Saturday, 4 January 2025

உங்களை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்! – விழிப்புணர்வூட்டும் கதை

உங்களை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்!

– விழிப்புணர்வூட்டும் கதை

நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அதை புரிந்து கொள்ளுங்கள். உங்களை நீங்களே ஏற்றுக் கொள்ளுங்கள். இன்னொருவரைப் பார்த்து அவரைப் போல இருக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். மனிதர்கள் ஒருவரைப் போல இன்னொருவர் இருக்க செராக்ஸ் பிரதிகளா என்ன?

இதை விளக்கும்படியான கதை ஒன்றைத் தெரிந்து கொள்வோமா?

காகம் ஒன்றுக்குத் தான் கருப்பாக இருப்பது குறித்த வருத்தம் இருந்தது.

அந்த வருத்தத்துத்துடன் அது கொக்கைப் பார்த்தது.

அது வெள்ளையாக அழகாக இருந்தது.

தன் வருத்தத்தைக் கொக்கிடம் பகிர்ந்து கொண்டது காகம்.

அதற்கு அந்த கொக்கு சொன்னது, தான் வெள்ளையாக இருப்பதால் கறை படிந்தால் கஷ்டமாக இருக்கிறது, வெள்ளையாக இருப்பதால் வேட்டைக்காரர்கள் குறி வைப்பதற்கும் வசதியாக இருக்கிறது என்று.

அடுத்ததாகக் காகம் வண்ணத்தோகை கொண்ட மயிலைப் பார்த்தது. பளபள தோகையோடு அந்த மயில் மிக அழகாக இருந்தது. அதனிடமும் தான் கருப்பாக இருப்பதன் வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டது காகம்.

அதற்கு அந்த மயில், தோகைக்காக மனிதர்கள் தன்னை வேட்டையாடுவதை வருத்தத்துடன் காகத்திடம் பகிர்ந்து கொண்டது.

அடுத்ததாகக் காகம் ஐந்து வண்ணங்களைக் கொண்ட பஞ்ச வர்ணக் கிளியைப் பார்த்தது. ஆகா இத்தனை வண்ணங்களோடு எத்தனை அழகு என்று அதனைப் பார்த்து வியந்தது காகம். அதனிடமும் தன்னுடைய வருத்தத்தைச் சொன்னது காகம்.

அதற்கு அந்த பஞ்சவர்ணக் கிளி, பல வண்ண அழகுக்காகத் தன்னைப் பிடித்துக் கூண்டில் அடைத்து மனிதர்கள் சிறைப்படுத்துவதை வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டது.

அப்போதுதான் காகம் தன்னுடைய தனித்துவத்தைப் புரிந்து கொண்டது. தான் கருப்பாக இருப்பதால் சுதந்திரமாக இருப்பதையும், வேட்டைக்காரர்களின் தொந்தரவு இல்லாமல் இருப்பதையும், மக்கள் கூண்டில் அடைக்காமல் இருப்பதையும் நினைத்தது. ஆகவே தன்னுடைய தனித்துவத்தைக் குறையாக நினைத்தக் கொள்ள வேண்டியதில்லை என்பதைப் புரிந்து கொண்டது. இன்னொருவருடைய தனித்துவத்தை நினைத்தோ, ஒப்பிட்டோ கவலையோ, தாழ்வுணர்வோ கொள்ள வேண்டியதில்லை என்பதை அந்தக் காகம் இப்போது புரிந்து கொண்டது.

ஆகவே மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அந்தத் தனித்துவத்தைப் புரிந்து கொண்டால் அமைதியாகவும் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் இருக்கலாம். தனித்துவத்தைப் புரிந்து கொள்ளாத மனிதர்கள் கருப்பாக இருப்பதாகக் கவலைப்படும் காகத்தைப் போலக் கவலைப்பட்டு நிம்மதி இழக்கிறார்கள்.

ஆகவே, நீங்கள் அவரைப் போல இருக்க வேண்டும், இவரைப் போல இருக்க வேண்டும் என்றெல்லாம் நினைத்துக் குமைந்து போகாதீர்கள். நீங்கள் அவரைப் போல இருக்க வேண்டும் என்றால் நீங்கள் அவராகவே படைக்கப்பட்டிருக்கலாமே, நீங்கள் ஏன் நீங்களாகப் படைக்கப்பட்டிருக்க வேண்டும்?

ஆகவே நீங்கள் எப்படி படைக்கப்பட்டு உள்ளீர்களோ அதை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களிடமிருந்து ஒரு தனித்துவம் வெளிப்படுவதை ரசித்து வெளிப்படுத்துங்கள். இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவரும் உன்னதமானவர்களே. யாரும் யாருக்கும் தாழ்ந்தவர்களும் இல்லை, உயர்ந்தவர்களும் இல்லை.

இந்தக் கதை உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். இது போன்ற பயனுள்ள கதைகளுக்குத் தொடர்ந்து இணைந்திருங்கள்.

நன்றி! வணக்கம்!

*****

No comments:

Post a Comment