பாஸ்ட் லைப்பை ஸ்லோவாக மாற்றித் தக்க
வைத்தல்!
காலையில்
கண் விழித்ததும் ஒரு கப் பேனிஸ்ட் காபி, பிறகு கொலம்பியாவிலிருந்து வந்த வாழைப்பழம்,
டிசம்பர் மாத குளிரில் ஜொலிக்கும் ஸ்ட்ராபெர்ரி. கேட்க நன்றாகத்தான் இருக்கிறது.
நவீன
விவசாயமும், லாஜிஸ்டிக்ஸ் துறையும் உலகத்தையே ஒரு சின்ன சூப்பர் மார்க்கெட் குடைக்குள்
கொண்டு வந்துவிட்டன. ஆனால், இதற்காக நாம் கொடுக்கும் விலை என்ன தெரியுமா? வெறும் ரூபாய்
நோட்டுகள் மட்டுமல்ல, நம் ஆரோக்கியம் மற்றும் இந்த பூமியின் ஆயுளும்தான்!
எல்லாம்
கிடைக்கிறது சார், அப்புறம் என்ன? என்று கேட்கும் டெக் தலைமுறைக்கு ஒரு சின்ன ஷாக்
ட்ரீட்மென்ட் இதோ.
முன்பெல்லாம்
மாம்பழம் என்றால் கோடை காலம், நெல்லிக்காய் என்றால் குளிர் காலம் என்று ஒரு கணக்கு
இருந்தது.
இன்று?
ஜூன்
மாதத்தில் ஆப்பிள் கிடைக்கிறது, ஜனவரியில் மாம்பழம் கிடைக்கிறது. இயற்கையின் ரிதத்தை
நாம் உடைத்து எறிந்துவிட்டோம். ஆனால், இது சரியல்ல. சீசன் பார்த்துச் சாப்பிடுவதே நல்லது.
நிச்சயமாக
இந்த நிலையை மாற்றுவதுதான் புத்திசாலித்தனம். ஏன் மாற்ற வேண்டும் என்றால்,
குளிர்
காலத்தில் உள்ளூர் காய்கறிகளை விட்டுவிட்டு, எங்கோ ஒரு கிரீன் ஹவுஸில் கஷ்டப்பட்டு
வளர்க்கப்பட்ட தக்காளியை வாங்கினால் விலை இரட்டிப்பாகத்தான் இருக்கும். சீசன் காலத்தில்
பொருட்கள் அதிகமாகக் கிடைக்கும்போது விலை குறையும். இது சிம்பிள் டிமாண்ட் சப்ளை லாஜிக்.
ஒரு
சர்வேயில் வெளியான அதிர்ச்சியான தகவல் என்னவென்றால், 25 சதவீத லண்டன் குழந்தைகளுக்கு
கேரட் பூமிக்கு அடியில் வளரும் என்றே தெரியவில்லையாம்! லண்டனுக்கே இந்த நிலைமை என்றால்,
நம் நாட்டிலும்தான் அரிசி எந்த மரத்தில் காய்க்கிறது என்று கேள்வி கேட்கும் குழந்தைகள்
இருக்கிறார்கள். நாம் உணவிலிருந்து எவ்வளவு தூரம் விலகி வந்துவிட்டோம் என்பதற்கு இதுவே
சாட்சி.
உள்ளூர்
சந்தையில் விவசாயியிடம் பேசி வாங்குவதில் ஒரு பர்சனல் டச் இருக்கிறது. அங்கேயே ஒரு
ரெசிபி டிப்ஸ் கிடைக்கும். அந்தத் தக்காளிக்கு ஒரு மணம் இருக்கும். சூப்பர் மார்க்கெட்டில்
மெழுகி வைக்கப்பட்ட ஆப்பிளுக்கு அந்த மணம் இருக்குமா? சந்தேகம்தான்!
உணவு
போலவே உடையும் இன்று பாஸ்ட் ஆகிவிட்டது. வாராவாரம் ஒரு புது கலெக்சன்.
ஓர்
ஆடையின் ஆயுளை ஒரு வருஷத்திலிருந்து இரண்டு வருஷமாக நீட்டித்தால், உலக அளவில் மாசு
வெளியேற்றம் 24 சதவீதம் குறையும் என்கிறது ஒரு கணக்கு. கிழிந்து விட்டது என ஓர் ஆடையை
மாற்றாமல் ஓர் ஊசி, ஒரு நூல் இரண்டையும் கையில் எடுததால், இதுதான் இப்போது புரட்சிக்கான
ஆயுதம்!
நீங்கள்
சுற்றுச்சூழல் போராளியாகித் தீவிரமாக இயங்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை. பேஷன் பழையதாகி
விட்டது என்று ஓர் ஆடையைத் தூக்கிப் போடாமல் அதன் ஆயுளை நீட்டித்தால், நீங்கள் பூமியின்
ஆயுளையும் நீட்டிக்கிறீர்கள் என்று அர்த்தம். நீங்களும் தீவிரமான சுற்றுச்சூழல் போராளியாகி
விட்டீர்கள் என்பதன் தொடக்கம் அது.
உணவாக
இருந்தாலும் சரி, உடையாக இருந்தாலும் சரி குறைவாக வாங்குங்கள், தரமானதாக வாங்குங்கள்.
தரமான ஒரு பொருள் பத்து மலிவான பொருட்களுக்குச் சமம்.
அடுத்த
முறை சூப்பர் மார்க்கெட் போனால், சீசன் இல்லாத பழங்களை ஆசையோடு பார்க்காதீர்கள். அந்தப்
பக்கத்துத் தெரு விவசாயி வைத்திருக்கும் வளைந்த கத்தரிக்காயைப் பாருங்கள். அதில் ஒரு
நேர்மையும், ருசியும் ஒளிந்திருக்கும்.
துணிக்கடைக்குப்
போனால் அவசர அவசரமாகப் புது பேஷன் என்று துணிகளை அள்ளிப் போட்டுக் கொண்டு வராதீர்கள்.
வீட்டில் வாங்கி வைத்திருக்கும் துணிகளை நினைத்துப் பாருங்கள். பர்சேஸ்க்கு ஒரு கடிவாளம்
போடுங்கள்.
மெல்ல
மெல்ல மாறுவோம். ஏனென்றால், உலகம் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. நாம் கொஞ்சம் மெதுவாகப்
போய்தான் அதைக் காப்பாற்ற வேண்டும்!
*****

No comments:
Post a Comment