Monday, 21 August 2023

அறிவில்லாத போது எது இருந்து என்ன? (குறள் கதைகள் – 3)

அறிவில்லாத போது எது இருந்து என்ன?

(குறள் கதைகள் – 3)

சில கதைகள் மனதுக்குள் உண்டாக்கும் மாற்றங்களைச் சொல்லில் சொல்லி விட முடியாது. உணர முடியாத பல விசயங்களை உணர்த்துவதற்குக் கதைகள் சரியான ஊடகமாக இருக்கின்றன. அதனால்தான் கால வெளிகளைக் கடந்து கதைகள் சொல்லப்படுகின்றன, கேட்கப்படுகின்றன, பார்க்கப்படுகின்றன.

நம் பண்டைய கதைகள் எத்தனையோ விசயங்களை உணர்த்துகின்றன. இக்கதைகளை நாம் தாத்தா பாட்டிகளிடமிருந்து, அப்பா அம்மாவிடமிருந்து, அத்தை மாமாவிடமிருந்து பெறுகிறோம். அவற்றில் இருக்கும் அனுபவ உண்மையும் அறிவுத் தெளிவும் நம்மைப் பிரமிக்க வைத்து விடுகின்றன.

அப்படிச் சில கதைகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஒரு ராஜா காட்டிற்கு வேட்டைக்குச் சென்றார். வழிதவறிச் சென்று விட்ட அவர் பல இடங்களில் அலைந்து திரிந்து ஒரு குடிசை வீட்டைக் கண்டார். அவருக்கோ பசி. அந்த வீட்டில் நுழைந்தார். அந்த வீட்டில் ஒரு விறகு வெட்டி இருந்தார். அவர் குதிரையில் வந்த ராஜாவுக்கு தான் சமைத்திருந்த கஞ்சியைக் கொடுத்தார். அவருக்கு இவர்தான் நாட்டின் ராஜா என்பதெல்லாம் தெரியாது.

பல இடங்களில் பட்டினியோடு அலைந்து திரிந்த ராஜாவுக்குக் கஞ்சி தேவாமிர்தமாகப் போய் விட்டது. அப்போதே இந்த விறகு வெட்டிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்து கொண்டார்.

ராஜா நாட்டிற்குத் திரும்பியதும் விறகு வெட்டியை வரச் செய்து அந்த விறகு வெட்டிக்கு ஒரு சந்தனக் காட்டைப் பரிசளித்தார். அதன் பிறகு அந்த விறகு வெட்டி சந்தோஷமாக இருப்பார் என்பது ராஜாவின் நம்பிக்கை. ஆனால் அதன் பிறகும் அந்த விறகுவெட்டி அன்றாடம் கஷ்டப்படும் விறகுவெட்டியாவே இருந்தார்.

என்னடா இப்படியாகி விட்டதே என்று யோசித்த ராஜா அதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ள விரும்பினார். அப்போதுதான் அவருக்குத் தெரிந்தது அந்த விறகுவெட்டி மரங்களை வெட்டி எரித்து கரியாக்கி விற்பனை செய்பவர் என்பது. அப்படியே அவர் தனக்கு வழங்கப்பட்ட சந்தனக்காட்டில் இருந்த சந்தனக் கட்டைகளையும் வெட்டி கரியாக்கி விற்றுக் கொண்டிருந்தார்.

இப்படிப்பட்டவருக்கு என்ன உதவி செய்தாலும் அவர் முன்னேற முடியாது என்பதை ராஜா புரிந்து கொண்டார். உதவி செய்தாலும் அந்த உதவியைப் பயன்படுத்திக் கொள்வதற்கும் கொஞ்சம் அறிவு வேண்டியதாகத்தானே இருக்கிறது.

நாம் உதவி செய்வது நல்ல விசயம்தான் என்றாலும் அந்த உதவியை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக் கொண்டு முன்னேறத் தெரிகின்ற அறிவும் உதவியைப் பெறுகின்றவர்களுக்கு இருக்க வேண்டியதாகிறது. அப்படி இல்லையென்றால் ராஜா விறகுவெட்டிக்குச் செய்கின்ற உதவிகள் போலத்தான் ஆகி விடும்.

இதை உணர்த்துகிறாற் போல

“அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை

இன்மையா வையாது உலகு.”                   (குறள், 841)

என்ற திருக்குறள் இருக்கிறது அல்லவா! திருவள்ளுவர் எவ்வளவு ஆழ்ந்து யோசித்து அறிவின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார். அறிவின் முக்கியத்துவத்தை உணர்த்துவது போல மேற்படிக் கதையும் அமைந்துள்ளது அல்லவா!

*****

No comments:

Post a Comment