எத்தனை வங்கிக் கணக்குகள் வைத்துக் கொள்ளலாம்?
ஒருவருக்கு
ஒரு வங்கிக் கணக்கே போதுமானது. அப்போதுதான் தனது வங்கிக் கணக்கை நிர்வகிப்பது அவருக்கு
எளிதாக இருக்கும். இந்த வங்கிக் கணக்கையே சம்பளம் வாங்குவதற்கான வங்கிக் கணக்காகவும்
வைத்துக் கொள்ளலாம்.
இருப்பினும்
மாறி வரும் இக்கால சூழ்நிலையில் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளையும் ஒருவர் வைத்துக்
கொள்ளலாம். அப்படி எத்தனை வங்கிக் கணக்குகள் வைத்துக் கொள்ளலாம் என்று கேட்கிறீர்களா?
அதற்கான பதிலைத்தான் இங்கே பார்க்க இருக்கிறோம்.
ஒருவர்
சம்பள வங்கிக் கணக்குத் தவிர, தான் பணியாற்றும் பகுதிக்கு அருகில் உள்ள வங்கியில் இரண்டாவதாக
ஒரு கணக்கை வைத்துக் கொள்ளலாம். இதனால் பணியாற்றும் இடத்தில் அவசரமாகப் பணம் எடுப்பது,
செலுத்துவது மற்றும் இன்னபிற வங்கி சார்ந்த சேவைகளைப் பெறுவது எளிதாக இருக்கும். இந்த
வங்கிக் கணக்கையே அவசரகால வங்கிக் கணக்காகவும் வைத்துக் கொண்டு, இக்கணக்கிற்குப் பணம்
எடுக்கு அட்டை (ஏடிஎம் அட்டை), ஜிபே, இணைய வசதி போன்றவற்றை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
பணியாற்றும்
இடமும், வசிக்கும் வீடும் வேறு வேறு இடங்களில் இருக்கும் போது வீட்டிற்கு அருகில் இருக்கும்
வங்கியில் மூள்றாவதாக ஒரு வங்கிக் கணக்கும் வைத்துக் கொள்ளலாம். இதற்கும் பணம் எடுக்கும்
அட்டை (ஏடிஎம் அட்டை), ஜிபே, இணையவசதி போன்றவற்றை வைத்துக் கொண்டு வீட்டுக் கணக்குத்
தொடர்பான பரிவர்த்தனைகளை இதில் செய்து கொள்ளலாம். இணையரின் பொறுப்பில் கூட இவ்வங்கிக்
கணக்கை ஒப்படைத்து, இருவருமாக இதைப் பயன்படுத்தலாம். அதற்கேற்ப கூட்டு வங்கிக் கணக்காகக்
(Joint Account) கூட இவ்வங்கிக் கணக்கை வைத்துக் கொள்ளலாம். பணிக்குச் செல்லாத நாட்களில்
ஏதேனும் பணப் பரிமாற்றங்கள் செய்ய வேண்டுமானால் வீட்டிற்கு அருகில் உள்ள இந்த வங்கிக்
கணக்கைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆக ஒருவருக்கு,
1. சம்பள வங்கிக் கணக்கு,
2. பணியாற்றும் இடத்திற்கு அருகில் உள்ள வங்கியில்
ஒரு வங்கிக் கணக்கு,
3. வீட்டுக்கு அருகே உள்ள வங்கியில் ஒரு வங்கிக்
கணக்கு
என மூன்று
வங்கிக் கணக்குகள் போதுமானது.
அதற்கு
மேல் வைத்துக் கொள்ளக் கூடாதா என்றால், வைத்துக் கொள்ளலாம். அதற்கான குறைந்தபட்ச இருப்புத்
தொகையை நீங்கள் பராமரிக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு கணக்கிற்கும் வருடாந்திர கட்டணம்,
குறுஞ்செய்தி கட்டணம், பராமரிப்புக் கட்டணம் என்று வங்கிக் கட்டணங்களை ஆண்டுக்கு ஒருமுறையோ
அல்லது காலாண்டுக்கு ஒரு முறையோ செலுத்த வேண்டியிருக்கும். அது வீண்கட்டணம்தானே?
ஆக,
எத்தனை வங்கிக் கணக்குகளை வைத்துக் கொள்ளலாம் என்று உங்கள் தேவையைக் கருத்தில் கொண்டு
யோசித்து, ஒரு நல்ல முடிவை எடுங்கள். தேவையில்லாத வங்கிக் கணக்குகளை முடித்துக் கொள்ளுங்கள்.
*****
No comments:
Post a Comment