Friday, 22 May 2026

வீடும் விழுதுகளும் – ஒரு ஸ்லோமோஷன் பார்வை!

வீடும் விழுதுகளும் – ஒரு ஸ்லோமோஷன் பார்வை!

ஸ்லோ லிவ்விங் என்பது மெதுவாக நடப்பது, மெதுவாக வேலை செய்வது என்று நீங்கள் நினைப்பது போல ஸ்லோ சமாச்சாரம் அல்ல. அதன் பெயரில் ஸ்லோ என்ற சொல் இருந்தாலும், அது நிதானமான விவேகமான இயங்கியலைக் குறிப்பது.

இந்த அவசர யுகத்தில், பாஸ்புட் கலாச்சாரத்தில் இருக்கும் அந்த வேகம் இருக்கிறதே, அந்த வேகத்திற்கு குட்பை சொல்வதைத்தான் ஸ்லோ என்ற வார்த்தையால் இங்கே குறிப்பிடுகிறோம்.

இதை வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் கொண்டு வர வேண்டும்.

இப்போது வீட்டை எடுத்துக் கொள்வோம்.

வீடு என்பது வெறும் செங்கல், சிமெண்ட் கலவையல்ல. அது உங்கள் மனநிலையின் பிரதிபலிப்பு. உங்கள் லிவிங் ரூம் எதற்காக? டிவி பார்ப்பதற்கா அல்லது குடும்பத்துடன் பேசுவதற்கா? இதைக் கொஞ்சம் யோசித்து டிசைன் செய்யுங்கள் என்கிறது ஸ்லோ இன்டீரியர்ஸ்.

வீடு உங்களை அரவணைக்க வேண்டும். கண்ணைக் குத்தும் நிறங்களைத் தவிர்த்து, அமைதியான மியூட்டட் வண்ணங்களைத் தேர்ந்தெடுங்கள். தேவையற்ற பொருட்களைத் துடைத்து எறியுங்கள். அமைதியான ஓர் மூலை, மென்மையான சோபா  இதுதான் லேட்டஸ்ட் லக்சரி.

எதை வாங்கினாலும் ஆராய்ச்சி செய்யுங்கள். குறைவாக, ஆனால், நிறைவாக வாங்குங்கள். முடிந்தவரை செகண்ட்ஹேண்ட் பொருட்கள் அல்லது மறுசுழற்சி செய்யப்பட்ட பிராண்டுகளைத் தேடுங்கள். இருப்பதைப் பேணிக்காப்பதே ஒரு கலைதான்!

ஸ்லோ லிவிங் என்பது இப்போது அந்த வீட்டில் சும்மா உட்கார்ந்திருப்பது அல்ல. அது ஒரு நோக்கத்துடன் நேரத்தைச் செலவிடுவது. இந்த இடத்தில்தான் ஸ்லோ ஹாபி வருகிறது.

அதென்ன ஸ்லோ ஹாபி என்கிறீர்களா?

தோட்டம் அமைக்கலாம், பறவைகளை வேடிக்கை பார்க்கலாம். அல்லது ஓவியம், பின்னல் வேலை, தையல் என எதாவது ஒன்றில் மூழ்கலாம். யோகா, மெடிடேஷன், டைரி எழுதுவது என இந்த ஸ்லோ லிவ்விங்கிற்கான ஹாபி பட்டியல் நீளம்.

உதாரணத்துக்கு ஓவியம் தீட்டும் போது நீங்கள் வரையும் படம் மோனாலிசா ரேஞ்சுக்கு வர வேண்டும் என்பது அவசியமில்லை. அதை வரையும்போது உங்கள் மனது எந்த நிலையில் இருக்கிறது என்பதுதான் மேட்டர். முடிவுக்காக ஓடாமல், செய்கின்ற செயலை ரசித்தால் அதுவே ஸ்லோ ஹாபி.

எதையும் மெதுவாகக் கொண்டு செல்லுங்கள். அவசரம் காட்டாதீர்கள். இது காதலுக்கு மட்டுமல்ல, நண்பர்கள், குடும்பம், சக ஊழியர்கள் என எல்லா கனெக்சன்களுக்கும் பொருந்தும்.

முக்கியமான விஷயம் என்னவென்றால், உங்களுக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும், ஆதரவையும் தரும் உறவுகளுக்கு மட்டும் ரெட் கார்ப்பெட் விரித்து முன்னுரிமை கொடுங்கள். மற்ற நச்சு உறவுகளுக்கு ஒரு மென்மையான டாட்டா சொல்லிவிடுங்கள்.

வாழ்க்கை என்பது ஓர் எலக்ட்ரானிக் சர்க்யூட் போல. தேவையற்ற ரெசிஸ்டன்ஸ் இருந்தால் வேகம் குறையும், சூடாகும். நிதானமாக இருந்தால் சர்க்யூட் ஸ்மூத் ஆக இருக்கும்.

இதைப் பின்பற்றும் போது உங்கள் மனதில் மற்றும் வாழ்வில் நிகழும் மாற்றங்களைக் கொஞ்சம் சொல்லுங்களேன். அது மற்றவர்களுக்கும் உபயோகமாக இருக்கும்.

*****

No comments:

Post a Comment