Saturday, 11 January 2025

ஏன் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதில்லை? – ஒரு சிறிய கதை!

ஏன் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதில்லை? – ஒரு சிறிய கதை!

ஏன் இந்த உலகில் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதில்லை என்று நீங்கள் யோசித்திருக்கிறீர்களா?

கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றாமல் ஏமாற்றுபவர்கள்தான் இந்த உலகில் எத்தனை எத்தனை?

ஏன் இப்படி ஒரு நிலைமை?

அதிலும் அரசியல்வாதிகள் இருக்கிறார்களே! அவர்கள் கொடுக்கும் வாக்குறுதிகளைத் தண்ணீரில்தான் எழுத வேண்டும்.

ஏன் அப்படி என்கிறீர்களா? அதைப் புரிந்து கொள்ள நீங்கள் இந்தக் கதையைக் கேளுங்கள்.

ஓர் அரசியல்வாதி, தான் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் தேனாறும் பாலாறும் ஓடும் என்றார். மக்கள் தங்கத் தட்டில் சாப்பிடுவார்கள் என்றார். உழைக்காமலேயே சம்பாதிக்கலாம் என்றார். மாதந்தோறும் தேவையான பொருட்கள் அனைத்தும் வீடு தேடி வரும் என்றார்.

மக்களும் அவரது வாக்குறுதிகளை நம்பி அவரைத் தலைவராக்கினர்.

அவர் தலைவரானார்.

ஆனால், நாட்டில் தேனாறு ஓடவில்லை. பாலாறும் ஓடவில்லை. ஏற்கனவே நன்றாக ஓடிக் கொண்டிருந்த ஆறுகள் ஓடாமல் வறண்டு போனதுதான் மிச்சம்.

மக்களும் தங்கத் தட்டில் சாப்பிடவில்லை. வழக்கமாக சாப்பிடும் நெளிந்து போன அலுமினிய தட்டில்தான் கால் வயிற்றுக்கும் அரை வயிற்றுக்கும் சாப்பிட்டார்கள்.

மக்கள் என்னதான் உழைத்தாலும் வாழ்க்கையை ஓட்டுவதற்கேற்ப சம்பாதிக்கவும் முடியவில்லை. கையில் பத்து பைசாவைப் பார்ப்பது குதிரைக் கொம்பாக இருந்தது.

மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்க முடியாமல் அலைந்தனர். விலைவாசி அவ்வளவு அதிகமாக இருந்தது.

இப்போது அந்தத் தலைவரைப் பார்த்து அவரது அந்தரங்க செயலாளர் கேட்டார், ஐயா நீங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்னவோ நடக்கும் என்று வாக்குறுதி கொடுத்தீர்களே. அவற்றில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லையே என்று.

தலைவர் சிரித்தார். தனது அந்தரங்க செயலாளரைத்  தூண்டிலோடு மீன் பிடித்து வருவோம் வா என்று அழைத்துக் கொண்டு போனார்.

அவர்கள் இருவரும் தூண்டிலில் புழுக்களை மாட்டி ஏராளமான மீன்களைப் பிடித்தார்கள்.

இப்போது தலைவர் அந்தரங்க செயலாளரைப் பார்த்து, இப்போதுதான் மீன்களைப் பிடித்து விட்டோமே, இப்போது இந்தப் புழுக்களை மீன்களுக்கு உணவாகக் கொடுப்போமா எனக் கேட்டார்.

அதற்கு அந்தச் செயலாளர், இனி அந்த மீன்களுக்கு எதற்குப் புழுக்கள் என்றார்.

உடனே தலைவர், வாக்குறுதிகளும் அப்படித்தான். ஆட்சியைப் பிடிப்பதற்காகத்தான். ஆட்சியைப் பிடித்து விட்டால் அவற்றை ஏன் நிறைவேற்ற வேண்டும்? அப்படி நிறைவேற்றுவது என்பது தூண்டிலில் புழுக்களை மாட்டிப் பிடித்த மீன்களுக்கு புழுக்களை எடுத்து உணவாகக் கொடுப்பதைப் போன்றது என்றார்.

அந்தச் செயலாளர் புரிந்து கொண்டார்.

நீங்களும் புரிந்து கொண்டீர்கள்தானே?

இப்போது தெரிகிறதா? யாரும் கொடுத்த வாக்குறுதியை ஏன் நிறைவேற்ற மாட்டேன்கிறார்கள் என்று, அதுவும் அரசியல்வாதிகள் அறவே ஏன் நிறைவேற்ற மாட்டேன்கிறார்கள் என்று.

இக்கதை உங்களது புரிதலுக்குப் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம்.

இது போன்ற பயனுள்ள கதைகளுக்குத் தொடர்ந்து இணைந்திருங்கள். நன்றி. வணக்கம்.

*****

No comments:

Post a Comment