Friday, 24 January 2025

மனிதர்கள் பலவிதம்! ஒவ்வொருவரும் ஒரு விதம்! – மனித குணாதிசயம் குறித்த கதை!

மனிதர்கள் பலவிதம்! ஒவ்வொருவரும் ஒரு விதம்! –

மனித குணாதிசயம் குறித்த கதை!

சிலருக்கு என்னதான் உதவி செய்தாலும் அதை ஓர் உதவியாகவே எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அதிலும் குறை காண்பார்கள். ஏன் இப்படி என்றால் மனித மனம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி. அதை விளக்கும்படியான கதை ஒன்றை அறிவோமா?

ஒரு சிறுவன் ஒரு நடைபாதைக் கடை போட்டான்.

எந்தப் பொருள் எடுத்தாலும் ஐந்து ரூபாய் என்று கடைக்குப் பலகையும் வைத்தான்.

மாலையிலிருந்து இரவு முழுவதும் வியாபாரம் செய்வான்.

அந்தச் சிறுவனைப் பார்த்த நல்ல மனிதர் ஒருவர், படிக்கின்ற வயதில் இப்படி கடினமாக உழைக்கிறாயே என்றார்.

அந்தச் சிறுவன் தான் பள்ளி முடித்து மாலை நேரத்தில் படிப்புச் செலவுக்காக இப்படி நடைபாதைக் கடை நடத்துவதாகக் கூறினான்.

அந்த நல்ல மனிதருக்கு அந்தச் சிறுவன் மேல் தனிமதிப்பு வந்து விட்டது. அவனிடம் ஐந்து ரூபாய் கொடுத்து விட்டு, அவனை ஊக்கப்படுத்திப் பாராட்ட வேண்டும் என்ற நோக்கில் எந்த பொருளும் வாங்காமல் சென்று விட்டார். அன்றிலிருந்து அந்த மனிதர் எப்போது அந்தப் பகுதிக்கு வந்தாலும் அந்தச் சிறுவனிடம் ஐந்து ரூபாய் கொடுத்து விட்டு எந்தப் பொருளும் வாங்காமல் செல்வதை வழக்கமாக வைத்துக் கொண்டார்.

இதை அடிக்கடி கவனித்த அந்தச் சிறுவனின் நண்பன் அந்த மனிதரைப் பற்றி எவ்வளவு பெரிய நல்ல மனிதராக இருக்கிறார் என்று பெருமையாகப் புகழ்ந்து சொன்னான்.

அதைக் கேட்ட அந்தச் சிறுவன், ஆமாம் பெரிய நல்ல மனிதர் போ என்று சலிப்புடன் கூறினான்.

அவன் சலிப்புக்குக் காரணம் புரியாமல் அந்த நண்பன் கேட்ட போது, அந்தச் சிறுவன் சொன்னான், அப்போது எந்தப் பொருள் எடுத்தாலும் ஐந்து ரூபாய் என்று கடை போட்டேன். ஐந்து ரூபாய் கொடுத்தார் நியாயம். இப்போது எந்தப் பொருள் எடுத்தாலும் பத்து ரூபாய் என்றல்லவா கடை போட்டிருக்கிறேன். இப்போது பத்து ரூபாய் கொடுப்பதுதானே நியாயம். இன்னும் பழையபடியே ஐந்து ரூபாயே கொடுத்து விட்டுப் போகிறாரே என்றான்.

எப்படி இருக்கிறது இந்தக் கதை?

இப்படியும் நாட்டில் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்னதான் உதவி செய்தாலும் அதன் தாத்பர்யத்தைப் புரிந்து கொள்ள அவர்களால் முடியாது. அவர்களின் மனதில் இந்த உலகை எப்படிப் பார்க்கிறார்களோ அப்படித்தான் எல்லாவற்றையும் பார்ப்பார்கள்.

இதைத்தான் திருவள்ளுவர்,

“நன்றாற்றல் உள்ளும் தவறுண்டு அவரவர்

பண்பறிந்து ஆற்றாக் கடை.”

என்று சொல்கிறாரோ!

இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். இது போன்ற பயனுள்ள கதைகளுக்குத் தொடர்ந்து இணைந்திருங்கள்.

நன்றி!

வணக்கம்!

*****

No comments:

Post a Comment