Wednesday, 27 May 2026

அழகு ஆரோக்கியம் அப்புறம் கொஞ்சம் நிதானம்!

அழகு ஆரோக்கியம் அப்புறம் கொஞ்சம் நிதானம்!

ஆரோக்கியம் மற்றும் அழகு ஆகிய இந்த இரண்டு ஏரியாவிலும் இப்போது ஸ்லோ லிவிங் தத்துவம் ஒரு முக்கியமான அப்டேட் ஆகி வருகிறது.

கண்ட கண்ட கெமிக்கல்களை முகத்தில் பூசிக்கொள்வதையும், உடலை வருத்திக்கொண்டு ஜிம்மில் எகிறிக் குதிப்பதையும் நிறுத்திவிட்டு, கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பார்த்தால், நம் உடலுக்கு உண்மையிலேயே என்ன தேவை என்பது புரியும். குறைவே நிறைவு என்பதுதான் இதற்கான தாரக மந்திரம்.

இந்த மந்திரங்களைச் சூத்திரங்களாக்கினால், அவை இவை.

சருமம் என்பது உங்கள் உடலின் மிகப்பெரிய உறுப்பு. அதற்குப் போய் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்கிற பட்ஜெட் பொருட்களைப் பூசலாமா? ஆக, குவாலிட்டிதான் முக்கியம், குவான்டிட்டி இல்லை என்பது இதன் பின்னுள்ள சூத்திரம்.

பத்து மலிவான கிரீம்களை வாங்குவதை விட, ஒரு தரமான, நீண்ட நாள் உழைக்கக்கூடிய தயாரிப்பில் முதலீடு செய்யுங்கள். விளம்பரங்களைப் பார்த்து ஏமாறாமல், நிஜமான பயனர் விமர்சனங்களைப் படியுங்கள். பாட்டில் என்ன சொல்கிறது என்பதை விட, அந்த வாசனை உங்களுக்குப் பிடிக்கிறதா என்று பாருங்கள். எல்லாவற்றையும் விட இயற்கையிலேயே அற்புதமான மேக்கப் ஐட்டங்கள் இருக்கின்றன. அவற்றை முயற்சியுங்கள், எந்தப் பிரச்சனையும் இல்லை.

அழகு என்பது உங்கள் சருமத்தோடு முடிந்துவிடுவதில்லை. நீங்கள் பயன்படுத்தும் பொருட்கள் இந்த பூமியை எப்படிப் பாதிக்கிறது என்பதும் முக்கியம். ரீபில்  செய்யக்கூடிய பாட்டில்கள், மீண்டும் பயன்படுத்தக்கூடிய காட்டன் பேடுகள்  போன்றவை வெறும் பேஷன் அல்ல, நம் கடமை. லாபத்தை விட பூமியை நேசிக்கும் நிறுவனங்களைத் தேர்ந்தெடுங்கள். பூமியின் பசுமையைக் காப்பதுதான் இதன் பின்னுள்ள சூத்திரம்.

ஸ்கின்னிமலிசம் என்பது ஒரு புதிய சயின்ஸ். மினிமலிசம் கேள்விப்பட்டிருப்பீர்கள், இது சருமத்திற்கான மினிமலிசம். அடுக்கு அடுக்காகப் பத்து பொருட்களைப் பூசுவதற்குப் பதில், மிகக் குறைவான மூலப்பொருட்கள் கொண்ட தரமான ஒரு பொருளைப் பயன்படுத்துவதுதான் இது. இதில் கெமிக்கல்கள் குறைவு, சத்துக்கள் அதிகம். இது உங்கள் சருமத்தை ஓவர்லோடு செய்யாமல் பாதுகாக்கும். இது ஓர் அற்புத சூத்திரம்.

தினமும் முகம் கழுவுவதை ஒரு சடங்காக மாற்றுங்கள். காலையில் அமைதியாக மூச்சை இழுத்துவிட்டு முகம் கழுவுங்கள். தோள்களைக் காது வரை உயர்த்தி, சில நொடிகள் கழித்து டிராப் செய்யுங்கள். இது ரத்த ஓட்டத்தை அதிகரித்து, அன்றைய டென்ஷனை டிஸ்சார்ஜ் செய்யும். இது உங்களது தினப்படி சூத்திரங்களில் ஒன்றாகட்டும்.

ஸ்லோ மெடிசன் என்பது மேற்கத்திய மருத்துவ முறைக்கு இது ஒரு மாற்றுப் பார்வை. உங்களை வெறும் ஒரு நோயாளியாகப் பார்க்காமல், மனம், உடல், ஆத்மா கலந்த ஒரு முழு மனிதனாகப் பார்ப்பதுதான் இது. அக்குபஞ்சர், தியானம், அரோமாதெரபி போன்ற ஹோலிஸ்டிக் முறைகளை மருத்துவரோடு கலந்துஆலோசியுங்கள். உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் ஒரு டாக்டரைத் தேடிப் பிடியுங்கள். உடல் நலமும் மன நலமும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்! இன்றைய நிலையில் ஸ்லோ மெடிசன் என்பதும் ஆரோக்கியத்திற்கான ஒரு சூத்திரம்தான்.

ஜிம்மில் போய் உயிரைப் போக்கிக்கொள்ளும் ஹைஇன்டென்சிட்டி வொர்க்அவுட்கள் இப்போது அவுட்டேட்டட். யோகா, தாய்சி, பைலேட்ஸ் போன்றவை உங்கள் உடலின் நெகிழ்வுத்தன்மையையும் வலிமையையும் கூட்டும். அல்லது ஓர் அமைதியான நடைப்பயிற்சி, மெதுவான நீச்சல் இது கூட போதும். ஒர்க்அவுட்டைப் பொருத்த வரையில் இதுதான் தற்போதைய பின்பற்ற வேண்டிய சூத்திரம். வியர்த்து விறுவிறுத்து ரிசல்ட் தேடுவதை விட, உங்கள் உடலோடு நீங்கள் ஓர் ஆழமான கனெக்சனை உருவாக்குவதுதான் முக்கியம்.

அழகு என்பது வெளியில் பூசிக்கொள்வது மட்டுமல்ல, உள்ளே நீங்கள் உணர்வது. அவசரம் அவசரமாகச் செய்யும் எந்தக் காரியமும் நிலைக்காது. அது மேக்கப்பாக இருந்தாலும் சரி, ஆரோக்கியமாக இருந்தாலும் சரி!

இன்று இரவு தூங்குவதற்கு முன்னால், அந்தப் பத்து அடுக்கு கிரீம்களைத் தவிர்த்துவிட்டு, வெறும் முகத்தைக் கழுவிவிட்டு ஒரு நிமிடம் கண்ணாடியில் உங்கள் முகத்தை உற்றுப் பாருங்களேன். உங்கள் நிஜமான அழகு அங்கிருந்து தொடங்கட்டும்!

*****

No comments:

Post a Comment