Friday, 10 January 2025

உலகத்தைப் புரிந்து கொள்ள முடியுமா? – உங்களுக்காகவே ஒரு கதை!

உலகத்தைப் புரிந்து கொள்ள முடியுமா? –

உங்களுக்காகவே ஒரு கதை!

ஓர் ஊரில் முனிவர் ஒருவர் இருந்தார்.

அவரைப் பார்க்க நான்கு பேர் வந்தார்கள்.

அவர்களுக்கு ஒரு சந்தேகம்.

அந்தச் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளவே முனிவரிடம் வந்தார்கள்.

இந்த உலகத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லையே. அதை எப்படி புரிந்து கொள்வது என்று தங்கள் சந்தேகத்தை முனிவரிடம் கேட்டார்கள்.

முனிவர் தனக்குத் தெரியவில்லை என்று பொட்டில் அடித்தாற் போல பதில் சொல்லி விட்டார்.

மிகப் பெரிய முனிவரான உங்களுக்கு எப்படி விடை தெரியாமல் இருக்கும் என்று அந்த நான்கு பேரும் கேட்டார்கள்.

அதற்கு அந்த முனிவர் இதற்கு உங்களுக்குப் பதில் தெரிய வேண்டும் என்றால் உங்கள் நான்கு பேரையும் புஷ்பக விமானத்தில் அழைத்துச் செல்கிறேன். போகிற வழியில் நீங்கள் சில காட்சிகளைப் பாருங்கள். அதைப் பற்றி உங்களுடைய கருத்தைச் சொல்லுங்கள். உங்கள் கருத்து சரியாக இருந்தால் நீங்கள் புஷ்பக விமானத்தில் இருக்கலாம். தவறாக இருந்தால் புஷ்பக விமானத்திலிருந்து கீழே விழுந்து விடுவீர்கள் என்றார்.

நான்கு பேரும் அதை ஏற்றுக் கொண்டு முனிவருடன் புஷ்பக விமானத்தில் ஏறினர்.

அவர்கள் போகிற வழியில் தன் குட்டிகளுடன் பசியோடு இருக்கும் புலி ஒன்றைக் கண்டனர். அந்தப் புலி தன் குட்டிகளின் பசியைத் தீர்ப்பதற்காகத் தீவிரமாக இரை தேடிக் கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் தாகத்தால் தவித்த மான் ஒன்று தன் தாகத்தைத் தீர்த்துக் கொள்ள தன் குட்டிகளோடு அந்தப் பக்கமாக வந்து கொண்டிருந்தது. மானைப் பார்த்த புலி அதை அடித்துக் கொன்றது. அந்த மானை இரையாக தன் குட்டிகளுக்குக் கொடுத்தது.

இந்தக் காட்சியைக் காட்டிய முனிவர் அது பற்றிய கருத்தைக் கேட்டார்.

உடனே ஒருவர் இது மிகவும் தவறானது. இப்போது மான் குட்டிகளுக்கு தாய் இல்லாமல் போயிற்றே என்றார்.

உடனே அவர் புஷ்பக விமானத்திலிருந்து கீழே விழுந்தார்.

இப்போது முனிவர் இரண்டாம் ஆளைப் பார்த்து அவரது கருத்தைக் கூறுமாறு கேட்டார்.

முதல் ஆள் கீழே விழுந்ததைப் பார்த்து சுதாரித்துக் கொண்ட அவர் இது மிகவும் சரியானது. புலிகளுக்கு இரையாகத்தானே மான்கள் இருக்கின்றன என்றார்.

உடனே அவர் புஷ்பக விமானத்திலிருந்து கீழே விழுந்தார்.

இப்போது மூன்றாவது ஆளைப் பார்த்து முனிவர் அவரது கருத்தைக் கேட்டார்.

இரண்டு ஆட்கள் கீழே விழுந்ததைப் பார்த்து சுதாரித்துக் கொண்ட அவர் இது சரியும் இல்லை, தவறும் இல்லை என்றார்.

உடனே அவரும் புஷ்பக விமானத்திலிருந்து கீழே விழுந்தார்.

இப்போது கடைசி ஆளைப் பார்த்து முனிவர் கருத்து கேட்டார்.

அவர் எனக்குத் தெரியவில்லை என்றார்.

அவர் புஷ்பக விமானத்திலிருந்து கீழே விழவில்லை.

இப்போது முனிவர் இந்த உலகில் பல விசயங்கள் இருக்கின்றன. தெரியாத விசயங்களுக்குத் தெரியாது என்று பதில் சொல்வதுதான் சிறந்தது. சாமர்த்தியமாகப் பதில் சொல்வதாக நினைத்துத் தெரியாத கேள்விகளுக்குப் பதில் சொல்லி சிக்கலில் சிக்கிக் கொள்ள வேண்டியதில்லை என்றார்.

அந்த நான்காமவர் இப்போது புரிந்து கொண்டார்.

உங்களுக்குப் புரிந்ததா?   

இந்த உலகத்தை இப்போது புரிந்து கொள்ள முடிகிறதா?

புரிந்து கொள்ள முடிந்தால் உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்.

இது போன்ற பயனுள்ள கதைகளுக்குத் தொடர்ந்து இணைந்திருங்கள்.

நன்றி! வணக்கம்!

*****

No comments:

Post a Comment