இயக்குநர் ஷங்கர் வில்லனா?
ரஜினி சாரை
வைத்துப் படம் எடுப்பதை விட, அந்தப் படத்திற்கு இயக்குநர் மற்றும் வில்லனைத் தேடும்
படலம் தான் சுவாரசியமான திரைக்கதையாக இருக்கிறது. சிபி சக்கரவர்த்தி சொன்ன கதை ரஜினிக்கு
அத்தனை திருப்தி அளிக்கவில்லையாம். அதனால் அஸ்வத் மாரிமுத்து பக்கம் வண்டி திரும்பியிருக்கிறது.
இதில் ஹைலைட் என்னவென்றால், ஒருவேளை சிபி சக்கரவர்த்தி இயக்கினால், இயக்குநர் ஷங்கர்
வில்லனாக நடிப்பாராம்! பிரம்மாண்டமான பட்ஜெட்டில் வில்லத்தனம் செய்வாரோ என்னவோ? சிம்ரன்,
ஷோபனா, பாசில் ஜோசப், சிறப்புத் தோற்றத்தில் கமல் என ஒரு பெரிய மல்டி ஸ்டாரர் பட்டாளமே
அணிவகுக்கிறது. கடைசியில் யார் இயக்குகிறார்கள் என்பது காலத்திற்கே வெளிச்சம்.
நடிகர் சூரி இப்போது
முழுநேரக் கதாநாயகன் ஆகிவிட்டார். அவர் நடிக்கும் புதிய படத்திற்கு மண்டாடி என்று பெயர்
வைத்திருக்கிறார்கள். மண்டாடி என்றால் ஏதோ மண்டையில் அடிப்பது என்று நினைத்துவிடாதீர்கள்.
நிச்சயமாகத் திரையரங்கில் அது நடக்காது என நம்புவோம். கடல் அலை, காற்றின் திசை ஆகியவற்றை
அறிந்து மீன்பிடித் தொழிலை வழிநடத்தும் நிபுணரைத்தான் அப்படி அழைப்பார்களாம். அதாவது,
ஜி.பி.எஸ் கருவி கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னால் இருந்த கூகுள் மேப்ஸ் மனிதர் என்று
வைத்துக்கொள்ளுங்களேன். ராமநாதபுரம் வெயிலில் கஷ்டப்பட்டுப் படமாக்கியிருக்கிறார்கள்.
ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். படத்தில் ஆக்சன் மற்றும் சென்டிமென்ட் துல்லியமாக
இருக்கிறதாம். மீன் கிடைக்குதோ இல்லையோ, ஹிட் கிடைக்குதா என்று பார்ப்போம்.
சினிமா உலகில்
ஒரு நடிகை பிசியாக நடிப்பதைக் கண்டாலே, வீட்டில் இருப்போர் சரி, போதும், ஒரு கல்யாணத்தைப்
பண்ணி வைப்போம், என்று கிளம்பிவிடுவது வழக்கம். 30 வயதான சம்யுக்தா மேனனுக்கும் இப்போது
அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. அவர் சுயம்பு உள்ளிட்ட படங்களில் பிசியாக இருந்தாலும்,
குடும்பத்தினர் ரகசியமாக மாப்பிள்ளை பார்த்து வருகிறார்களாம். அவரோ, என் கவனம் முழுவதும்
நடிப்பில்தான், என்று வழக்கமான டயலாக்கைச் சொல்லியிருக்கிறார். ஆனால், அவர் சமூக வலைதளங்களில்
வெளியிடும் ஸ்டன்னிங் புகைப்படங்களைப் பார்த்தால், ரசிகர்களின் கவனம் முழுவதும் வேறு
பக்கம் திரும்பிக்கொண்டிருக்கிறது.
அட்லீ இயக்கத்தில்
அல்லு அர்ஜுன் நடிக்கும் ராக்கா படத்தில், அவர் மூன்று வேடங்களில் நடிக்கிறாராம்.
1. போலீஸ்.
2. ராட்சசன்.
3. அப்பா.
இதில் எது ராட்சசன், எது அப்பா என்பது படம்
பார்த்தால்தான் தெரியும்.
தீபிகா படுகோனுக்கு
பாலிவுட்டே அதிரும் அளவுக்குச் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். ராஷ்மிகா முதல்முறையாக வில்லியாக
நடிக்கிறாராம். படத்தில் லாஜிக் இருக்குமோ இல்லையோ, பட்ஜெட்டும் சம்பளமும் நிச்சயமாகப்
பான் இந்தியா அளவில் மிரட்டலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
உலகநாயகனின் புதல்வி
ஸ்ருதிஹாசன் ஒரு ஆன்மிக அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். ஏதோ ஒரு சின்ன வாராஹி அம்மன்
கோவிலுக்குப் போனாராம். அங்கே வி.ஐ.பி தரிசனம் இல்லை, டொனேஷன் தொல்லை இல்லை. கடவுளுக்கே
ஆச்சரியமாக இருந்திருக்கும்! நாம மட்டும் கடவுளைத் தேடல, கடவுளும் நம்மளத் தேடுறாரு,
என்று ஒரு தத்துவத்தைச் சொல்லியிருக்கிறார். அந்தத் தரிசனத்திற்குப் பிறகு அவருக்குப்
பயம் போய்த் தெளிவு கிடைத்துவிட்டதாம். சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகிறது.
ஸ்ருதிஹாசன் பாடிய சைக்கோ பாடல்களைக் கேட்ட ரசிகர்களுக்கும் அந்தத் தெளிவு கிடைத்தால்
சரிதான்! அப்பா பக்கா நாத்திகர். மகள் பக்கா ஆத்திகர்.
*****

No comments:
Post a Comment