவுத்தொகையின் மூலமாகவும் இரண்டாவது வருமானத்தைப் பெற்றுத் தரும்.

உங்களால் சுவாரசியமான காணொளிகளை உருவாக்க முடியுமானால் யூடியூப், இன்ஸ்டாகிராம் மற்றும் இன்னபிற சமூக ஊடகங்கள் மூலமாகக் கூடுதல் வருமானத்தைப் பெற முடியும்.

உங்களிடம் ஒரு துறை குறித்த அபரிமிதமான அறிவு இருக்குமானால் அது குறித்த ஆலோசனைகள் வழங்குவதன் மூலமாகவும் இரண்டாவது வருமானத்தைப் பெற முடியும்.

தற்காலத்தில் இணைய வழியில் பொருட்களை வாங்கி நேரடியாக விற்பதன் மூலமாகக் குறிப்பிட்ட தரகுத் தொகையை வருமானமாக ஈட்ட முடியும். நிலம் வாங்கிக் கொடுத்தல், வீடு வாங்கிக் கொடுத்தல், வாடகைக்கு வீடு பார்த்துத் தருதல், வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொடுத்தல் போன்ற தரகு வருமானம் தரும் தொழில்களைச் செய்வதன் மூலமாகவும் மற்றொரு வருமானத்தைப் பெற முடியும்.

இரண்டாவது வருமானம் என்ற ஒன்று இருந்து விட்டால் பொருளாதார ரீதியாகச் சிரமங்கள் தெரியாது. முதன்மையான வருமானம் பாதிக்கப்பட்டாலும் இரண்டாவது வருமானத்தின் மூலம் சமாளித்து விட முடியும் என்ற நம்பிக்கை பிறக்கும்.

நீங்கள் முப்பது வயதை நெருங்குகிறீர்கள் என்றால் உங்கள் முதன்மையான வருமானத்தைப் போல 10 லிருந்து 20 சதவீத வருமானம் தரும் வகையில் ஒரு இரண்டாவது வருமானத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

நாற்பது வயதை நெருங்குகிறீர்கள் என்றால் 20லிருந்து 30  சதவீத வருமானம் தரும் வகையில் இரண்டாவது வருமானத்தை வளர்த்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஐம்பது வயதை நெருங்குகிறீர்கள் என்றால் 30லிருந்து 40 சதவீத வருமானம் தரும் வகையில் இரண்டாவது வருமானத்தை மேலும் வளர்த்தெடுத்து மேம்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்.

அறுபது வயதுக்கு மேல் 50 சதவீத வருமானம் தரும் வகையில் இரண்டாவது வருமானம் கிடைத்தால் நீங்கள் முதன்மையான வருமானத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. அறுபது வயதுக்கு மேல் நீங்கள் முதன்மையான வருமானத்தைத் தரும் வேலையிலிருந்து ஓய்வு பெற வேண்டியிருக்கும் என்பதால் இரண்டாவது வருமானம் தரும் பணியை முழுமையாகக் கையிலெடுத்துக் கொண்டு பொருளாதார நெருக்கடிகளின்றி வாழலாம்.

இத்தகவல்கள் / விவரங்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

மீண்டும் ஒரு பயனுள்ள தகவலோடு / விவரங்களோடு இதே வலைப்பூவில் (www.teachervijayaraman.blogspot.com) சந்திப்போம்.

நன்றி!

வணக்கம்!

*****

No comments:

Post a Comment