Sunday, 10 May 2026

அண்டர்கிரவுண்ட் ஆர்ட் – டிக்கெட் தேவையில்லாத மியூசியங்கள்!

அண்டர்கிரவுண்ட் ஆர்ட் – டிக்கெட் தேவையில்லாத மியூசியங்கள்!

நமக்குத் தெரிந்த சுரங்கப்பாதைகள் எல்லாம் எப்படி இருக்கும்? கச்சடா வாசனை, கசகசப்பான கூட்டம், சுவர்களில் யாராவது கரியால் கிறுக்கி வைத்திருக்கும் ஆபாச வசனங்கள். ஆனால், உலகின் சில மூலைகளில் தரைக்கு அடியில் ஒரு கலாச்சாரப் புரட்சி நடந்து கொண்டிருக்கிறது.

அங்கே நீங்கள் ரயிலுக்காகக் காத்திருக்க வேண்டாம், ஓவியங்களைப் பார்க்கவே ரயிலைத் தவற விடலாம்!

ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் மெட்ரோ சிஸ்டம்தான் இதற்கு பெஞ்ச்மார்க். அங்கே இருக்கும் 100 ஸ்டேஷன்களில் 90க்கும் மேற்பட்டவை கலைக்கூடங்களாக மாற்றப்பட்டுவிட்டன. சுமார் 150 கலைஞர்கள் இந்தச் சுரங்கச் சுவர்களைத் தங்கள் கேன்வாஸாக மாற்றி வருகிறார்கள். மியூசியத்திற்குள் காலடி எடுத்து வைக்காத பாமரனுக்கும் கலை போய்ச் சேர வேண்டும் என்பதுதான் இதன் லாஜிக்.

நியூயார்க் மெட்ரோவிலும் ஓர் ஆர்ட்ஸ் மற்றும் டிசைன் புரோகிராம் இருக்கிறது. அங்கே மேஸ்ட்ரான்சிஸ்கோப் என்றொரு மேஜிக் உண்டு. ரயில் ஒரு பழைய கைவிடப்பட்ட ஸ்டேஷனைக் கடக்கும்போது, ஜன்னல் வழியாகப் பார்த்தால் ஒரு சினிமா ஓடுவது போலத் தெரியும். ஜோட்ரோப் என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இதை உருவாக்கியிருக்கிறார்கள்.

மேன்ஹாட்டன் தெரு ஸ்டேஷனில் செதுக்கப்பட்டிருக்கும் 680 சதுர அடி பறவை மொசைக்கைப் பார்த்தால், நீங்கள் ஒரு கான்கிரீட் காட்டில் இருக்கிறீர்கள் என்பதே மறந்து போகும்.

மாஸ்கோவின் நோவோஸ்லோபோட்ஸ்கயா ஸ்டேஷனில் இருக்கும் 32 வண்ணக் கண்ணாடி ஓவியங்கள் உங்களை ஏதோ ஒரு பழைய கதீட்ரல் தேவாலயத்திற்குள் இருப்பது போன்ற பிரமையை உண்டாக்கும்.

இத்தாலியின் டொலிடோ ஸ்டேஷன் ஓர் அண்டர்வாட்டர் அனுபவம். அங்கே இருக்கும் நீல நிற மொசைக்குகளும், ஒளி அமைப்புகளும் நீங்கள் கடலுக்கு அடியில் இருப்பதாக உணர வைக்கும். இது வெறும் மியூசியம் அல்ல, நம் காலத்தின் சாட்சி என்கிறார் இதன் கலை ஒருங்கிணைப்பாளர்கள்.

நார்வேயில் இருக்கும் பதினைந்து மைல் நீளமுள்ள லேர்டல் சுரங்கப் பாதையில் ஓட்டுநர்களுக்கு ஏற்படும் களைப்பையும், க்ளாஸ்ட்ரோபோபியா எனும் மூடிய இடத்தைக் கண்டால் வரும் பயம் மற்றும் மனக்கவலையையும் போக்க விசேஷமான லைட் ஆர்ட் வைத்திருக்கிறார்கள்.

பாரிஸில் இருக்கும் ஒரு ஸ்டேஷனோ முழுதாகச் செப்புத் தகடுகளால் வேயப்பட்டு, ஏதோ ஒரு சயின்ஸ் பிக்சன் நாவலுக்குள் இருப்பது போன்ற ஸ்டீம்பங்க் அழகியலில் மின்னுகிறது.

கலை என்பது வெறும் வெள்ளைச் சுவர்களுக்குள் மாட்டப்பட்டிருக்கும் விலை உயர்ந்த சட்டங்கள் அல்ல. அது சராசரி மனிதனின் அன்றாடப் பயணத்தை அழகாக்கும் ஒரு கருவி. இப்போது நம் நாட்டிலும் இது போன்ற முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.

அடுத்த முறை நீங்கள் ஏதோ ஒரு சுரங்கப்பாதையில் செல்லும்போது சுவர்களைக் கவனியுங்கள். அங்கே ஒரு கலைஞன் உங்களுக்காகக் காத்திருக்கலாம்!

*****

No comments:

Post a Comment