நீலம் காத்து நிலம் காப்போம்!
உலகின் முதல் உயிர் கடலில்தான் சூல் கொண்டது.
கடலே உயிர்களின் அடிப்படை. கடலையும் அதில் வாழும் உயிர்களையும் பாதுகாப்பது உலகின்
ஒவ்வொரு உயிர்களையும் பாதுகாப்பது போன்றது.
கடல் இந்தப் பூமியின் முக்கால்வாசிப் பரப்பு.
ஆனால் மனிதன் அதை வெறும் மீன் தொட்டியாகவே பார்த்தான். பிடித்துச் சாப்பிடலாம் அல்லது
விற்றுப் பணம் பார்க்கலாம்.
இப்போது சீன் மாறுகிறது.
நேற்று வரை வலையோடு அலைந்தவர்கள் இன்று கேமராவோடும்
கொள்கைகளோடும் அலைகிறார்கள். வேட்டைக்காரர் காவல்காரர் ஆகும் விந்தை இது. இவர்களால்
கடலும் அங்கும் வாழும் உயிர்களும் பாதுகாக்கப்படுகிறது. ஆம், பூமியும் பாதுகாக்கப்படுகிறது.
ஸ்பீல்பெர்க்கின் ஜாஸ் படத்தில் வரும் கேப்டன்
குவின்ட் ஞாபகம் இருக்கிறதா? நிஜ வாழ்க்கையில் அவருக்கு இன்ஸ்பிரேஷன் பிராங்க் முண்டஸ்.
50 வருஷமாக மாண்டாக் கடலில் ராட்சத சுறாக்களை
வேட்டையாடியவர். ஆனால் கிளைமாக்ஸில் ஒரு ட்விஸ்ட். தன் வாழ்நாளின் இறுதியில் அவர் சுறாக்களைக்
காக்கப் போராடினார்.
தூண்டில் முள்ளை மாற்றுங்கள், சுறாக்களைக்
கொல்லாதீர்கள், எனப் பிரச்சாரம் செய்தார். ஆக்ரோஷமான ஒரு வேட்டைக்காரர் ஆக்கபூர்வமான
ஒரு பாதுகாவலராக மாறிய முதல் புள்ளி அவர்.
மடகாஸ்கரின் வெஸோ பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்
மிஷெல் ஸ்ட்ரோகோப். படிப்பு கிடையாது, கடல் தான் எல்லாமே. சுறாக்களையும் கடல் ஆமைகளையும்
வேட்டையாடித் தள்ளியவர், இன்று ஒரு வைல்ட் லைப் பிலிம் மேக்கர். வலைக்குப் பதில் லென்ஸ்.
கடல் இல்லாவிட்டால் நம் எதிர்கால சந்ததிக்கு எதுவுமே மிஞ்சாது, என்கிறார் மனிதர். பாயிண்ட்
சரிதான்.
இந்த மாற்றம் உலகெங்கும் ஒரு வைரஸ் போலப் பரவுகிறது.
இந்தோனேசியாவின் லோம்போக் தீவில் நேற்றைய சுறா
வேட்டைக்காரர்கள் இன்றைய கடல்சார் ஆசிரியர்கள்.
இத்தாலியின் புக்லியா பகுதியில் மீனவர்களே
சேர்ந்து ஒரு கடல் காப்பகத்தை உருவாக்கினார்கள். ஆச்சரியம் என்னவென்றால், பாதுகாப்பு
அதிகரித்ததும் அவர்களின் மீன்பிடி வருமானமும் கூடியது. இந்தக் கடல் எங்களுடையது, நாங்கள்
தான் இதன் காவலர்கள், என்கிறார் மீனவர்கள்.
செயிண்ட் பார்தலெமி தீவைச் சேர்ந்தவர் டிடியர்
லாப்லேஸ். 2011 இல் ஒரு படகு விபத்தில் சாவையும் வாழ்வையும் தொட்டுவிட்டு வந்தவர்,
தன் வாழ்க்கையை கோரல் எனப்படும் பவளப்பாறைகளை மீட்க அர்ப்பணித்தார். ஹோட்டல்கள், சொகுசுப்
படகுகள் என எல்லோரிடமும் போய் கடலை நேசியுங்கள், என்று பாடம் எடுக்கிறார்.
கடலைப் பற்றி ஏட்டுச் சுரைக்காய் படிக்கும்
விஞ்ஞானிகளை விட, கடலோடு வாழ்ந்த இந்த மீனவர்களுக்குத் தான் அதன் பல்ஸ் தெரியும். அவர்கள்
தான் பாலங்கள். வணிகத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் நடுவே இருக்கும் பாலங்கள்.
பச்சை ஆமை அழகானது. ஆனால், அதன் இறைச்சிக்காகவும்
முட்டைக்காகவும் நாம் அதை அழித்துக் கொண்டிருக்கிறோம். கடல் நேசகர்கள் மற்றும் காவலர்கள்
செய்யும் மாற்றம் மற்றவர்களுக்கும் வந்தால் தான் கடல் பிழைக்கும். நாமும் பிழைப்போம்.
கடலையும் கடல் வாழ் உயிரினங்களையும் பாதுகாப்பது
அவற்றை மட்டும் பாதுகாப்பதல்ல, நம்மையே நாம் பாதுகாப்பதாகும்.
கடல் இல்லையேல் பூமி உயிர்க்கோளமாக இருக்க
வாய்ப்பில்லை. பூமி உயிர்க்கோளமாக இல்லையேல், நமக்கும் இந்தப் பூமியில் வேலையில்லை.
உங்களால் முடிந்தது, கடலுக்கு ஒரு பாலிதீனை
அனுப்பாமல் இருங்களேன். நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பாலிதீனும் கால்வாய்கள், ஆறுகள்
என்று அடித்துச் செல்லப்பட்டுக் கடைசியில் கடலில்தான் சங்கமமாகின்றன.
ஒரே ஒரு பாலிதீன் உங்களால் இந்தக் கடலுக்குப்
போகாமல் இருந்தால், நீங்களும் கடலின் பாதுகாவலர்தான். ஆம், நிலத்தில் இருந்து கொண்டும்
உங்களால் கடலின் பாதுகாவலராக இருக்க முடியும்.
*****

No comments:
Post a Comment