Tuesday, 12 May 2026

கின்ட்சுகி – விரிசல்களுக்கு ஒரு கோல்டன் டச்!

கின்ட்சுகி – விரிசல்களுக்கு ஒரு கோல்டன் டச்!

வாழ்க்கையில் ஏதாவது ஒன்று உடைந்து போனால் நாம் என்ன செய்வோம்? வேஸ்ட் என்று குப்பையில் போடுவோம். அல்லது பெவிகால் போட்டு ஒட்டிவிட்டு, அந்தத் தழும்பு தெரியாமல் இருக்கப் பெயிண்ட் அடிப்போம்.

ஆனால், ஜப்பானியர்கள் விசித்திரமானவர்கள். அவர்கள் உடைந்து போனதை மறைப்பதில்லை. மாறாக அதைத் தங்கத்தால் கொண்டாடுகிறார்கள். இதற்குப் பெயர் கின்ட்சுகி. ஜப்பானிய மொழியில் இதற்கு தங்கத்தால் இணைத்தல் என்று அர்த்தம்.

இந்தக் கின்ட்சுகி பற்றி அறிய நாம் பதினைந்தாம் நூற்றாண்டு ஜப்பானுக்குள் ஒரு காலப் பயணம் செய்ய வேண்டும்.

ஜப்பானின் பெரிய தளபதி ஒருவர், தான் ஆசையாக வைத்திருந்த சீனத் தேநீர்க் கோப்பை உடைந்ததும், அதைச் சரி செய்யச் சீனாவுக்கு அனுப்பினார். அவர்கள் அதை ஒரு மொக்கையான இரும்பு கம்பி வைத்து, எப்படியோ ஒட்டி அனுப்பினார்கள். அதைப் பார்த்த அந்தத் தளபதிக்குக் கோபம் வரவில்லை, ஓர் ஐடியா வந்தது.

அங்கேதான் உருஷி மரத்தின் பிசினையும், தங்கம் அல்லது வெள்ளிப் பொடியையும் கலந்து ஒட்டும் கலை பிறந்தது. உடைசல் என்பது அசிங்கமல்ல, அது அந்தப் பொருளின் வரலாற்றில் ஒரு முக்கியமான ஈவென்ட் என்று அவர்கள் கருதினார்கள்.

இதன் பின்னால் ஒரு பெரிய பிலாசபி இருக்கிறது. அதற்குப் பெயர் வாபி சாபி. அதன்படி,

உலகம் பெர்ஃபெக்ட் கிடையாது.

எதுவும் நிரந்தரம் கிடையாது.

குறைகள்தான் அழகு.

இன்று இன்ஸ்டாகிராமில் பில்டர் போட்டு நம் குறைகளை மறைத்துக் கொண்டிருக்கும் டிஜிட்டல் யுகத்தில், இந்த வாபி சாபி ஒரு முக்கியமான மெசேஜ் சொல்கிறது. உடைந்து போனதைச் சரி செய்வது என்பது அதன் பழைய வடிவத்தை மீட்டெடுப்பது அல்ல, ஒரு புதிய வடிவத்தை உருவாக்குவது.

இதை வைத்து தத்துவ அறிஞர்கள் ஒரு விசயத்தைச் சொல்கிறார்கள். வாழ்க்கையில் நாம் சந்திக்கிற தோல்விகளும், மனக்காயங்களும் கின்ட்சுகி மாதிரிதான். சிதறிப்போன துண்டுகளை எடுத்து மீண்டும் ஒட்டும்போது, அந்தத் தழும்புகள் தங்கம் போல மின்னும் என்கிறார்கள். அதாகப்பட்டது, தழும்புதான் அழகு என்கிறார்கள்.

இன்று இந்த நுட்பத்தை மனநல மருத்துவர்களும், டிசைனர்களும் ஒரு தெரபியாகப் பயன்படுத்துகிறார்கள். நம் வாழ்வின் விரிசல்களைச் சரி செய்ய முயலாமல், அவற்றை ஒரு புதிய படைப்பாகப் பார்க்கத் பழகினால் அதுவே ஒரு பெரிய ஹீலிங் என்பதுதான் இதன் பின்னுள்ள தத்துவம்.

இனிமேல் உடைந்த கண்ணாடித் துண்டுகளைப் பார்த்து அழாதீர்கள். உங்களிடம் கொஞ்சம் தங்கமும் அதாவது நம்பிக்கையும், உருஷி பிசினும் அதாவது பொறுமையும் இருந்தால், நீங்கள் பழையதை விட அழகான ஒரு புதிய மனிதராக மாற முடியும்.

ஆக, விசயம் இதுதான். தழும்புகளை மறைக்காதீர்கள். அவை உங்கள் வெற்றியின் அடையாளங்கள்!

*****

No comments:

Post a Comment