Friday, 17 January 2025

பணிவே அழகு – பணிவின் பெருமையை விளக்கும் கதை!

பணிவே அழகு – பணிவின் பெருமையை விளக்கும் கதை!

ஒரு மனிதருக்கு எது அழகு என்று கேட்டால் எதைச் சொல்வீர்கள்?

பணம்தான் அழகா? எவ்வளவுதான் பணம் இருந்தாலும் பணிவுதான் அழகு.

வீரம்தான் அழகா? என்னதான் வீரம் இருந்தாலும் பணிவுதான் அழகு.

அறிவுதான் அழகா? எவ்வளவுதான் அறிவு இருந்தாலும் பணிவுதான் அழகு.

பணிவைப் போன்ற அழகு இந்த உலகில் எதுவுமில்லை. அதனால்தான் திருவள்ளுவர், ‘எல்லார்க்கும் நன்றாம் பணிதல்’ என்கிறார். பணிவுடையன் இன்சொலன் ஆதலே அணி என்றும் கூறுகிறார்.

பணிவுக்கு எதிரானதுதான் ஆணவம்.

ஆசைப்படுவதைக் கூட மனிதர்கள் ஒத்துக் கொள்வார்கள். தாம் ஆணவமாக இருக்கிறோம் என்பதை எந்த மனிதரும் ஒத்துக் கொள்ள மாட்டார்.

பிறப்பதற்கும் இறப்பதற்கும் இடையே வாழ்வது சில காலம். இந்த சில காலத்தில் எதற்கு ஆணவம்? எதற்கு கர்வம்? எதற்கு அகந்தை? வல்லவனுக்கு வல்லவன் பூமியில் உண்டு அல்லவா! இதை விளக்கும்படியான கதை ஒன்று.

ஓர் ஊரில் மெத்த படித்த மேதாவி ஒருவர் இருந்தார். பல நூல்களை அவர் படித்திருந்தார். அந்த ஊரில் எந்த சந்தேகம் என்றாலும் அவரிடம் கேட்பதை அவ்வூர் மக்கள் பெருமையாகக் கருதினர். இதனால் அவருக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணம் ஏற்பட்டு விட்டது. தனக்குத் தெரியாத விசயங்களே இந்த உலகில் இல்லை என்று நினைத்துக் கொண்டார்.

இந்த எண்ணம் அவருக்கு அறிவுச் செருக்கையும் உண்டாக்கி விட்டது. இந்த அறிவுச் செருக்கினால் அவர் பார்ப்போரிடமெல்லாம் பதில் தெரியாத கேள்விகளைக் கேட்பதை ஒரு வழக்கமாக்கிக் கொண்டார். இவர் கேள்வி கேட்டு எதிரில் இருப்போர் பதில் தெரியாமல் விழிப்பதைப் பெருமையாகவும் கருத ஆரம்பித்து விட்டார்.

அவரது அறிவாற்றலை அறிந்த பலரும் அவரை பல ஊர்களிலும் அழைத்துப் பேச செய்தனர். அப்படி ஒரு முறை வெளியூரில் இரவு நேரத்தில் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென மின்சாரம் நின்று விட்டது.

எங்கும் ஒரே இருட்டு. அப்போது ஒரு சிறுமி ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றிக் கொண்டு வந்தாள். அந்தச் சிறுமியைக் கேள்வி கேட்டு விழிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தார் அந்த மேதாவி மனிதர்.

அந்தச் சிறுமியிடம் இருட்டாக இருந்த இடத்தில் நீ மெழுகுவர்த்தியை ஏற்றினாய். வெளிச்சம் வந்தது. இந்த வெளிச்சம் எங்கிருந்து வந்தது என்று கேட்டார்.

உடனே அந்தச் சிறுமி அந்த மெழுகுவர்த்தியை ஊதி அணைத்து விட்டாள். இப்போது அந்த மேதாவியைப் பார்த்து, மெழுகுவர்த்தியை ஏற்றியதும் வெளிச்சம் வந்தது. இப்போது அணைத்ததும் வெளிச்சம் போய் விட்டது.  அந்த வெளிச்சம் எங்கே போனது என்று கேட்டாள் அந்தச் சிறுமி.

மேதாவி திகைத்து விட்டார். என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழிக்க ஆரம்பித்து விட்டார்.

அப்போதுதான் இந்த உலகில் தனக்குத் தெரியாத விசயங்களும் இருக்கின்றன என்பதை அவர் உணர்ந்து கொண்டார்.

தனக்கு எல்லாமும் தெரியும் என்ற ஆணவத்தில் மற்றவர்களைப் புண்படுத்துவது தவறு என்பதைப் புரிந்து கொண்டார்.

கற்றது கை மண் அளவு, கல்லாதது உலக அளவு என்பதையும் தெளிந்து கொண்டார்.

இந்தக் கதை பணிவுதான் மனிதருக்கு அழகு என்பதை உணர்த்துகிறது அல்லவா.

இது போன்ற பயனுள்ள கதைகளுக்குத் தொடர்ந்து இணைந்திருங்கள்.

நன்றி!

வணக்கம்!

*****

No comments:

Post a Comment