Thursday, 30 April 2026

குட்டிச் சாத்தான்களும் மகா புரட்சிகளும்!

குட்டிச் சாத்தான்களும் மகா புரட்சிகளும்!

இதெல்லாம் உனக்கு எதுக்கு?போய் பாடத்தைப் படி – இது நம் ஊர் வீடுகளில் அடிக்கடி கேட்கும் வசனம்.

ஆனால், உலகம் முழுக்க சில சுட்டிகள் இந்தப் பொதுப்புத்தியை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களுக்கு டிரைவிங் லைசென்ஸ் கிடையாது, ஆனால் சமூக மாற்றத்திற்கான ஸ்டீயரிங் இவர்களிடம்தான் இருக்கிறது.

ஜெரோம் பாஸ்டர் வெள்ளை மாளிகையின் மிக இளவயது ஆலோசகர். இவர் செய்த காரியம் என்ன தெரியுமா? 80 வாரங்கள் தொடர்ந்து வெள்ளை மாளிகை வாசலில் நின்று பருவநிலை மாற்றத்திற்காகப் போராடினார். இன்று ஒபாமா முதல் கிரெட்டா துன்பெர்க் வரை இவரைத் தெரியும். ஒன் மில்லியன் ஆப் யுஎஸ் என்ற அமைப்பு மூலம் இளைஞர்களை ஓட்டுப் போடத் தூண்டுகிறார். புவி வெப்பமடைதல் என்பது ஏதோ தியரி அல்ல, அது நம் வீட்டு வாசல் வரை வந்துவிட்ட நிஜம்! அதற்கான முன்னெடுப்புகளை அவர் முன்னெடுக்கிறார்.

லிட்டில் மிஸ் பிளிண்ட் என்று அழைக்கப்படும் மேரி கோபெனிக்கு அப்போது எட்டு வயதுதான். தன் ஊர் குடிநீர் நச்சுத்தன்மையாக இருப்பதை எதிர்த்து அப்போதைய அதிபர் ஒபாமாவுக்குக் கடிதம் எழுதினார். விளைவு? அந்த ஊருக்கு 100 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கப்பட்டது. 7 லட்சம் டாலர் நிதி திரட்டி பல்லாயிரம் வாட்டர் பில்டர்களை வழங்கியிருக்கிறார்.

ஓரியன் ஜீன் என்பவர் டைம் இதழின் கிட் ஆப் தி இயர் விருது பெற்றவர். ஒரு பேச்சுப் போட்டியில் வென்ற 500 டாலரை வைத்து பொம்மைகளைத் தானம் செய்ய ஆரம்பித்தார். இன்று 5 லட்சம் புத்தகங்கள், 1 லட்சம் உணவுகள் என இவர் தொடங்கிய ரேஸ் டூ கைன்ட்னெஸ் ஒரு தேசிய இயக்கமாகவே மாறிவிட்டது. அன்பு என்பதும் ஒரு செயின் ரியாக்சன்தான் என்பதை நாம் முன்பே பார்த்திருக்கிறோம்.

ராபி நோவாக். இவரை கிட் பிரசிடென்ட் என்றுதான் உலகுக்குத் தெரியும். இவரது வீடியோவை 49 மில்லியன் பேர் பார்த்திருக்கிறார்கள். டாம் ஹாங்க்ஸுக்கே டான்ஸ் சொல்லிக்கொடுத்தவர். அரசியல் பேசலாம், ஆனால் மற்றவர் கருத்தைக் கேட்கும் மனப்பக்குவம் வேண்டும், என்கிறார் இந்த 21 வயது இளைஞர்.

மலாலா யூசுப்சாய் பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது. தற்போதும் பெண்கள் கல்விக்காக மலாலா பண்ட் மூலம் போராடிக்கொண்டிருக்கிறார்.

அதேபோல சிரியாவின் போர் அவலங்களை ஏழு வயதிலேயே ட்வீட் மூலம் உலகுக்குச் சொன்னவர் பனா அல்அபெத். போர்க்களத்தில் ஒரு சிறுமியின் குரல் அணுகுண்டை விட வலிமையானது.

இவர்களைப் போல எத்தனை எத்தனை சிறுவர்கள், சிறுமிகள், இளைஞர்கள், இளைஞிகள் மகா மாற்றங்களை முன்னெடுத்திருக்கிறார்கள் தெரியுமா?

ரியான் ஹிக்மேன் மூன்று வயதிலேயே ரீசைக்ளிங் கம்பெனி ஆரம்பித்தவர். 1.7 லட்சம் பவுண்டு குப்பைகளைச் சேகரித்து கடலில் சேராமல் தடுத்திருக்கிறார்.

பிரான்சிஸ்கா ட்ரௌட்மேன் நியூ ஆர்லியன்ஸ் நகர கண்ணாடி பாட்டில்களைக் கொண்டு கடற்கரை மணலை உருவாக்குகிறார். மணிக்கு 3000 பவுண்டு கண்ணாடி பாட்டில்களை மணலாக்கும் இவரது டெக்னாலஜி, கடற்கரை அரிப்பைத் தடுக்க உதவுகிறது.

இந்தச் சிறுவர்கள், சிறுமிகள் யாரும் நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று காத்திருக்கவில்லை. இவர்களிடம் அனுமதி கேட்கும் பழக்கம் கிடையாது. அநீதியைக் கண்டால் மோதும் துணிச்சல் மட்டுமே உண்டு.

வயது என்பது வெறும் நம்பர் தான், உங்கள் மனதுக்குள் இருக்கும் அந்த ஸ்பார்க்தான் நிஜம்.

உலகம் உருண்டை என்பதை விட, உலகம் இளைஞர்கள், இளைஞிகள் கையில் என்பதுதான் இன்றைய லேட்டஸ்ட் ட்ரெண்ட்!

*****

No comments:

Post a Comment