Saturday, 25 April 2026

டைம் பாஸ் செய்திகள் – 26.04.2026

டைம் பாஸ் செய்திகள் – 26.04.2026

விஷ்ணு எடவன் என்றோர் இளைஞர். லோகேஷ் கனகராஜின் ஸ்கூலில் படித்தவராம். நயன்தாரா – கவின் நடிக்கும் ஹலோ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அந்தப் படத்திற்காக ஜி.வி. பிரகாஷ் குரலில் ஒரு பாட்டை ரிலீஸ் செய்திருக்கிறார்கள். கன்னக்குழியா புதைகுழியா? என்று அவர் பாட, நெட்டிசன்களோ கன்னக்குழி ஓகே, ஆனா அது புதைகுழி ஆகாம இருந்தா சரி, என்று கமெண்ட் அடிக்கிறார்கள். நயன் - கவின் கெமிஸ்ட்ரியை விட, இந்தப் படத்தில் இருக்கும் 7 ஸ்க்ரீன், ரவுடி பிக்சர்ஸ் எனத் தயாரிப்பு நிறுவனங்களின் லிஸ்ட்தான் நீளமாக இருக்கிறது.

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த சிந்து வாசுதேவன் என்றொரு பாடகி இப்போது தமிழுக்கு வந்திருக்கிறார். 15 மொழிகளில் பாடுவாராம். பார்க்க அச்சு அசலாக நித்யா மேனன் போலவே இருக்கிறார். நித்யா மேனனுக்கே இது தெரியுமா என்று தெரியவில்லை. ஏ.ஆர்.ரகுமான் மேல் தீராத காதல் கொண்ட இவர், டி. இமான் இசையில் ஒரு மெலடி பாடிவிட்டாராம். இயக்குநர்கள் இவரைப் பார்த்ததும் பாட வந்தது இருக்கட்டும், ஹீரோயின் ஆகிறீர்களா? என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். அமெரிக்காவிலிருந்து பாட்டுப் பாட வந்தவரை கால்ஷீட் கேட்டு பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

பிரசாந்த் நீல் என்றால் சும்மாவா? திரையில் எதையாவது கறுப்பு மையால் அடித்து, அதில் ஒரு ஹீரோவை மாஸாகக் காட்டுவதுதான் அவர் ஸ்டைல். என்.டி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு மே 20 இல் ஒரு கிளிம்ப்ஸ், அதாவது படத்தில் ஒன்றுமே புரியாத ஒரு பத்து செகண்ட் காட்சி வரப்போகிறதாம். 2027இல்தான் படம் வருமாம். இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. அதுவரை ரசிகர்கள் அந்தப் போஸ்டரில் இருக்கும் என்.டி.ஆரின் தாடியை எண்ணிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

உப்பு புளி காரம் என்று ருசியாகத் தொடர் எடுத்தவர்கள், அடுத்து பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் என்று குடும்ப உறவுகளைப் பிழிய வருகிறார்கள். போஸ் வெங்கட் இதில் ஒரு டெக்ஸ்டைல் ஷோரூம் ஓனர். வீட்டில் எப்போதும் ஒரு கட்டுப்பாடான முகத்துடன் அலைவாராம். மே மாதம் ஓடிடிஇல் இது ரிலீஸ் ஆகிறது. நான்கு உடன்பிறந்தவர்களின் கதையாம். சொந்த அண்ணன் தம்பிகளுடன் சண்டை போடவே நேரம் இல்லாத நமக்கு, அடுத்த வீட்டுச் சண்டையைப் பார்க்க நேரம் இருக்கத்தான் செய்கிறது.

*****

No comments:

Post a Comment