Sunday, 24 May 2026

மெல்ல மெல்ல ஒரு மெகா ரீபூட்!

மெல்ல மெல்ல ஒரு மெகா ரீபூட்!

உங்கள் காலை எப்படி ஆரம்பிக்கிறது?

அலாரத்தை ஸ்னூஸ் பண்ணிவிட்டு, கடைசி நிமிடம் வரை தூங்கி, அப்புறம் பதறி அடித்து எழுந்து, அவசர அவசரமாக உடுத்திய கோலத்துடனும், கையில் ஒரு பேப்பர் கப் காபியுடனும் ஓடுகிறீர்களா?

ஆபீஸில் ஒரு முடிவே இல்லாத ஒர்க் லிஸ்ட்டைப் பார்த்து ரத்த அழுத்தத்தை ஏற்றி, வீட்டுக்கு வந்ததும் டிவி முன்னால் அல்லது போனில் ஸ்க்ரோல் செய்துவிட்டு, அரைகுறைத் தூக்கத்தில் விழுகிறீர்களா?

அப்படி இருந்தால், கொஞ்சம் ப்ரேக் போடுங்கள்.

உங்கள் வாழ்க்கையை நீங்கள் ரசிக்க ஆரம்பிக்க வேண்டிய நேரம் இது.

நாம் முன்பே சொன்னபடி, வாழ்க்கை என்பது ஒரு 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் அல்ல, அது ஓர் அழகான நடைப்பயிற்சி.

இந்த ஸ்லோ லிவ்விங் தத்துவம் உங்களுக்குச் சொல்லித்தருவது ஒன்றே ஒன்றுதான். அது ஒவ்வொரு செயலிலும் ஒரு அர்த்தத்தைத் தேடுங்கள் என்பதுதான்.

பங்குச்சந்தையில் முதலீடு செய்வதை விட, உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் செலவிடும் நேரத்திற்கு ரிட்டர்ன்ஸ் அதிகம். அவர்களுடன் உரையாடுங்கள், அவர்களுக்கு நேரம் ஒதுக்குங்கள். அவர்களிடம் உங்கள் மனதைத் திறந்து காட்டுங்கள். உங்கள் மனம் லேசாக ஆவதுடன், வாழ்க்கையும் லேசாகி ஆகாயத்தில் இறக்கைக் கட்டிப் பறக்கும்.

உங்கள் வீட்டை ஒரு குப்பைத் தொட்டியாக மாற்றாமல், ஓர் அமைதியான மண்டலமாக மாற்றுங்கள். வேலைக்கும் ஓர் எல்லையை வகுத்துக் கொள்ளுங்கள். எபபோது பார்த்தாலும் வேலை வேலை என்று ஓடுவதை நிறுத்துங்கள். அந்த வேலைக்கு இடையே ஒரு பத்து நிமிடம் எதையும் செய்யாமல் நடந்ததையெல்லாம் ஒரு படம் போல மனதில் ஓட்டிப் பாருங்கள்.

நாம் சாப்பிடும்போது சாப்பாட்டின் ருசியை அறிவதில்லை, டிவியைப் பார்க்கிறோம். தூங்கும்போது நாளை என்ன நடக்கும் என்று கவலைப்படுகிறோம்.

கஷ்டப்பட்டு உழைப்பது எதற்காக? வயிறார சாப்பிடவும், வாழ்க்கையை மகிழ்ச்சியாக அமைத்துக் கொள்ளவும்தானே. சந்தோசமாகச் சாப்பிடுங்கள். சந்தோசமாக இருப்பதற்கு ஓர் அரை மணி நேரம் ஒதுக்கிக் கொள்வதில் தப்பே இல்லை.

உங்கள் உணவை மெதுவாக மென்று, அதன் ஒவ்வொரு சுவையையும் ரசிப்பது ஒரு தியானம். அப்போது டிவியோ, மொபைலோ பக்கத்தில் வேண்டவே வேண்டாம்.

ஒரு மரத்தைப் பார்ப்பதோ, பறவைகளின் சத்தத்தைக் கேட்பதோ உங்கள் மூளையின் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களைக் குறைக்கும் என்று உளவியல் சொல்கிறது. இப்படி உங்கள் மனதுக்குச் சந்தோசம் தரும் ஒன்றுக்காக நீங்கள் தினம் அரை மணி நேரம் தாராளமாகச் செலவு செய்யலாம்.

வாழ்க்கையின் பெரிய வெற்றிகளை விட, அந்தச் சின்னச் சின்ன சந்தோஷங்களில்தான்  நிம்மதி ஒளிந்திருக்கிறது. ஒரு நல்ல புத்தகம், ஒரு சூடான குளியல், அல்லது யாரிடமாவது மனவிட்டுப் பேசுவது இவைதான் உங்களை ஒரு ஹாப்பியர் யூ ஆக மாற்றப்போகின்றன.

அதனால், சின்ன சின்ன வெற்றிகள்தானே, சின்ன சின்ன சந்தோஷங்கள்தானே என்று அவற்றைப் புறக்கணிக்காதீர்கள். அவைதான் உங்களின் எனர்ஜி பூஸ்டர்கள்.

வாழ்க்கையில் எல்லாம் நிதானமாகத்தான் ஆரம்பிக்கின்றன. நிதானமே பிரதானம். இதைப் புரிந்து கொண்டு நீங்களும் உங்களை ஒர் அழுத்தமில்லாத, மகிழ்ச்சியான மனிதராக மாற்றிக் கொள்ளுங்கள், மெல்ல மெல்ல. ஆனால் உறுதியாக!

இன்று இரவு தூங்குவதற்கு முன்னால், உங்கள் போனை இன்னொரு அறையில் வைத்துவிட்டு, உங்களுக்குப் பிடித்த ஒரு பழைய பாட்டை முழு கவனத்துடன் பாடிப் பாருங்களேன். அல்லது, உங்களுக்குப் பிடித்த புத்தகத்தைச் சில பக்கங்கள் படியுங்களேன். உங்கள் ஸ்லோ லிவிங் பயணம் அங்கிருந்து தொடங்கட்டும்!

*****

No comments:

Post a Comment