Thursday, 1 June 2023

காப்பீடுகளின் போது கவனிக்க வேண்டிய அம்சங்கள்

காப்பீடுகளின் போது கவனிக்க வேண்டிய அம்சங்கள்

காப்பீடுகள் எனும் இன்ஷ்யூரன்ஸ் பாலிசிகள் எடுக்கும் போது நிறைய அம்சங்களைக் கவனிக்க வேண்டும்.

ஏன் காப்பீடுகள் எடுக்க வேண்டும் என்பதற்கான சரியான காரணத்தை தெரிந்து கொள்வதே காப்பீடுகள் எடுக்கும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம்.

காப்பீடுகள் வருங்கால நிச்சயத்தன்மையைக் கருத்தில் கொண்டு எடுக்கப்படுகின்றன. வருமானம் ஈட்டும் ஒரு நபரை ஒரு குடும்பம் இழக்க நேரிட்டால் அதன் பின் அக்குடும்பத்தின் பொருளாதார நிலை பாதிக்கப்படும். இதைக் கருத்தில் கொண்டே குடும்பத்தின் வருமானம் ஈட்டும் நபர் தனது இழப்பிற்குப் பின்னும் குடும்பத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்படாத வண்ணம் ஒரு காப்பைச் செய்து கொள்ளும் வகையில் காப்பீட்டை எடுத்துக் கொள்கிறார்.

அந்த வகையில் காப்பீடுகளுக்காகக் கட்டப்படும் தவணைத் தொகைகள் வருங்காலத்தில் ஏற்படும் நிச்சயமற்றத் தன்மைகளால் ஏற்படும் அசாதாரண பொருளாதாரப் பிரச்சனைகளை எதிர்கொள்ள ஒரு முன்கூட்டிய திட்டமிடலாகச் செய்யப்படுகின்றன.

காப்பீட்டிற்கான தவணைத் தொகை எப்படி இருக்க வேண்டும் என்பது ஒரு முக்கியமான கேள்வி.

காப்பீட்டிற்காகக் கட்டப்படும் தொகைக் காப்பீட்டுக் காலத்தில் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ கிடைக்கப்பெறாத வகையில் இருக்க வேண்டும். அசாதாரண நிலை ஏற்படும் போது மட்டும் பயன்படுவதாக இருக்க வேண்டும். அதற்கேற்றவாறு காப்பீடுகளை டேர்ம் இன்ஷ்யூரன்ஸ் பாலிசியாக எடுப்பதுதான் சரியானது. என்டோவ்மென்ட், யூலிப் போன்ற மற்றும் இன்னபிற பைபேக் தன்மை கொண்ட பாலிசிகளை எடுப்பது ஏற்றதாக இருக்காது.

ஏனென்றால் காப்பீடு என்பது முதலீடு அல்ல. முதலீட்டு நோக்கில் பாலிசி எடுத்தால் அதனால் உங்களுக்குக் கிடைக்கும் திரும்பப் பெறும் தொகை அளவு 5 சதவீதத்திற்குள்தான் இருக்கும். இது வங்கி அல்லது அஞ்சலகம் தரும் நிரந்தர வைப்புத் தொகைக்கான (பிக்சட் டெபாசிட்டிற்கான) வட்டியை விட குறைவானதாகும். அதற்கு நீங்கள் நிரந்தர வைப்புத்தொகை திட்டத்திலே (பிக்சட் டெபாசிட்டிலே) உங்கள் தொகையைப் பாதுகாப்பாக முதலீடு செய்து விடலாம்.

பாரம்பரிய பாலிசிகளை எடுப்பதை விட டேர்ம் இன்ஷ்யூரன்ஸ்கள்தான் எடுக்கப்பட வேண்டும். இதில் கட்டும் தொகை திரும்பக் கிடைக்காது. ஆனால் இழப்பு நேரிடும் காலங்களில் இதில் கிடைக்கும் தொகைதான் பொருளாதார ரீதியாக ஒரு குடும்பத்தை நிலைநிறுத்த துணை நிற்கும்.

எவ்வளவு தொகைக்குக் காப்பீட்டை எடுக்க வேண்டும் என்பதும் அடுத்ததாகக் காப்பீட்டைப் பொருத்த வரையில் விடை காண வேண்டிய முக்கியமான கேள்வியாகும்.

காப்பீடு எடுக்க வேண்டும் என்பதற்காகக் குறைவான தொகைக்குக் காப்பீட்டை எடுக்கக் கூடாது. ஒருவரின் 15 வருட கால சம்பாத்தியத்திற்குச் சமமாகக் காப்பீட்டை எடுக்க வேண்டும். அதாவது பத்தாயிரம் ரூபாய் மாத ஊதியம் பெறும் ஒருவரின் ஆண்டு சம்பாத்தியம் ஒரு லட்சத்து இருபதினாயிரம் ரூபாய் ஆகும். அவரின் 15 ஆண்டு கால சம்பாத்தியம் பதினெட்டு லட்ச ரூபாய் ஆகும். ஆகவே அவர் பதினெட்டு லட்ச ரூபாய்க்கு டெர்ம் இன்ஷ்யூரன்ஸ் பாலிசியை எடுக்க வேண்டும். இதே முறையில் உங்கள் ஆண்டு வருமானத்தைக் கணக்கிட்டு 15 ஆண்டு கால வருமானத் தொகைக்குக் காப்பீட்டை எடுக்க வேண்டும்.

ஆயுள் காப்பீட்டின் அவசியம் எப்போதெல்லாம் ஏற்படுகின்றன என்பதற்கான சூழ்நிலைகளையும் ஆராய்ந்து நோக்க வேண்டும்.

ஒருவர் மிகப்பெரிய அளவில் வியாபாரம் செய்யும் போது அல்லது மிகப்பெரிய அளவில் வீட்டுக்கடனோ / தனிநபர் கடனோ / வேறு எவ்வகைக் கடனோ வாங்கி விடும் போது அவர் ஆயுள் காப்பீட்டை டேர்ம் இன்ஷ்யூரன்ஸாக எடுத்து விடுவது நல்லது.

ஏனென்றால் திடீரென அசம்பாவிதத்தில் அல்லது அசாதாரண சூழ்நிலையில் அவரது இழப்பு வியாபாரத்தில் நெருக்கடியையும் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் இயலாமையையும் உண்டு பண்ணி விடும். அது போன்ற நேரங்களில் அவர் எடுத்திருக்கும் ஆயுள் காப்பீடு மூலமாகப் பொருளாதாரப் பிரச்சனையைச் சமாளித்து பொருளாதார ரீதியாக அக்குடும்பம் தலைநிமிர்ந்து நிற்கும். ஆகவே வருமானம் ஈட்டும் ஒருவரின் இழப்பிற்குப் பின் ஒரு குடும்பம் பொருளாதார ரீதியாக தள்ளாடக் கூடாது என்றால் டேர்ம் வகையிலான ஆயுள் காப்பீடுகள் அவசியம்.

ஆயுள் காப்பீடு எடுக்கும் போது கவனிக்க வேண்டிய இதர அம்சங்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஆயுள் காப்பீடு எடுக்கும் போது ஒருவர் தன்மைப் பற்றிய சரியான விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். நோய்கள் இருக்கும் பட்சத்தில் அதைத் தெரிவிக்க வேண்டும். மது மற்றும் புகைப்பழக்கம் இருக்குமானால் அவற்றையும் தெரிவிக்க வேண்டும். இவற்றால் தவணைத்தொகை சற்றுக் கூடுதலாகும். ஆனால் நிச்சயம் ஆயுள் காப்பீடு உத்தரவாதமாகப் பிரச்சனையின்றிக் கிடைக்கும். ஒருவர் தமக்கு இருக்கும் சர்க்கரை நோயைக் குறிப்பிட்டுச் சொல்லாமல் அதன் காரணமாக இறப்பு நேரிடம் பட்சத்தில் அதைக் குறிப்பிட்டே வழங்கப்பட வேண்டிய ஆயுள் காப்பீட்டிற்கான தொகை (செட்டில்மென்ட்) மறுக்கப்படலாம்.

ஆயுள் காப்பீடு எடுத்தவர்கள் செய்ய வேண்டிய முக்கியமான ஒன்று என்னவென்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆயுள் காப்பீடு எடுத்தவர்கள் அந்த விவரத்தைக் கட்டாயம் குடும்பத்தில் இருப்போருக்குத் தெரிவிக்க வேண்டும். காப்பீட்டுப் பத்திரங்கள் வைத்திருக்கும் இடத்தையும் குறிப்பிடுவது பயனுள்ளதாகும். அப்போதுதான் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதன் பயனை குடும்பத்தில் இருப்போர் பெற முடியும்.

இத்தகவல்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

மீண்டும் ஒரு பயனுள்ள தகவலோடு இதே வலைப்பூவில் (www.teachervijayaraman.blogspot.com) சந்திப்போம்.

நன்றி!

வணக்கம்!

*****

No comments:

Post a Comment