Saturday, 11 April 2026

நிலா! மீண்டும் நிலா! ஆர்மிடெஸ் உலா!

நிலா! மீண்டும் நிலா! ஆர்மிடெஸ் உலா!

நிலா என்பது கவிஞர்களுக்குத் தட்டு, காதலர்களுக்குத் தூது, குழந்தைகளுக்குச் சோறு. ஆனால் நாசாவுக்கு? அது ஒரு ரீஎன்ட்ரி பாயிண்ட்.

சுமார் ஐம்பது வருஷங்களுக்கு அப்புறம் நிலாவுக்கு மீண்டும் விசிட் அடிக்கத் தீர்மானித்தது நாசா. அந்தத் திட்டத்தின் பெயர் ஆர்டெமிஸ்.

கிரேக்கக் கதைகளில் சூரியக் கடவுள் அப்பல்லோவுக்கு ஒரு ட்வின் சிஸ்டர் உண்டு. அவள்தான் இந்த ஆர்டெமிஸ். பெயர் பொருத்தம் அபாரம்.

1969 இல் அண்ணன் போனார், அதாவது அப்போது அந்தத் திட்டத்தின் பெயர் அப்பல்லோ. இப்போது தங்கை போகிறாள். திட்டத்தின் பெயர் ஆர்மிடெஸ்.

1950களில் ஒரு ஸ்பேஸ் ரேஸ் நடந்தது. அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையில் யார் பெரியவன் என்கிற ஈகோ யுத்தம் அது.

ரஷ்யா முதலில் ஸ்புட்னிக் அனுப்பியது, யூரி ககாரினை விண்ணுக்குத் தள்ளியது எனச் சோவியத் யூனியன் ஸ்கோர் செய்துகொண்டே போனது.

அப்போது அமெரிக்க அதிபர் ஜான் எஃப். கென்னடிக்கு சுருக்கென்றது. சீக்கிரமே நிலாவுக்கு ஆள் அனுப்புவோம், என்றார். சொன்னபடியே 1969 இல் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவில் குதித்தார்.

அதைத் தொடர்ந்து மொத்தம் 12 பேர் நிலாவில் நடந்துவிட்டு வந்தார்கள். கடைசியாக 1972 இல் யூஜின் செர்ன் கிளம்பும்போது, கடவுள் புண்ணியத்துல அப்புறம் வருவோம், என்று சொல்லிவிட்டு வந்தார். அந்த அப்புறம் வருவதற்கு ஐம்பது வருஷமாகிவிட்டது.

அன்று அமெரிக்கா Vs ரஷ்யா என்று இருந்த ஸ்பேஸ் யுத்தம், இன்று அமெரிக்கா Vs சீனா என மாறியிருக்கிறது. சீனா நிலாவில் கொடி நடத்த தயாராகி விட்டது.

ட்ரம்ப் பார்த்தார். சீனாவுக்கு முன்னாடி நாம் போக வேண்டும், என்று கையெழுத்துப் போட்டார். அதுதான் இந்த ஆர்டெமிஸ்.

இடையில் நம் இஸ்ரோவும் சந்திரயான் மூலம் சைலண்ட் ஆக வேலை பார்த்துக்கொண்டிருந்தது.

குறிப்பாக, நிலவில் தண்ணீர் இருப்பதை முதலில் கண்டுபிடித்துச் சொன்னது நம் சந்திரயான்-1 தான் என்பதை இங்கே ஒரு காகிதத்தில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

நிலவின் தென்துருவத்தில் சூரிய வெளிச்சமே படாத பள்ளங்கள் உண்டு. அங்கே ஐஸ் கட்டி உருவில் தண்ணீர் ஒளிந்திருக்கிறது. அந்தத் தண்ணீரைப் பிரித்து ஆக்சிஜன் எடுக்கலாம், ராக்கெட் எரிபொருளாக மாற்றலாம்.

இதெல்லாம் எதற்குத் தெரியுமா?

நிலாவை ஒரு பெட்ரோல் பங்கவோ அல்லது பஸ் ஸ்டாண்ட் ஆகவோ மாற்றப் போகிறார்கள்.

இங்கிருந்து அதாவது பூமியில் இருந்து கிளம்பி நிலாவில் வண்டியை நிறுத்தி, அதாவது ராக்கெட்டை நிறுத்தி, அங்கே எரிபொருள் நிரப்பிக்கொண்டு செவ்வாய் கிரகத்துக்குப் போகலாம்.

நிலவுதான் இனி ஏவுதளம்.

இதில் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ், ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஒரிஜின் எனத் தனியார் கம்பெனிகளும் ஐடி கம்பெனி ப்ராஜெக்ட் மாதிரி உள்ளே புகுந்துவிட்டன.

ஐம்பது வருஷத்துக்கு முன்னாடி நிலவு பயணம் என்பது வெறும் வெற்றிக்கான போட்டி. இப்போது அது வாழ்வாதாரத்துக்கான தேவை. நிலாவில் பிளாட் போடும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

*****

No comments:

Post a Comment