Thursday 24 August 2023

வால்ட் டிஸ்னியின் விடா முயற்சியும் விஸ்வரூப வெற்றியும்!

வால்ட் டிஸ்னியின் விடா முயற்சியும் விஸ்வரூப வெற்றியும்!

விடாமுயற்சியின் சொந்தக்காரராக எடிசனைக் குறிப்பிடுவர். எடிசன் மட்டுமா? வால்ட் டிஸ்னியையும் குறிப்பிடலாம். வெற்றியாளர்கள் அனைவருமே விடா முயற்சியின் சொந்தக்காரர்கள்தான்.

அமெரிக்காவின் சிகாகோவில் பிறந்த டிஸ்னிக்கு ஓவிய ஆர்வம் மிகுதி. அந்த ஆர்வத்தின் காரணமாகவே தொலைதூரக் கல்வியில் கேலிச்சித்திரம் (கார்டூன்) வரைய கற்றுக் கொண்டார்.

அந்தத் தொலைதூரக் கல்வி அவரது வாழ்க்கையை மாற்றியது. மாற்றியது என்றால் உடனடியாக மாற்றவில்லை. அவர் வரைந்த மிக்கி மௌஸ் பிரபலமாகும் வரை அவர் கேலிச்சித்திரங்களை வரைந்து கொண்டு பலவிதமான வேலைகளைப் பார்த்தார்.

செய்தித்தாள் போடுபவராக வேலை பார்த்தார். அவசரகால ஊர்தி (ஆம்புலன்ஸ்) ஓட்டுநராக இருந்தார். கலை நிறுவனங்களில் (ஆர்ட் ஸ்டூடியோ) வேலை பார்த்தார். விளம்பர தயாரிப்புப் பணிகளைச் செய்தார். கேலிச்சித்திரக் காணொளிகள் தயாரித்துப் பார்த்தார். எதிலும் அவருக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. வெற்றி கிடைக்கா விட்டாலும் அவரது முயற்சிகள் ஓயவில்லை.

ஒரு நாள் அவரைச் சுற்றி விளையாடிய சுண்டெலி அவருக்குள் வித்தியாசமான படைப்பூக்க உண்ரவைத் தந்தது. அந்தச் சுண்டெலியை மகிழ்ச்சியான கேலிச்சித்திரமாக உருவாக்கினார். அதற்கு மார்டிமர் மௌஸ் எனப் பெயரிட்டார். அந்தப் பெயர் அவரது மனைவிக்குப் பிடிக்காததால் அதற்கு மிக்கி மௌஸ் எனப் பெயரிட்டார். அந்த மிக்கி மௌஸ் பாத்திரத்திற்கு அவரே குரல் கொடுத்து திரைக்காணொளிகளாக (அனிமேஷன் திரைப்படம்) உருவாக்கினார். மிக்கி மௌஸ் திரைக்காணொளிகள் அவருக்குப் பெரும் பெயர் பெற்றுத் தந்தது.

திரைக்காணொளிகளைத் தொடர்ந்து மிக்கி மௌஸ் பொம்மைகள், மிக்கி மௌஸ் படம் கொண்ட உடைகள், பைகள், இனிப்பு வகைகள், பனிக்கூழ் வகைகள் போன்றவற்றையும் வெளியிட்டு மிக்கி மௌஸை மேலும் பிரபலப்படுத்தினார்.

திரைக்காணொளிகளோடு நின்று விடாமல் மாபெரும் பொழுதுபோக்கு பொருட்காட்சி நிறுவனங்களையும் (தீம் பார்க்) உருவாக்கினார் டிஸ்னி. மிக்கி மௌஸ், சின்ட்ரெல்லா போன்ற குழந்தைகள் விரும்பும் பாத்திரங்களை மிகப் பெரிய அளவில் அமைத்து பொழுதுபோக்கு விருந்து படைத்தார்.

குழந்தைகள் விரும்பும் வகையில் அனைத்துப் பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்த டிஸ்னி உலகத்தை (டிஸ்னி லேண்ட்) 1955இல் உருவாக்கினார். அப்போதிலிருந்து தற்போது வரை டிஸ்னி உலகம் குழந்தைகளைக் கவரும் பிரமாண்ட பொழுதுபோக்கு உலகமாக உள்ளது.

வால்ட் டிஸ்னியின் விடாமுயற்சியே டிஸ்னி உலகம் எனும் விஸ்வரூப வெற்றியாக அன்றும் இன்றும் என்றும் நம் கண் முன் நிற்கிறது.

தோல்விகள் பல நேர்ந்தாலும் விடாமுயற்சி இருந்தால் வெற்றி என்பது சாத்தியமே என்பதை வால்ட் டிஸ்னியின் வாழ்க்கையும் நிரூபிக்கிறது என்றால் அது மிகையில்லைதானே!

*****

No comments:

Post a Comment