தொடையைத் தட்டினால் தேசிய விருது கிடைக்குமா?!
இசைஞானி இளையராஜா என்பவர் ஒரு மனிதர் அல்ல,
அவர் ஒரு மெலோடி மேனுஃபேக்ச்சரிங் யூனிட். காலையில் குளித்துவிட்டு வரும் வழியில் ஒரு
நாற்பது மெட்டுகளை யோசித்துவிட்டு, காபி குடிக்கும் இடைவெளியில் ஒரு முழுப் படத்துக்கும்
பின்னணி இசையைக் கோர்த்து முடித்துவிடுவார்.
1986இல் மட்டும் அவர் 58 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்
என்றால், அந்த வருடத்தில் அவர் தூங்கிய நேரத்தை விட, ஆர்மோனியப் பெட்டியைத் தட்டிய
நேரம்தான் அதிகம் என்று அடித்துச் சொல்லலாம்.
நிமிடங்களில் மெட்டுப் போடும் இந்த வித்தைக்காரரை,
ஒரே ஒரு பாடல் மட்டும் சுமார் எட்டு மணி நேரம் ஸ்டுடியோவில் உட்கார வைத்து பெண்டு நிமிர்த்தியது.
இயக்குநர் மகேந்திரன் அப்போது நெஞ்சத்தைக்
கிள்ளாதே என்ற படத்தை எடுத்துக் கொண்டிருந்தார்.
சுட்சுவேசன் இதுதான். காலையில் ஹீரோவும் ஹீரோயினும்
ஜாகிங் போகிறார்கள்.
இளையராஜாவிடம், இங்கே ஒரு பாட்டு வேணும். ஆனா
அது வெறும் பாட்டா இருக்கக் கூடாது, அந்த ஜாகிங் போற உணர்வு மியூசிக்ல வரணும், என்றார்
மகேந்திரன்.
ராஜா யோசித்தார். சரி, காலடிச் சத்தத்தையே
மெட்டாக்கிடுவோம் என்று முடிவு செய்தார்.
முதலில் ஸ்டுடியோவில் ஒருவரை மைக் முன்னால்
நிற்க வைத்து, டேய், ஜாகிங் போற மாதிரி ஓடுடா, என்றார்கள். அவர் ஓடினார். ஆனால் ஸ்பீக்கரில்
கேட்ட சத்தம் ஜாகிங் மாதிரி இல்லை; ஏதோ யானை தன் காதுகளைப் படபடவென அடித்துக்கொள்வது
போலவோ அல்லது பழைய இரும்புக்கடையில் தகரம் விழுவது போலவோ இருந்தது.
மைக்ரோபோன்கள் மிரண்டன. ராஜாவுக்குத் திருப்தி
இல்லை. விதவிதமான தரைகளில், விதவிதமான செருப்புகளைப் போட்டு ஓடிப் பார்த்தார்கள். ஜாகிங்
சத்தம் மட்டும் வரமாட்டேன் என்று அடம் பிடித்தது.
எட்டு மணி நேரம் ஓடியாயிற்று.
ஸ்டுடியோவில் இருந்தவர்களுக்குக் கால் வலி
வந்ததுதான் மிச்சம்.
கடைசியில் ராஜாவுக்கு ஒரு பொறி தட்டியது.
தபேலா வித்வான் கண்ணையாவை அழைத்தார். கண்ணையா,
தபேலாவை அப்புறம் வாசிக்கலாம். மைக் முன்னாடி உட்கார்ந்து உன் ரெண்டு தொடையிலயும் மாத்தி
மாத்தித் தட்டு, என்றார்.
கண்ணையா தட்டினார்.
ஸ்பீக்கரில் சத்தம் கேட்டது.
அட! இதுவல்லவா ஜாகிங் சத்தம்!
ஒரு மனிதன் அதிகாலையில் பனி மூட்டத்தில் மெல்ல
ஓடி வரும்போது எழும் அந்தச் துல்லியமான ஓசை, ஒரு தபேலா கலைஞனின் தொடையில் ஒளிந்திருந்தது.
அந்தத் தாளக்கட்டை அப்படியே பிடித்துக்கொண்டு,
பருவமே புதிய பாடல் பாடு என்ற பாடல் உருவானது.
எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், எஸ்.ஜானகியும்
தங்கள் குரலால் மேஜிக் செய்தார்கள்.
இன்று கேட்டாலும் அந்தப் பாடலின் ஆரம்பத்தில்
வரும் அந்த தட்-தட்-தட் சத்தம் நம்மை அறியாமல் நம் கால்களை ஜாகிங் மோடிற்கு மாற்றிவிடும்.
இந்தத் துல்லியமான உழைப்புக்காக அந்தப் பாடலுக்கு
சிறந்த ஒலி அமைப்புக்கான தேசிய விருது கிடைத்தது.
தொழில்நுட்பம் இல்லாத காலத்தில் மூளையைப் பயன்படுத்தினார்கள்.
இன்று தொழில்நுட்பம் இருக்கிறது, ஆனால் மூளையை சைலண்ட் மோடில் போட்டுவிட்டார்கள்.
ஒரு மனிதனின் தொடை சத்தம் தேசிய விருது வாங்கும்
என்று கண்ணையா அன்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். அதுதான் இளையராஜாவின் மேஜிக்.
*****

No comments:
Post a Comment