விழுந்தால் மீள முடியாத கிணறு எது தெரியுமா?
ஓர் அரசனுக்கு ஒரு நாள் பயங்கரமான
கனவு வந்தது. ஓர் ஆழமான கிணற்றுக்குள் விழுந்து அதிலிருந்து வெளியே வர முடியாத அளவுக்கு
உள்ளே போய்க் கொண்டிருப்பதான கனவு அது. அப்படி ஒரு கிணறு நிஜத்திலும் இருக்கிறதா என்று
கேட்டார் அரசர் அமைச்சரிடம். அமைச்சர் யோசித்தார். அவரது யோசனைக்கு எதுவும் பிடிபடவில்லை.
இந்தக் கேள்விக்கு நாளைக்குள்
பதில் கண்டறிந்து வந்து கூறா விட்டால் நீங்கள் அமைச்சர் பதவியில் நீடிக்க முடியாது
என்று அரசர் கூறி விட்டார்.
அமைச்சர் விடை தேட ஆரம்பித்தார்.
எங்கெங்கோ சுற்றித் திரிந்து கண்டவர்களிடம் எல்லாம் அரசரின் கேள்விக்கான விடை கிடைக்கிறதா
எனக் கேட்டுப் பார்த்தார். அமைச்சரின் நிலையைப் பார்த்த முதியவர் ஒருவர் அமைச்சரைப்
பார்த்து, அமைச்சர் பதவி போனால் என்ன? என்னிடம் இருக்கும் மந்திரக்கல்லைப் பயன்படுத்தி
அரசரை விட நீங்கள் பணக்காரர் ஆகலாம் என்றார். அமைச்சருக்கு ஆசை கண்களை மறைத்தது. அப்படியானால்
மந்திரக்கல்லைத் தனக்குத் தருமாறு கேட்டார் அமைச்சர்.
மந்திரக் கல் வேண்டும் என்றால்
தான் கூறுவதையெல்லாம் செய்ய வேண்டும் என்றார் முதியவர். அமைச்சர் எதையும் செய்வதற்குத்
தயாராக இருந்தார். முதலில் அந்த முதியவர் சமைக்காத மீனைச் சாப்பிடச் சொன்னார். சைவ
உணவை உண்ணும் அமைச்சர் கஷ்டப்பட்டு அதை உண்டார். அடுத்ததாகச் சட்டையைக் கிழித்துக்
கொண்டு பைத்தியம் போல தெருவில் நடக்க வேண்டும் என்றார் முதியவர். அதையும் செய்தார்
அமைச்சர். அதற்கு அடுத்ததாக எதிரில் வந்த ஒருவரைப் பார்த்து அவரைக் கொலைசெய்யுங்கள்
என்றார் முதியவர். அதற்கும் அந்த அமைச்சர் தயாரான போது, அவரைத் தடுத்து நிறுத்தி,
“இப்போது அந்தக் கேள்விக்கு விடை தெரிகிறதா? ஆசைதான் மனிதர்களால் மீள முடியாத கிணறு.
அதன் உள்ளே போனால் போய்க் கொண்டே இருக்க வேண்டியதுதான்.” என்றார் முதியவர்.
அமைச்சருக்கு உண்மை புரிந்தது.
முதியவருக்கு நன்றி கூறி விட்டு அரசரைப் பார்க்க சென்றார் அமைச்சர். என்ன மக்களே இந்தக்
கதை சொல்லும் கேள்விக்கான பதில் சரிதானே. ஆசைதானே மீள முடியாத கிணறு. அந்த மீள முடியாத
கிணற்றுக்குள் விழுந்து விடாமல் எச்சரிக்கையாக இருங்கள். இதைத்தான் புத்தரும் சொல்கிறார்
ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்று.
இது போன்ற பயனுள்ள கதைகளுக்குத்
தொடர்ந்து இணைந்திருங்கள்.
நன்றி. வணக்கம்.
*****
No comments:
Post a Comment