Monday 14 August 2023

யார் பாவி? (குறள் கதைகள் – 2)

யார் பாவி?

(குறள் கதைகள் – 2)

ஓர் ஊரில் மெத்தப் படித்த ஐந்து மேதாவிகள் இருந்தனர். அவர்கள் ஐவரும் ஒரு நாள் நடைபயணமாகத் தங்கள் ஊரிலிருந்து பக்கத்து ஊருக்கு ஒரு விழாவுக்காகச் சென்று கொண்டிருந்தார்கள்.

அப்படிப் போய்க் கொண்டிருக்கும் போது திடீரென வானத்தில் மின்னல், இடி. அதைத் தொடர்ந்து மழையும் பெய்ய ஆரம்பித்து விட்டது. அவர்கள் ஓடிப் போய் அருகில் இருந்த பாழடைந்த ஒரு மண்டபத்தில் ஒதுங்கிக் கொண்டார்கள். மின்னல், இடி, மழை மூன்றும் ஓய்ந்த பாடில்லை.

நீண்ட நேரம் அவர்கள் அந்த மண்படத்தில் நின்று கொண்டிருந்தார்கள். எவ்வளவு நேரம் சும்மா நிற்பது? மெத்த படித்த மேதாவிகளில் ஒருவன் முன் ஜென்ம பலனைப் பற்றிப் பேச ஆரம்பித்தான். நாம் முற்பிறவியில் புண்ணியம் செய்திருந்தால் இந்தப் பிறவியில் இந்த மண்டபத்தில் இடி விழாமல் தப்பிக்கலாம். பாவம் செய்திருந்தால் இந்த மண்டபத்தில் இடி விழுந்து அனைவரும் இறக்க நேரிடும் என்றான்.

முற்பிறவியில் யார் புண்ணியம் செய்தது, யார் பாவம் செய்தது என்று எப்படிக் கண்டுபிடிப்பது?

அதற்கும் அவனே ஒரு தீர்வும் சொன்னான். நாம் அனைவரும் ஒவ்வொருவராக மண்டபத்தை விட்டு இறங்கி மழையில் ஐந்து நிமிடம் நிற்போம். அப்படி நிற்கையில் நாம் பாவம் செய்திருந்தால் நம் மீது இடி விழும். புண்ணியம் செய்திருந்தால் இடி விழாது என்றான்.

இந்த யோசனையை ஏற்று ஒவ்வொருவராக ஐந்து நிமிடம் மண்டபத்தை விட்டு இறங்கி மழையில் நின்றனர். நான்கு பேர் மழையில் நின்றும் இடி விழவில்லை. ஆகவே அந்த நான்கு பேரும் ஐந்தாவது மேதாவிதான் போன பிறவியில் பாவம் செய்திருக்க வேண்டும். அவனால் இந்த மண்டபத்தில் இடி விழுக் கூடும் என நினைத்து அவனை மழையில் இறங்கச் சொல்லினர். அவனுக்கும் தான் போன பிறவியில் பாவம் செய்திருப்போமோ என்ற பயம் வந்துவிட்டது. எனவே அவன் மழையில் இறங்க முடியாது என மறுக்க ஆரம்பித்து விட்டான்.

இதைக் கண்ட நான்கு பேரும் அவனைக் குண்டு கட்டாகத் தூக்கி மண்டபத்தை விட்டு மழையில் எறிந்தனர். அவர்கள் எறிந்த அடுத்த நிமிடமே பயங்கரமான மின்னல் வெட்டி இடி இடித்து அந்த மண்டபத்தின் மீது மின்னல் கீற்று விழுந்தது. அவ்வளவுதான் மண்டபம் நொறுங்கி விழுந்து நான்கு பேரும் இறந்துப் போயினர். மண்டபத்தை விட்டுத் தூக்கி எறியப்பட்ட ஐந்தாம் ஆள் பிழைத்துக் கொண்டான்.

இப்படியும் நடப்பதுண்டு. நாமாக ஒரு முடிவு கட்டிக் கொண்டால் இப்படித்தான் ஆகும். தவறாக ஒன்றைச் சோதிக்க நினைத்தால் அந்தச் சோதனை முடிவில் சோதிப்பவர்களையே வந்து சேரும்.

நாம் ஒருவரைக் குற்றவாளி என ஒருவரை நோக்கி ஒரு விரலை நீட்டும் போது மீதி விரல்கள் நம்மை நோக்குகின்றன என்பார் அறிஞர் அண்ணா.

இதைத்தான் திருவள்ளுவர் குற்றம் கடிதல் என்கிற அதிகாரத்தில்

“தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்

என்குற்றம் ஆகும் இறைக்கு.”                  (குறள், 436)

என்கிறார். என்ன அருமையான குறள். மேற்படி கதையும் இதை உணர்த்துவதைப் போல உள்ளது அல்லவா!

*****

No comments:

Post a Comment