Friday, 10 April 2026

தற்செயல் திலகங்கள் – துருப்பிடிக்காத மனசும், மொறுமொறு சிப்ஸும்!

தற்செயல் திலகங்கள் –

துருப்பிடிக்காத மனசும், மொறுமொறு சிப்ஸும்!

தேவைகளே கண்டுபிடிப்புகளின் தாய் என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அந்தத் தேவைகளுக்குத் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புகள் நிறைய உண்டு. அவற்றைப் பற்றி ஒரு ரவுண்ட் வருவோமா?

ஹாரி பிரியர்லி துப்பாக்கிக் குழாய்கள் சீக்கிரம் தேய்ந்து போவதைத் தடுக்க ஏதோ ஒரு உலோகக் கலவையைத் தேடிக்கொண்டிருந்தார். தோல்வியடைந்த பரிசோதனை மாதிரிகளை லேப் மூலையில் வீசி எறிந்தார். சில வாரம் கழித்துப் பார்த்தால், குப்பையில் கிடந்த அந்த இரும்புத் துண்டுகள் மட்டும் தகதகவென மின்னின. துரு ஏறவில்லை! 12.8% குரோமியத்தைச் சேர்த்தால் இரும்புக்கு இம்யூனிட்டி வந்துவிடும் என்று தற்செயலாகக் கண்டுபிடித்தார். இன்று உங்கள் கிச்சன் ஸ்பூன் முதல் அறுவை சிகிச்சை கத்திகள் வரை எல்லாமே அந்த குப்பை கொடுத்த பரிசுதான்.

அர்னால்ட் அந்த செயின்ட் லூயிஸ் உலகக் கண்காட்சியில் ஐஸ்கிரீம் விற்றுக் கொண்டிருந்தார். வெயில் மண்டையைப் பிளக்கிறது. ஐஸ்கிரீம் விற்ற அர்னால்டுக்கு ஒரு தலைவலி. கப்கள் தீர்ந்துவிட்டன! பக்கத்து கடையில் எர்னஸ்ட் ஹாம்வி என்பவர் ஸலாபியா என்ற சிரிய நாட்டு இனிப்பு வகையை விற்றுக் கொண்டிருந்தார். சட்டென்று ஒரு ஐடியா. அந்த மொறுமொறு பேஸ்ட்ரியைச் சுருட்டி ஒரு கூம்பு போலச் செய்து ஐஸ்கிரீமை அதில் வைத்தார். எடிபில் கன்டெய்னர் ரெடி! சிக்கல்தான் சிங்காரமான கண்டுபிடிப்புகளுக்குத் தாய்.

ஜார்ஜ் க்ரம் என்ற சமையல்காரருக்கு ஒரு அடாவடி கஸ்டமர் வாய்த்தார். உருளைக்கிழங்கு ப்ரெஞ்ச் ஃப்ரைஸ் ரொம்ப தடிமனாக இருக்கிறது, என்று திருப்பி அனுப்பிக் கொண்டே இருந்தார். கடுப்பான க்ரம், அந்த ஆளைப் பழிவாங்க உருளைக்கிழங்கை காகிதம் போல மெல்லியதாகச் சீவி, எண்ணெயில் பொரித்து, உப்பைத் தூக்கலாகப் போட்டார். இந்தா, சாப்பிடு! என்று கொடுத்தால், கஸ்டமருக்கு அதுதான் ரொம்பப் பிடித்துப் போனது! இப்படித்தான் பிறந்தது உருளைக்கிழங்கு சிப்ஸ். பிற்காலத்தில் லாரா ஸ்கடர் என்ற பெண் வக்கீல், இதை மெழுகுப் பேப்பரில் பேக் செய்து விற்க ஆரம்பித்தார். இன்று ஃப்ரிட்டோ லே மட்டும் வருஷத்துக்கு பில்லியன் டாலர்களில் கல்லா கட்டுகிறது. நினைவிருக்கட்டும், கோபத்திலும் ஒரு பிசினஸ் இருக்கிறது!

வில்ஹெல்ம் ராண்ட்ஜன் லேப்பில் கேத்தோடு கதிர்களை வைத்து விளையாடிக்கொண்டிருந்தார். இருட்டில் ஒரு ஸ்க்ரீன் மட்டும் மின்னுவதைக் கவனித்தார். இடையில் தன் கையை வைத்தபோது, தசை மறைந்து எலும்பு தெரிந்தது. உலகிலேயே முதல் எக்ஸ்ரே எடுத்தது அவர் மனைவியின் கையைத்தான். அந்தப் படத்தில் மோதிரம் கூடத் தெரியும்! உடலைக் கிழிக்காமல் உள்ளே பார்க்க முடியும் என்பது மருத்துவ உலகின் மிகப்பெரிய ஆக்சிடென்ட்.

ஆகவே, தற்செயல்களைச் சாதாரணமாக நினைத்து விட முடியாது. மிகப்பெரிய கண்டுபிடிப்புகள் தற்செயலாகத்தான் நடந்திருக்கின்றன. அதனால் கேசுவலான வாழ்க்கையைச் சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். அந்தச் சாதாரண வாழ்க்கையிலும் அசாதாரணத்தை நிகழ்த்தக் கூடிய தற்செயல்கள் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம்.

*****

No comments:

Post a Comment