சிரிப்பு – ஒரு சூப்பர் பவர் மருந்து!
ஆஸ்பத்திரி என்றாலே நம் நினைவுக்கு வருவது
அந்த நீல நிறப் போர்வைகள், டெட்டால் வாசனை, அப்புறம் பரபரப்பாக இருக்கும் நர்ஸ்கள்.
சீரியசான டாக்டர் முகம். இப்படிப்பட்ட சூழலில், உள்ளே ஒரு கோமாளி எனும் கிளவுன் நுழைந்தால்?
இடுப்பில் ஸ்டெதாஸ்கோப்புக்குப் பதில் ஒரு
பிளாஸ்டிக் தக்காளி. கையில் ஊசிக்குப் பதில் ஒரு பலூன். இதைப் பார்ப்பதற்கே ஒரு தெரபி
வேண்டும். இதற்குப் பெயர்தான் மெடிக்கல் கிளவுனிங்.
இந்த விசித்திரமான ஐடியாவை முதலில் ஆரம்பித்தவர்
டாக்டர் ஹண்டர் பேட்ச் ஆடம்ஸ்.
சிரிப்புதான் மிகச்சிறந்த மருந்து, என்று சும்மா
பழமொழி சொல்லாமல், ஆடம்ஸ் நிஜமாகவே ஒரு சிகப்பு மூக்கை மாட்டிக்கொண்டு வார்டுக்குள்
நுழைந்தார். இன்று இது ஓர் அங்கீகரிக்கப்பட்ட புரொபஷனல் படிப்பு.
இந்தத் துறையின் இன்னொரு விவிஐபி மைக்கேல்
கிறிஸ்டென்சன். குழந்தைகள் ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டியவர்கள் அல்ல, கோமாளிகளும்
அப்படித்தான், என்பது அவர் லாஜிக்.
நாங்கள் அங்கே போய் சைக்காலஜி பேசப்போவதில்லை,
ஒரு குழந்தையின் கண்களில் இருக்கும் அந்தச் சிறு ஆச்சரியப் பொறியைப் பிடித்துப் பெரிதாக்குகிறோம்,
அவ்வளவுதான், என்கிறார் மனிதர்.
சும்மா சிரிப்புக்காகச் சொல்லவில்லை, இதில்
பியூர் சயின்ஸ் இருக்கிறது.
எப்படி என்கிறீர்களா?
ஆராய்ச்சிகளின் படி, தூங்குவதற்கு முன் இந்த
கிளவுன் டாக்டர்களுடன் விளையாடும் குழந்தைகளுக்குத் தூக்கம் பிரமாதமாக வருகிறதாம்.
சிரிக்கும்போது மூளையில் எண்டார்பின் சுரக்கிறதாம்.
இது வலியைக் குறைக்கும் ஒரு இயற்கை அனஸ்தீசியா.
இஸ்ரேலில் உள்ள எல்லாப் பெரிய ஆஸ்பத்திரிகளிலும்
100க்கும் மேற்பட்ட கிளவுன்கள் இருக்கிறார்கள். அங்கே குழந்தைகள் டாக்டரைத் தேடுவதில்லை,
இந்த ஜோக்கர்களைத்தான் தேடி ஓடுகிறார்கள்.
அதே நேரத்தில் ஆஸ்பத்திரியில் யாரோ ஒருத்தர்
கோமாளி போல டிரஸ் பண்ணிக்கொண்டு வந்து குதிப்பது கிளவுனிங் ஆகாது. இதற்குப் பயங்கரமான
டிரெய்னிங் உண்டு. கடுமையான ஆடிஷன், இன்டர்ன்ஷிப், நூற்றுக்கணக்கான மணிநேர மெடிக்கல்
புரோட்டோகால் வகுப்புகள் என்ற இது பக்கா புரொபஷனல்.
ஒரு சீரியஸான பேஷண்ட்டிடம் எப்படிப் பேச வேண்டும்
என்பதோடு, அந்த மருத்துவ அறையின் வைப் என்ன என்பதை அவர்கள் துல்லியமாக உணர்ந்திருக்க
வேண்டும். இவர்கள் தங்களது சிரிப்பு மூலம் பெரிய சிகிச்சைகளைக் கூட ஒரு விளையாட்டாக
மாற்றிவிடுவார்கள்.
மருந்துகள் உடலைக் குணப்படுத்தும். ஆனால்,
சிரிப்பு மனதைக் குணப்படுத்தும். அடுத்த முறை ஆஸ்பத்திரியில் யாராவது சிகப்பு மூக்கோடு
அலைந்தால் கிண்டல் செய்யாதீர்கள். அவர் ஓர் உயிர்காக்கும் கோமாளி!
எல்லா நோய்களுக்கும் சிரிப்பு ஒரு நல்ல மருந்து
என்பார்கள் நம் முன்னோர்கள். திருவள்ளுவரும் இடுக்கண் வருங்கால் நகுக என்பார். இப்போது
ஆஸ்பத்திரிகளிலும் அதையே கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.
*****

No comments:
Post a Comment