Tuesday 18 July 2023

கணிதமும் BMIம்!

கணிதமும் BMIம்!

ஒருவரின் உடல்பருமன் பற்றிக் குறிப்பிட BMI ஐ ஓர் அளவிடாகக் கொள்கின்றனர்.

BMI அளவீடானது 18.5க்கு கீழ் இருந்தால் அவர் குறைந்த எடையுடையவராகக் கருதப்படுகிறார்.

BMI அளவீடானது 18.5க்கும் 25க்கும் இடையில் இருப்பவர் சரியான எடை உடையவராகக் கருதப்படுகிறார்.

BMI அளவீடானது 25க்கும் 30க்கும் இடையே இருப்பவர் அதிக எடையுடையவராகக் கருதப்படுகிறார்.

BMI அளவீடானது 30க்கு மேல் இருப்பவர் உடல் பருமன் (Obesity) உடையவராகக் கருதப்படுகிறார்.

BMI அளவீட்டில் 30க்கு மேல் இருக்கும் உடல் பருமன் நிலையை மேலும் மூன்று வகையாக  Class 1, Class 2, Class 3 எனப் பிரிக்கிறார்கள். அதில் Class 1 என்பது 30க்கும் 35க்கும் இடைபட்ட BMI அளவீடாகும். Class 2 என்பது 35க்கும் 40க்கும் இடைபட்ட BMI அளவீடாகும். Class 3 என்பது 45க்கு மேற்பட்ட BMI அளவீடாகும். Class 3 என்பது தீவிர உடல்பருமனைக் (Severe Obesity) குறிப்பதாகும். முதலிரண்டு வகையும் மிதமான மற்றும் நடுத்தரமான உடல் பருமன் நிலையைக் குறிப்பிடுவதாகும்.

அது சரி! BMI என்றால் என்ன கேட்கிறீர்களா? அது Body Mass Index என்பதன் முதலெழுத்துகளின் சுருக்கமாகும்.

இந்த BMIஐ எப்படிக் கணக்கிடுவது?

அது மிகவும் சுலபமானது.

உங்களது உடல் எடையும், உயரமும் தெரிந்தால் போதும், மிக எளிதாக BMIஐக் கண்டுபிடித்து விடலாம்.

உங்கள் உடல் உடையை m என்றும், உயரத்தை h என்றும் வைத்துக் கொள்வோம்.

இப்போது BMIக்கான சூத்திரம் என்பது BMI = m/h2

உங்கள் எடையைக் கிலோ கிராமிலும் உயரத்தை மீட்டரிலும் கொண்டு நாம் BMI ஐ கணக்கிடலாம்.

உதாரணமாக உங்களுடைய எடை 62 கிலோ கிராம் எனவும் உயரம் 160 செ.மீ. எனவும் வைத்துக் கொள்வோம். இதற்கான BMI ஐக் கணக்கிடுவோமா?

எடை கிலோ கிராமில் உள்ளது. இதை மாற்ற வேண்டியதில்லை. உயரம் செ.மீ. இல் இருப்பதால் அதை மீட்டருக்கு 100 ஆல் வகுத்து 1.6 மீ என மாற்றிக் கொள்வோம். அதாவது 160 செ.மீ. = 1.6 மீ.

இப்போது BMIஐக் கண்டுபிடித்து விடுவோமா?

BMI     = m/h2 = 62 / (1.6)2

                        = 24.22

BMI அளவீடானது 24.22 என வருகிறது. இவ்வளவீடானது 18.5க்கும் 25க்கும் இடையில் வருவதால் உங்களது எடையானது சரியான எடையாகும். இதே போல மற்றவர்களின் உடல் எடை மற்றும் உயரங்களை வைத்து அவர்கள் சரியான உடல் எடையில் இருக்கிறார்களா? அல்லது குறைந்த உடல் எடையில் இருக்கிறார்களா? அதிக உடல் எடையில் இருக்கிறார்களா? அல்லது உடல் பருமன் நிலையில் இருக்கிறார்களா? என்பதை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.

நீங்கள் கண்டுபிடித்த BMI அளவீட்டைக் கொண்டு எடை வகையை விரைவாகக் கண்டறிய மேலே நாம் சொன்ன விவரங்களை அட்டவணையாக்கிக் கீழே தந்துள்ளோம். அதைப் பயன்படுத்திக் கொள்ளவும்.

BMI அளவீட்டு எல்லை

எடை வகை

18.5க்குக் கீழே

குறைவான எடை

18.5லிருந்து 25 வரை

சரியான எடை

25லிருந்து 30 வரை

அதிக எடை

30க்கு மேல்

உடல் பருமன்

30லிருந்து 35 வரை

உடல் பருமன் Class 1

35லிருந்து 40 வரை

உடல் பருமன் Class 2

40க்கு மேல்

உடல் பருமன் Class 3 (Severe Obesity)

இப்போது சொல்லுங்கள்! BMI என்பது உடல் எடை மற்றும் உயரத்திற்கான விகிதம்தான் அல்லவா! உயரத்தை நாம் வர்க்க எண்ணாக ஆக்கிக் கொள்கிறோம் என்பதால் எடைக்கும் உயரத்தின் வர்க்கத்திற்குமான விகிதம் என்று சொல்லலாம் அல்லவா!

உங்கள் BMIஐத் தெரிந்து கொள்வதன் மூலம் நீங்கள் கணிதத்தையும் கூடவே உங்கள் உடல் நலத்தையும் தெரிந்து கொள்கிறீர்கள், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல. இத்தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

நன்றி!

வணக்கம்!

*****

No comments:

Post a Comment