Tuesday, 28 April 2026

கொஞ்சம் சந்தோஷம் கொடுங்கள் பாஸ்!

கொஞ்சம் சந்தோஷம் கொடுங்கள் பாஸ்!

பள்ளிச் சாப்பாட்டுக்கூடம் என்றாலே நமக்கு ஞாபகம் வருவது வரிசையில் நிற்பதும், ஏதோ ஒரு குழம்பை ஊற்றிக்கொண்டு போவதும்தான். நம்மூரில் சத்துணவு. ஆனால், அமெரிக்காவின் சில பள்ளிகளில் மதிய உணவு என்பது ஒரு ஜாய் தெரபியாக மாறியிருக்கிறது. சமைப்பவர்கள் வெறும் கரண்டியை மட்டும் பிடிக்கவில்லை, குழந்தைகளின் மனசையும் பிடிக்கிறார்கள்.

வர்ஜீனியா பீச் பள்ளியில் ஸ்டேசி ட்ரூமன் ஒரு வித்தியாசமான மேனேஜர். அவர் சும்மா பழம் கொடுப்பதில்லை. ஒவ்வொரு வாழைப்பழத்தின் தோலிலும் நீ ஒரு சூப்பர் சுட்டி, நீ ஒரு அறிவாளி என்று குட்டி குட்டி ஊக்கமூட்டும் வாசகங்களை எழுதுகிறார்.

விளைவு?

குழந்தைகள் உற்சாகமானது ஒருபுறம், அந்த மெசேஜைப் படிப்பதற்காகவே அடம் பிடிக்காமல் பழங்களைச் சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு மார்க்கர் பேனா இருந்தால் போதும், ஆரோக்கியத்தை ஆசையாக மாற்றிவிடலாம் என்பதற்கு இது ஒரு சிம்பிள் டெக்னிக்.

நியூயார்க்கைச் சேர்ந்த லிண்டா கிப்லர், பள்ளி கேன்டீனை ஒரு மாயாலோகமாக மாற்றுகிறார். இதற்காக அவர் காசு செலவழிப்பதில்லை. பள்ளிக் குப்பையில் வீசப்படும் பழைய அட்டைப் பெட்டிகளை எடுத்து பிரம்மாண்டமான அலங்காரங்களைச் செய்கிறார். வெற்றுச் சுவர்களைப் பார்ப்பது போரடிக்கிறது, என்கிறார் இந்த எனர்ஜி பாட்டி. ஆக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, கற்பனைத் திறனுக்கு வயது கிடையாது, பழைய அட்டைப் பெட்டிகளுக்கும் உயிர் உண்டு!

சவுத் கரோலினாவில் தாரியஸ் மெக்லைன் என்ற ஊழியர் இருக்கிறார். அங்கே குழந்தைகள் சாப்பிட்டு முடித்துவிட்டுத் தட்டுகளைக் கொடுக்க வரிசையில் நிற்கிறார்கள். ஏன் தெரியுமா? ஒவ்வொரு தட்டை வாங்கும்போதும் தாரியஸ் ஒரு குட்டி டான்ஸ் ஆடுவார். யாராவது ஒரு குழந்தை சோகமாக இருந்தால், அவர்களை சிரிக்க வைப்பதே என் வேலை, என்கிறார் அவர். மறுநாளே குழந்தைகளும் அவருடன் சேர்ந்து டான்ஸ் ஆட ஆரம்பித்துவிடுகிறார்கள்.

விசயம் இதுதான்.

சந்தோஷம் என்பது ஒரு கெமிக்கல் ரியாக்சன். நீங்கள் யாருக்காவது ஒரு சின்ன உதவி செய்யும்போது உங்கள் மூளையில் ஆக்ஸிடாசின் சுரக்கிறது. இது உங்களுக்கும், அந்த உதவி பெற்றவருக்கும் ஒரே நேரத்தில் ஒரு பாசிட்டிவ் எனர்ஜி கொடுக்கும்.

இதையெல்லாம் கேள்விப்படும் போது நமக்கும் சில யோசனைகள் தோன்றத்தான் செய்கின்றன.

பஸ் ஸ்டாப் பெஞ்சில் ஒரு சின்ன சாக்லேட்டையும், இன்று உங்கள் நாள் சிறப்பாக அமையட்டும் என்ற குறிப்பையும் வைத்துவிட்டு வந்தால் என்ன?

முகம் பார்க்கும் கண்ணாடிகளில், நீ அழகாக இருக்கிறாய், என்று ஒரு ஸ்டிக்கி நோட் ஒட்டினால் என்ன?

பேருந்தில், ரயிலில் நம்மோடு வருபவர்களுக்கு ஒரு நேர்மையான புன்னகையையும் கையோடு ஒரு நல்ல புத்தகத்தையும் பரிசாகக் கொடுத்தால் என்ன?

யார் செய்தார், எவர் செய்தார், ஏன் செய்தார் என்று தெரியாமல் ஒருவருக்குக் கிடைக்கும் சந்தோஷம் இருக்கிறதே, அது ஒரு செயின் ரியாக்சன். அவர்கள் அந்தப் பாசிட்டிவ் எனர்ஜியை இன்னொருவருக்குக் கடத்துவார்கள்.

இந்த உலகம் இயங்குவது பெரிய தலைவர்களால் மட்டுமல்ல, இது போன்ற சின்னச் சின்ன மனிதர்களின் பெரிய மனதால்தான்.

அந்தச் சின்னப் பட்டியலில் இன்று நீங்கள் யாரைச் சேர்க்கப் போகிறீர்கள்? ஒரு நாளைக்கு ஒருவரையாவது சேருங்களேன்.

மகிழ்ச்சியைப் பரிமாறப் பெரிய படிப்பு தேவையில்லை, கொஞ்சம் அன்பு இருந்தால் போதும்!

*****

No comments:

Post a Comment