Monday 12 June 2023

நகர நில அளவைப் பதிவேடு (TSLR) பற்றித் தெரிந்து கொள்வோமா?

நகர நில அளவைப் பதிவேடு (TSLR) பற்றித் தெரிந்து கொள்வோமா?

நகர நில அளவைப் பதிவேடு ‘Town Survey Land Register’ என அழைக்கப்படுகிறது. சுருக்கமாக முதல் எழுத்துகளைக் கொண்டு சுருக்கி TSLR எனக் குறிப்பிடப்படுகிறது. நகரப்பகுதிகளில் இதுவே பட்டாவுக்குச் சமமான மதிப்பு உடைய ஆவணம் ஆகும். எனவே இதை TSLR பட்டா என்றும் சொல்லலாம். அல்லது நகரப் பட்டா என்றும் குறிப்பிட்டுக் கொள்ளலாம். வெறுமனே TSLR என்றும் சொல்லலாம்.

நகர்ப்புறங்களில் இடம் வாங்கும் போது பத்திரத்தோடு TSLR ஐயும் உன்னிப்பாகப் பார்த்து வாங்க வேண்டும். வேலிச் சண்டை, நிலத் தகராறுகள் வரும் போது TSLR அவற்றைத் தீர்க்க முக்கிய ஆவணமாகப் பயன்படும்.

ஏன் நகரங்களுக்கு மட்டும் TSLR என்றால் நகர எல்லைக்குள் இருக்கும் நிலங்களின் மதிப்பு மிக அதிகம். எனவேதான் நகர அளவை என்ற கொள்கைப்படி சர்வே செய்யப்பட்டு TSLR பராமரிக்கப்படுகிறது. கிராமங்களில் இது பட்டாவாகப் பராமரிக்கப்படுகிறது.

TSLR இல் அடங்கியுள்ள விவரங்கள் என்னவென்று பார்த்தால்,

ü ப்ளாக் எண்

ü சாலையின் பெயர்

ü சர்வே எண்

ü உட்பிரிவு எண்

ü முன்னாள் சர்வே எண்

ü நிலத்தின் வகை

ü ஏக்கர் அல்லது ஹெக்டர் மதிப்பு

ü வரி வகை

ü அடங்கலில் உள்ள பெயர்

ü காலி மனை அல்லது குடியிருப்பு குறித்த விவரம்

போன்ற விவரங்கள் TSLR இல் இருக்கும்.

TSLR ஐ எங்குப் பார்ப்பது? எப்படிப் பெறுவது? என்றால் நீங்கள் கீழ்காணும் இணையதள முகவரியில் மாவட்டம், வட்டம், நகரம் அல்லது கிராமம், சர்வே எண், உட்பிரிவு எண், வார்டு எண், நகரம், ப்ளாக் போன்ற விவரங்களைப் பதிவிட்டால் இணையதளத்தின் மூலமாகவே அனைத்தையும் பார்த்து விட முடியும் மற்றும் பதிவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ள முடியும்.

அதற்கான இணையதள முகவரி

http://eservices.tn.gov.in/eservicesnew/home.html

TSLR இல் நில அளவுகள் சதுர மீட்டரில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஒரு சதுர மீட்டர் என்பது தோராயமாக பத்தே முக்கால் சதுர அடியைக் குறிக்கும். மேலும் நில வகை ரயத்துவாரி அல்லது இனாம் அல்லது அரசு நிலம் அல்லது ஜமீன் நிலம் போன்ற விவரங்களில் பொருத்தமான விவரம் குறிப்பிடப்பட்டிருக்கும். இதில் ரயத்துவாரி என்பது சொந்த நிலத்தைக் குறிக்கும். ரயத்துவாரி என்றால் அரசுக்கு வரி செலுத்துபவர்கள் என்று பொருள்.

இப்போது நிலத்தை வாங்கும் நீங்கள் என்னென்ன விவரங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

கிரயப்பத்திரம் மற்றும் TSLR பட்டா ஆகிய இரண்டும் விற்பவர் பெயரில் இருக்கிறதா என்று பாருங்கள். இல்லையென்றால் விற்பவர் அவருடைய பெயருக்கு மாற்றிக் கொண்டு வந்த பின்பு வாங்குங்கள். அல்லாது போனால் நிலத்தை வாங்கும் நீங்கள் வில்லங்கத்தில் மாட்டிக் கொள்ள நேரிடும்.

பவர் வாங்கியவர் விற்கிறார் என்றால் கிரயப்பத்திரம் பவர் கொடுத்தவரின் பெயரிலும் TSLR பட்டாவானது பவர் வாங்கியவர் பெயரிலும் இருக்கிறதா எனப் பாருங்கள். பவர் கொண்டு விற்பவரிடம் நீங்கள் இடத்தை வாங்கும் போது பவர் கொடுத்தவரின் வாழ்நாள் சான்றிதழ் கேட்பார்கள். இது எதற்காக என்றால் நீங்கள் வாங்கும் போது பவர் கொடுத்தவர் இறந்திருந்தால் பவர் வாங்கியவரின் பவர் ரத்தாகியிருக்கும்.   

மேற்படி விவரங்களை நன்கு கவனித்து நகரப் பகுதிகளில் நிலங்களை வாங்கினால் உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது. சுருக்கமாகச் சொல்வதென்றால் கிரயப் பத்திரத்தோடு TSLR பட்டாவையும் நீங்கள் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும்.  

*****

No comments:

Post a Comment