Thursday, 16 April 2026

குப்பையில் ஒரு கோபுரம்!

குப்பையில் ஒரு கோபுரம்!

சாதிப்பதற்கு நிறமோ, இனமோ, மதமோ, சாதியோ, வயதோ ஒரு தடையல்ல. சிந்திக்கும் திறனும், அச்சிந்தனையைச் செயலாக்கும் மனோதிடமும், விடாமுயற்சியும் இருந்தால் யாராக இருந்தாலும் அவர் வரலாற்று நாயகர்தான் என்பதை ஒரு பள்ளிச் சிறுவனும், ஒரு கருப்பின தையல்காரரும் நிரூபித்திருக்கிறார்கள். அவர்களைப் பற்றித்தான் நாம் இங்கு காண இருக்கிறோம்.

வில்லியம் கம்வாம்பா ஒரு பதினான்கு வயது சிறுவன். மலாவி தேசத்தில் ஒரு கடும் பஞ்சம். வில்லியம், பள்ளிக்குக் கட்டணம் கட்ட முடியாமல் பாதியிலேயே நின்றவன். கையில் காசில்லை, ஆனால் ஒரு லைப்ரரி கார்டு இருந்தது. ஒரு பழைய சயின்ஸ் புத்தகத்தில் காற்றாலைப் படத்தைப் பார்த்தான். மக்களுக்கு மின்சாரம் இல்லாத அந்த ஊரில், ஒரு காற்றாலையை உருவாக்கத் தீர்மானித்தான்.

அவன் ஊரில் ஹார்டுவேர் ஷாப் கிடையாது. அவன் போன இடம் குப்பைமேடு! பழைய சைக்கிள் துண்டுகள், டிராக்டர் பாகங்கள், பிளாஸ்டிக் செருப்புகள்தான் அங்கே கிடந்தன. அவற்றைத் திரட்டிக் கொண்டான். அவன் செய்கையைப் பார்த்து ஊரே அவனைப் பார்த்து பைத்தியம் என்று சிரித்தது. அவன் அம்மா உட்பட!

ஆனால், பதினாறு அடி உயரத்தில் அவன் அந்த குப்பைக் கோபுரத்தை நிறுத்தி, அதில் ஒரு சின்ன பல்பு எரிந்த போது சிரித்தவர்கள் வாய் அடைத்துப் போனார்கள். மொபைல் சார்ஜ் போட அவன் வீட்டு முன்னால் ஊரே வரிசையில் நின்றது. பிற்காலத்தில் முப்பத்து ஒன்பது அடி உயர காற்றாலையையும், சூரிய சக்தியில் இயங்கும் தண்ணீர் பம்பையும் உருவாக்கித் தன் கிராமத்தின் தாகத்தைத் தீர்த்தான் அந்தச் சிறுவன்.

நம்புங்கள், எக்காரணம் கொண்டும் நம்பிக்கையை மட்டும் விட்டுவிடாதீர்கள், என்கிறான் குப்பையில் ஒரு காற்றாலை கோபுரத்தை உருவாக்கிய இந்தச் சிறுவன்.

கேரேட் மார்கன் கிளீவ்லேண்டைச் சேர்ந்தவர். ஒரு தையல் மெஷின் மெக்கானிக். தீயணைப்பு வீரர்கள் புகையில் திணறுவதைப் பார்த்தார். ஒரு ப்ரீத்திங் மாஸ்க் கண்டுபிடித்தார்.  ஒரு சுரங்க விபத்தில் கேஸ் கசிந்தபோது, இவரே அந்த மாஸ்க்கைப் போட்டுக்கொண்டு உள்ளே புகுந்து பலரை மீட்டார். இதுதான் பின்னாளில் உலகப் போர்களில் பயன்படுத்தப்பட்ட கேஸ் மாஸ்க்குகளுக்கு முன்னோடி.

அத்தோடு நிறுத்தவில்லை. அந்த ஊரில் கார் வைத்திருந்த முதல் கருப்பினத்தவர் இவர்தான். ஒருமுறை ஒரு கோரமான விபத்தைப் பார்த்தார். அப்போது போக்குவரத்து சிக்னலில் நில், செல் என்று இரண்டுதான் இருந்தது. இவர் நடுவில் ஒரு மஞ்சள் நிலையை அறிமுகப்படுத்தினார். இன்று நீங்கள் சிக்னலில் மஞ்சள் லைட்டுக்காகக் காத்திருக்கிறீர்களே, அதற்கு மூலகாரணம் இந்த மார்கன்தான்!

வில்லியமும் மார்கனும் நமக்குச் சொல்லும் செய்தி ஒன்றுதான். வசதிகள் இல்லாதது ஒரு தடையல்ல, கவனிக்கும் திறனும், விடாமுயற்சியும் இருந்தால் ஒரு தையல் மெக்கானிக்கும் சரி, ஒரு பள்ளி மாணவனும் சரி, வரலாற்றைப் படைக்க முடியும்.

அத்துடன் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும் நீங்கள். வில்லியம் கம்வாம்பா இன்று உலகமே கொண்டாடும் ஒரு இன்னோவேட்டர். வெறும் ஒரு லைப்ரரி புத்தகம்தான் அவர் வாழ்க்கையை மாற்றியது. புத்தகங்களை நேசியுங்கள்!

இது போன்ற கதைகள் இன்னும் நிறைய இருக்கின்றன. காத்திருங்கள்!

*****

No comments:

Post a Comment