Monday, 11 May 2026

மூவிங் மெடிடேஷன் – பாத்திரம் கழுவினாலும் ஒரு பரவசம்!

மூவிங் மெடிடேஷன் – பாத்திரம் கழுவினாலும் ஒரு பரவசம்!

தவம் செய்ய இமயமலைக்குப் போக வேண்டும் அல்லது பத்மாசனத்தில் அமர்ந்து கண்ணை மூடிக் கொள்ள வேண்டும் என்பதெல்லாம் பழைய மாடல். இப்போது டிரெண்டில் இருப்பது மெடிடேஷன் இன் மோஷன். அதாவது, நடந்துகொண்டே, வேலை செய்துகொண்டே செய்யும் தியானம்.

நீங்கள் வாசலில் பேப்பர் எடுக்க நடக்கும்போது அல்லது அடுக்களையில் பாத்திரம் கழுவும்போது கூட உங்கள் ரத்த அழுத்தத்தைக் குறைக்க முடியும் என்கின்றன சமீபத்திய ஆய்வுகள்.

ஆற்றங்கரையில் அமர்ந்து ஆற்றில் இலைகள் மிதந்து போவதைப் பார்ப்பது போல, உங்கள் எண்ணங்களை ஓட விடுங்கள். அந்த எண்ணத்தோடு நீங்களும் ஆற்றில் அடித்துச் செல்லப்படாமல், கரையில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பதுதான் மைண்ட்புல்னஸ் என்கிறார்கள்.

இதில் மூளைக்குள் நடக்கும் கெமிஸ்ட்ரி என்ன தெரியுமா?

அறிவியல் ரீதியாக, நீங்கள் கவனத்துடன் ஒரு வேலையைச் செய்யும்போது உங்கள் நியூரோ ட்ரான்ஸ்மிட்டர் அமைப்புகள் மாறுகின்றன. மூளையின் ஒர்க்கிங் மெமரி கூடுகிறது. ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் சரண்டர் ஆகின்றன.

உண்மை என்னவென்றால், உங்கள் மூடை மாற்ற வேண்டுமா? உங்களுக்கு உடனே உற்சாகம் வேண்டுமா?

5 நிமிடம் போதும்!

இந்தச் சின்ன டெக்னிக்குகளைப் பண்ணிப் பாருங்கள்:

எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு உங்கள் பாதங்களைக் கவனியுங்கள். தரையில் பாதம் படும் உணர்வை ரசியுங்கள். விரல்களை லேசாக அசைத்துப் பாருங்கள். கவனம் பாதத்திற்கு மாறும்போது, மூளை தானாகவே ரிலாக்ஸ் மோடுக்கு மாறிவிடும்.

4 விநாடி மூச்சை உள்ளே இழுங்கள். 7 விநாடி நிறுத்துங்கள். 8 விநாடி மெதுவாக வெளியே விடுங்கள். இது உங்கள் நரம்பு மண்டலத்தை ரீசெட் செய்யும் சுவிட்ச்.

காலையில் காபி குடிக்கும்போது வெறும் 30 விநாடி, அந்த சூடு, மணம், நாக்கில் படும் சுவை என இதை மட்டும் கவனியுங்கள்.

மனம் அலைபாயும்போது உங்களை நிகழ்காலத்திற்கு கொண்டு வர இது ஒரு சூப்பர் பார்முலாவும் இருக்கிறது. அது இதுதான்,

5 விஷயங்களைப் பாருங்கள்.

4 விஷயங்களைத் தொட்டு உணருங்கள்.

3 சத்தங்களைக் கேளுங்கள்.

2 வாசனைகளை நுகருங்கள்.

1 சுவையை உணருங்கள்.

இந்த சிம்பிள் பயிற்சி உங்கள் மூளையில் மகிழ்ச்சியைத் தூண்டும் பகுதிகளை ஆக்டிவேட் செய்கிறது.

ஒரு நாளைக்கு வெறும் 10 நிமிடம் மைண்ட்புல்லாக இருந்தால் போதும், டிப்ரஷன் ஓடிவிடும். நீங்கள் எவ்வளவு நேரம் செய்கிறீர்கள் என்பதை விட, எவ்வளவு தொடர்ச்சியாக செய்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.

மைண்ட்புல்னஸில் கொஞ்சம் கிரியேட்டிவிட்டியைக் கலந்தால் அது ஒரு பழக்கமாகவே மாறிவிடும் என்கிறார்கள். உங்களிடம் கிரியேட்டிவிட்டிக்கா பஞ்சம்?

பாத்திரம் கழுவும்போது சோப்பு நுரை கையில் படும் உணர்வையோ அல்லது நடக்கும்போது காற்று முகத்தில் படும் சிலிர்ப்பையோ கவனிக்கத் தொடங்குங்கள்.

வாழ்க்கை என்பது ஒரு பெரிய ஓட்டம் அல்ல. அது சின்னச் சின்னத் தருணங்களின் தொகுப்பு.

10 நிமிடம் தியானம் செய்ய நேரமில்லை என்று சொல்பவர்களுக்காகவே இந்த மூவிங் மெடிடேஷன். எனவே, பாத்திரம் கழுவுவது இனி பாரமல்ல, அது ஒரு பரவசம்!

*****

No comments:

Post a Comment