கணித உலகின் மிகப் பெரிய விருது எது தெரியுமா?
கணித உலகின் மிகப் பெரிய
விருது எது தெரியுமா?
ஏபெல் விருதுதான் கணித உலகின்
மிகப் பெரிய விருது.
யார் இந்த ஏபெல்?
26 வருடம் மட்டும் வாழ்ந்த
கணித அறிஞர்தான் ஏபெல்.
இவரது முழுப் பெயர் நீல்ஸ்
ஹென்ரிக் ஏபல். நார்வே நாட்டைச் சார்ந்த கணிதவியலாளர். 05.08.1802 இல் பிறந்தவர்.
06.04.1829 இல் இறந்தவர்.
ஒரு கணிதவியலாளர் 500 ஆண்டுகள்
வாழ்ந்தால் செய்யும் கணிதப் பணிகளைச் ஏபல் 26 வருட ஆயுளுக்குள் செய்திருக்கிறார். அந்தச்
சிறப்பைக் கணக்கில் கொண்டே ஏபெலின் பெயரில் கணித உலகின் மிகப் பெரிய விருது வழங்கப்படுகிறது.
நார்வே நாடு இந்த விருதை
வழங்குகிறது. நார்வே பாராளுமன்றத்தில் 2002 இல் ஏபெலின் 200வது பிறந்த தினத்தை முன்னிட்டு
அந்நாடு கணித உலகின் மிக உயரிய விருதாக ஏபெல் விருதை வழங்குவதாக அறிவித்தது.
அதற்கடுத்த ஆண்டான 2003லிருந்து
இவ்விருது ஒவ்வொராண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதை முதலில் பெற்றவர் பிரான்ஸ்
நாட்டைச் சார்ந்த ஜீன் பியர் செர்ரே ஆவார். இடவியல் (டோபாலஜி), இயற்கணித வடிவியல்,
எண் கோட்பாடு சார்ந்த இவரது பங்களிப்புகளுக்காக ஏபல் விருது அவருக்கு வழங்கப்பட்டது.
2007 இல் இந்தியாவைச் சார்ந்த
எஸ்.ஆர். ஸ்ரீனிவாச வரதன் இந்த விருதைப் பெற்றிருக்கிறார். நிகழ்தகவுக் கோட்பாட்டிற்கு
அவர் அளித்த பங்களிப்பிற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.
ஏபல் பரிசைப் பெற்ற முதல்
பெண்மணி யார் தெரியுமா?
அமெரிக்காவைச் சார்ந்த கரென்
உகெலென்பெக்தான் ஏபல் பரிசைப் பெற்ற முதல் பெண்மணி ஆவார். 2019 இல் இவர் இவ்விருதைப்
பெற்றார். இவர் வடிவியல், அளவீட்டுக் கோட்பாடு, கணித இயற்பியல் ஆகிய துறைகளுக்குச்
செய்த பங்களிப்புகளுக்காக ஏபல் விருதைப் பெற்றார்.
2022 இல் இவ்விருதைப் பெற்றவர்
டென்னிஸ் பார்னெல் சல்லிவன் ஆவார். இவர் 82 வயது உடையவர். இவர் இயற்கணிதம், வடிவியல்,
இடவியல் (டோபாலஜி) போன்ற கணிதத் துறைகளில் ஆர்வமுடையவர். கணிதப் பிரிவுகளான ஹோமோடோபி,
டைனமிக் சிஸ்டம்ஸ், கேயாஸ் தியரி ஆகிய கணிதத் துறைகளில் பங்களிப்புகளை வழங்கியவர் ஆவார்.
தற்போதைய இப்பரிசின் மதிப்பு
7.5 மில்லியன் நர்வேஜியின் குரோனாகும். இந்திய மதிப்பில் தோராயமாக ஐந்து கோடி ரூபாய்க்கும்
அதிகமாகும். இந்தப் பரிசானது கணிதத் துறையில் வழங்கப்படும் நோபல் பரிசாகக் கருதப்படுகிறது.
*****
அருமையான பதிவு
ReplyDelete