வேலைக்குத் தேவையான மென்திறன்கள் ஆறு!
வேலைகளைச் சிறப்பாகச் செய்வதற்கான
மென்திறன்கள் பல உள்ளன. அவற்றுள் ஆறு முக்கியமானது. அந்த ஆறு முக்கியமான மென்திறன்கள்
குறித்து காண்போமா?
1. முடியும் அல்லது முடியாது என்பதைத் தெளிவாக வெளிப்படுத்துதல்
:
ஒரு வேலை அல்லது பொறுப்பு
தரப்படும் போது அதை ஏற்பதா அல்லது மறுப்பதா என்பதை முடிவு செய்ய வேண்டும். அதற்குப்
பின்வரும் கேள்விகளுக்கு விடை காண வேண்டும். அந்த வேலை அல்லது பொறுப்பை ஏற்க வேண்டியதன்
தேவை என்ன? அதனால் என்ன வளர்ச்சி அல்லது உயர்வு கிடைக்கும்? அந்த வேலையைச் செய்யும்
திறன் நமக்கு உள்ளதா? நம் திறன்களின் எல்லைக்குள் அந்த வேலை வருகிறதா? அதனால் கிடைக்கும்
பலனும் பயனும் குறுகிய காலமுடையதா, நீண்ட காலமுடையதா? அந்த வேலை நம் லட்சியங்களுக்கு
இயைந்து உள்ளதா? மேற்படி கேள்விகளுக்கு விடை கண்டு அதற்கேற்றபடி அந்த வேலையைச் செய்ய
முடியும் அல்லது செய்ய முடியாது என்பதைத் தெளிவாக வெளிப்படுத்த வேண்டும்.
2. ஆர்வம் :
எந்த வேலையாக இருந்தாலும்
அந்த வேலை தொடர்பாக ஏன், எதற்கு, எப்படி, என்ன, எங்கே என்கிற 5 கேள்விகளை எழுப்பி ஆர்வத்துடன்
விடை காண வேண்டும். இக்கேள்விகளுக்குக் கிடைக்கும் விடைகள்தான் நாம் எடுக்கிற முடிவு
சரியா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள உதவுகிறது.
3. முக்கியமான மூன்று :
எந்த ஒரு வேலையாக இருந்தாலும்
அந்த வேலையின் முக்கியமான மூன்று கூறுகளில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். அந்த வேலையின்
ஏகப்பட்ட கூறுகளில் கவனம் செலுத்த நினைத்தால் அந்த வேலையைத் திருப்தியோடும் நிறைவோடும்
செய்து முடிப்பது கடினமாகி விடும். அதற்கேற்றாற்போல வேலை தொடர்பான செய்திகளைப் பகிர்ந்து
கொள்ளும் போது அந்த மூன்று கூறுகளின் அடிப்படையில் மிகச் சுருக்கமாகக் கருத்துகளைத்
தெரிவிப்பதைப் பழகிக் கொள்ள வேண்டும்.
4. சிந்தித்துப் பதில் கூறுதல் :
எந்த ஒரு விசயமாக இருந்தாலும்
அதைப் பற்றிப் பேசுவதற்கு முன்பாக அது உண்மையானதா, உதவிகரமானதா, ஊக்குவிப்பதா, தேவையானதா
என்பதை யோசித்து அதைப் பணிவாகச் சொல்ல வேண்டும். இல்லையென்றால் சொல்லாமல் தவிர்த்து
விட வேண்டும்.
5. சரியான கேள்விகளைக் கேட்டல் :
ஒரு வேலையைச் செய்யத் தொடங்கும்
முன் அந்த வேலையின் இலக்குகளை கேள்விகளின் மூலமும் அதற்குக் கிடைக்கும் பதில்களின்
மூலமும் சரியாகத்தான் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
6. ஐசன்ஹோவர் மேட்ரிக் முறை :
ஐசன்ஹோவல் மேட்ரிக் முறை
மூலம் ஒரு வேலையின் தன்மையைப் புரிந்து கொண்டு அதன்படி செயல்பட வேண்டும். அதன்படி வேலைகளானது,
அவசரமானது மற்றும் முக்கியமானது,
அவசரமானது மற்றும் முக்கியமில்லாதது,
அவசரமில்லாதது மற்றும் முக்கியமானது,
அவசரமில்லாதது மற்றும் முக்கியமில்லாதது
என வகைப்படுத்தப்படுகிறது. அதற்கு ஏற்றபடி வேலைகளைச் செய்து முடிக்க வேண்டும்.
இந்த ஆறு மென்திறன்களையும்
உங்கள் வேலைகள் மற்றும் பொறுப்புகளில் பயன்படுத்தினால் நீங்கள் உயர்வது உறுதி.
*****
No comments:
Post a Comment