Monday, 13 January 2025

பப்பெட் வழியில் முதலீடு செய்ய பத்து விசயங்கள்!

பப்பெட் வழியில் முதலீடு செய்ய பத்து விசயங்கள்!

முதலீட்டு உலகில் வாரன் பப்பெட்தான் பலருக்கும் ஆதர்சம். பப்பெட் எப்படி பப்பெட் ஆனார் என்பதற்கான பக்காவான பத்து வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றை முதலீட்டுக்கான விதிமுறைகள் என்றே சொல்லலாம். அவற்றை ஒவ்வொன்றாகக் காண்போமா?

1. புரிந்து கொண்டு முதலீடு செய்தல் :

உங்களுக்குப் புரிந்த விசயங்களில் மட்டுமே முதலீடு செய்யுங்கள். புரியாத விசயங்களில் முதலீடு செய்யாதீர்கள்.

2. நீண்ட காலமுதலீட்டில் கவனம் வைத்தல் :

முதலீடு என்பதே நீண்ட காலத்துக்கானதுதான். குறுகிய கால முதலீடு என்பது ஒரு நேரத்தில் சூதாட்டமாக மாறி விடும்.

3. சரியான முதலீடுகளைத் தேர்வு செய்தல் :

எந்த ஒரு முதலீட்டையும் நீண்ட காலத்தில் எப்படி வளரும்? எப்படி லாபம் தரும்? என்பதை ஆராய்ந்து அதற்கேற்றபடி தேர்வு செய்து முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்.

4. பொறுமையோடும் ஒழுங்கோடும் இருத்தல் :

குழந்தை பிறந்த உடனே பெரியவராகி விடாது. விதை விதைத்த உடனே மரமாகி விடாது. முதலீடும் அப்படியே. அது பெரியதாக வளரும் வரை பொறுமையாக இருக்க வேண்டும். முதலீட்டை ஓர் ஒழுங்கோடு பராமரிக்க வேண்டும்.

5. உள்ளார்ந்த மதிப்பை அறிதல் :

சந்தையின் மதிப்பை வைத்து ஒரு பொருளின் மதிப்பைத் தீர்மானித்து விடக் கூடாது. கத்தரிக்காயின் விளைச்சல் அதிகரித்தால் விலை குறையும். விளைச்சல் குறைந்தால் விலை அதிகரிக்கும். இந்த இரண்டு விலையும் கத்தரிக்காயின் விலை கிடையாது. கத்தரிக்காய்க்கு என்று கொடுக்க வேண்டிய ஒரு விலை இருக்கிறது இல்லையா? அதுதான் அதன் உள்ளார்ந்த மதிப்பு. இந்த மதிப்பை அறிந்து அதற்கேற்ப முதலீடு செய்ய வேண்டும்.

6. விலை இறக்கத்தின் போது பொறுமையாக இருத்தல் :

தங்கமே ஆனாலும் ஒரு காலத்தில் கடுமையான விலை வீழ்ச்சியைச் சந்திக்கும். அப்போது விலை இறங்கி விட்டதே என நினைத்து இருக்கும் தங்கத்தை எல்லாம் விற்று விடக் கூடாது. மாறாக, தங்கத்தை வாங்குவதற்கு அதுவே அருமையான சந்தர்ப்பம் என்பதைப் புரிந்து கொண்டு தங்கத்தை வாங்கிக் குவிக்க வேண்டும்.

7. பணப்புழக்கம் மற்றும் லாபத்தைக் கவனித்தல் :

நீங்கள் எந்த ஒன்றில்முதலீடு செய்ய நினைத்தாலும் அதன் பணப்புழக்கத்தையும் அதில் கிடைக்கும் லாபத்தையும் கவனிக்க வேண்டும். வீட்டுமனை விற்பனை மந்தமாக உள்ள இடத்தில் இடத்தை வாங்கிப் போட்டு விட்டு, அதை விற்க முடியாமல் தடுமாறுவதும், கொல்லன் தெருவில் போய் ஊசி விற்று லாபம் பார்க்க முடியவில்லை என்று அல்லாடுவதும் கூடாது.

8. அதிகக் கடன் என்றால் தவிர்த்து விடுங்கள் :

அதிகக் கடன் உள்ள நபர்களோடு அல்லது நிறுவனங்களோடு தொடர்பு வைத்துக் கொள்ளாதீர்கள். அவர்களை நம்பி முதலீடும் செய்யாதீர்கள்.

9. பிரித்து முதலீடு செய்யுங்கள் :

உங்களிடம் இருக்கும் மொத்த பணத்தையும் வீட்டுமனையில் மட்டுமே முதலீடு செய்யாதீர்கள். எப்போது வேண்டுமானாலும் வீட்டுமனைகளின் விலை வீழ்ச்சி அடையலாம். அதே போல, தங்கத்தில் மட்டும் முதலீடு செய்யாதீர்கள். பங்குகளில் மட்டும் முதலீடு செய்யாதீர்கள். கடன் பத்திரங்களில் மட்டும் முதலீடு செய்யாதீர்கள். ஏனென்றால், எப்போது வேண்டுமானாலும் இவற்றின் விலை வீழ்ச்சி அடையலாம். கலந்து முதலீடு செய்யுங்கள். ஒன்றில் விலை வீழ்ச்சி அடைந்தாலும் மற்றவற்றில் முதலீடு உங்கள் மதிப்பைக் குறையாமல் காப்பாற்றும்.

10. கற்றுக் கொண்டே இருங்கள் :

சிறந்த முதலீட்டாளராக இருக்க விரும்பினால் நீங்கள் தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். அரசாங்கத்தின் பொருளாதா முடிவுகள், நிதிச் சந்தையின் போக்குகள், புதுப்புது முதலீடுகள் என்று எல்லாம் மாறிக் கொண்டே இருக்கும். இவற்றின் மாற்றங்களைப் புரிந்து கொண்டு முதலீட்டு உலகில் நீங்கள் சக்கரவர்த்தியாக நீடிக்க வேண்டுமென்றால் நீங்கள் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.

பப்பெட் வழியில் முதலீடு செய்ய உங்களுக்குத் தேவையான பத்து விசயங்கள் இவைதான். இவற்றைப் புரிந்து கொண்டு முதலீடு செய்தால் நீங்களும் பப்பெட் ஆகி விடலாம்.

No comments:

Post a Comment