Tuesday, 8 August 2023

திருச்சியின் சிறப்புமிக்க இடங்கள் அறிவீர்களா?

திருச்சியின் சிறப்புமிக்க இடங்கள் அறிவீர்களா?

திருச்சிக்குச் செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் அதிகபட்சம் திருச்சி மலைக்கோட்டை மற்றும் விமான நிலையத்தோடு திரும்பி விடுவோர் உண்டு. திருச்சி செல்லும் போது நேரம் கிடைத்தால் திருச்சியைச் சுற்றிப் பார்க்க வேண்டிய ஏராளமான இடங்கள் உள்ளன. அவ்விடங்கள் அறிவுப் பூர்வமாக அறிந்து கொள்ள வேண்டிய இடங்களும் கூட. ஆன்மிகத் திருத்தலங்களும் கூட. வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களும் கூட. அவற்றைத்தான் திருச்சியின் சிறப்புகளாக இப்பத்தியில் குறிப்பிட விழைகிறேன்.

தமிழ்நாட்டிற்கு மையமாக அமைந்திருக்கும் சிறப்பு திருச்சிராப்பள்ளி எனப்படும் திருச்சிக்கு உண்டு. இதனைக் கருத்தில் கொண்டே திருச்சியைத் தமிழ்நாட்டின் தலைநகராக்க முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அப்போது முயற்சித்தார்.

திருச்சியின் சிறப்பு சங்கக் காலத்திலிருந்து தொடங்குகிறது. திருச்சி அருகே உள்ள உறையூர் சங்கக் காலத்தில் சோழர்களின் தலைநகராக இருந்துள்ளது. அப்போது உறையூரானது உறந்தை, கோழியூர் எனும் பெயர்களாலும் வழங்கப்பட்டுள்ளது.

திருச்சிக்கு ஆன்மிகச் சிறப்பும் உண்டு. திருச்சியின் அடையாளமான மலைக்கோட்டையின் கீழே மாணிக்க விநாயகர் கோயிலும், இடையே தாயுமானவர் கோயிலும், உச்சியிலே உச்சிப் பிள்ளையார் கோயிலும் சைவ அடையாளங்களாக விளங்குகின்றன.

திருச்சிக்கு அருகே உள்ள திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) பெருமாள் கோயில் வைணவ அடையாளமாக விளங்குகிறது.

மேலும் இசுலாமிய அடையாளமாக மதுரை சாலையில் தாராநல்லூரில் நத்ஹர்வலி தர்காவும், மணப்பாறை அருகே பொத்தமேட்டுப்பட்டியில் கிறித்துவ அடையாளமாக வியாகுல மாதா ஆலயமும் உள்ளன.

கரிகாலன் கட்டிய கல்லணை திருச்சிக்கு அருகே உள்ளது.

இந்தியாவிலேயே தேசிய வாழை ஆராய்ச்சி மையம் திருச்சிக்கு அருகே போதாவூரில் அமைந்துள்ளது.

ஆசியாவிலேயே மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்காவும் திருச்சிக்கு அருகே மேலூரில் அமைந்துள்ளது.

திருச்சியில் விமான நிலையமும், கோளரங்கமும் அருகருகே புதுக்கோட்டைச் சாலையில் அமைந்துள்ளன. மேலும் புதுக்கோட்டை சாலை வழியே செல்லும் போது நவல்பட்டில் துப்பாக்கித் தொழிற்சாலையும், பல்கலைப்பேரூரில் பாரதிதாசன் பல்கலைக்கழகமும் அமைந்துள்ளன.

பாரத மிகுமின் நிறுவனம் (BHEL) திருச்சிக்கு அருகே திருவெறும்பூரில் அமைந்துள்ளது.

இவ்வளவு சிறப்புள்ள திருச்சியை வாய்ப்பு கிடைக்கும் போது அதனைச் சுற்றியுள்ள வரலாற்றுச் சிறப்பும் ஆன்மிகச் சிறப்பும் அறிவியல் சிறப்பும் கொண்ட அத்தனை இடங்களையும் சுற்றிப் பாருங்கள்!

நன்றி!

வணக்கம்!

*****

No comments:

Post a Comment