சொல்லுக சொல்லை – சொல்லின் மகத்துவம் சொல்லும் கதை!
“சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லும் சொல் இன்மை அறிந்து.”
என்கிறார்
திருவள்ளுவர்.
ஒவ்வோர்
இடத்திலும் நம் கருத்தைச் சொல்வதற்கான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து சரியான வார்த்தையாகச்
சொல்லும் போது அதனுடைய பயன் வெகு சிறப்பாக அமைகிறது.
இதை
உணர்த்தும் வகையிலான கதை ஒன்றை அறிவோமா?
ஒரு
வங்கியில் காசாளரிடமிருந்து நூறு ரூபாய் கட்டை வாங்கிய வாடிக்கையாளர் ஒருவருக்கு ஒரு
தாள் குறைவது போல இருந்தது. அதனால் மீண்டும் ஒரு முறை பணம் எண்ணும் இயந்திரத்தில் எண்ணித்
தருமாறு காசாளரிடம் கேட்டார் அவர்.
உடனே
காசாளர் கோபமாக, என்ன ஒரு தாள் குறைவது போல இருக்கிறதா? இப்படித்தான் ஒரு நாளைக்கு
பத்து பேர் சொல்கிறார்கள். நன்றாக எண்ணிப் பாருங்கள். எண்ணிக்கை சரியாக இருக்கும்.
இது ரொம்ப முக்கியமான அலுவலக நேரம். மீண்டும் எண்ணித் தருவதெல்லாம் இப்போது முடியாது.
மற்ற வாடிக்கையாளர்கள் காத்திருக்கிறார்கள் பாருங்கள் என்றார்.
உடனே
பணத்தை வாங்கியவர், இல்லை ஐயா! ஒரு தாள் கூடுதலாக இருப்பது போல இருக்கிறது என்றார்.
உடனே
பதற்றமான காசாளர் அவரிடமிருந்து பணக் கட்டை வேகமாக வாங்கி இயந்திரத்தில் இரு முறையும்,
கையால் ஒரு முறையும் எண்ணிப் பார்த்தார். ஒரு தாள் குறைவாக இருந்தது. அவரிடம் மன்னிப்புக்
கேட்டுக் கொண்டு பணக் கட்டோடு ஒரு நூறு ரூபாய் தாளை அவரிடம் தந்தார்.
இந்த
இடத்தில் அந்த வாடிக்கையாளர் மீண்டும் ஒரு முறை எண்ணித் தருமாறு காசாளரிடம் வாக்குவாதத்தில்
ஈடுபட்டிருக்கலாம். சண்டை கூட போட்டிருக்கலாம். ஆனால் அவர் பயன்படுத்திய வார்த்தை இருக்கிறதே,
அதாவது ஒரு தாள் கூடுதலாக இருக்கிறது என்ற வார்த்தை, அது அவருடைய வேலையை எவ்வளவு எளிதாகச்
செய்ய வைத்து விட்டது. இப்படி சூழ்நிலைக்கு ஏற்றவாறு வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து
பயன்படுத்தும் போது ஆகாத காரியம் என்று எதுவும் இருக்கிறதா? ஆகவே தேவையான இடத்தில்
சரியான வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள். ஒரு சொல்லை வெல்லும் இன்னொரு சொல் இல்லை என்பதை
அறிந்து வெற்றிக்கு உதவும் வெற்றிகரமான வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள். வாழ்க்கையில்
எதிலும் வெல்லுங்கள்.
இக்கதை
உங்களுக்குப் பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். இது போன்ற பயனுள்ள கதைகளுக்குத்
தொடர்ந்து இணைந்திருங்கள்.
நன்றி!
வணக்கம்!
*****
No comments:
Post a Comment