Tuesday, 5 May 2026

யான் பாம்பிங் – கம்பளிப் புரட்சி!

யான் பாம்பிங் – கம்பளிப் புரட்சி!

தெருவோரக் கலை என்றாலே நம் நினைவுக்கு வருவது ஸ்ப்ரே பெயிண்ட்டும், சுவர்களில் கிறுக்கப்பட்டிருக்கும் விசித்திரமான எழுத்துக்களும்தான். ஆனால், டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரில் ஒரு பெண் யோசித்தார். அவர் கையில் பெயிண்ட் டப்பா இல்லை, கம்பளி நூலும் ஊசியும்தான் இருந்தது.

அவர் பெயர் மாக்டா சேயக். தன் துணிக்கடையின் வாசலில் இருந்த அந்த மொக்கையான இரும்பு கைப்பிடிக்கு ஓர் அழகான உறையைப் பின்னி மாட்டினார். அவ்வளவுதான், உலகமே இன்று இந்த மென்மையான கலையில் கிறங்கிக் கிடக்கிறது. இதற்குப் பெயர் யான் பாம்பிங்.

இக்கலை சாதாரண கிராபிட்டி போலச் சுவரைப் பாழாக்காது. பிடிக்கவில்லையா? கத்தரிக்கோலால் ஒரு கட் கொடுத்தால், பழைய இரும்பு கம்பியே வந்துவிடும்.

யான் பாம்பிங் இத்தோடு நின்று விட வில்லை. அது,

மரங்களுக்கு ஸ்வெட்டர் போடுவது,

சைக்கிள் நிறுத்துமிடத்திற்கு ரெயின்போ கோட் மாட்டுவது,

பூங்கா பெஞ்சுகளுக்கு கம்பளி மெத்தை தைப்பது என்று நீள்கிறது.

இதுதான் இந்த ஆர்ட்டின் பாணி.

ஒரு ஸ்டாப் சிக்னல் போஸ்ட் கம்பளி ஆடை உடுத்தியிருப்பதைப் பார்க்கும்போது நமக்கும் அதற்குமான ஒரு விசித்திரமான கனெக்சன் உருவாகிறது பாருங்கள். அதுதான் இதன் மேஜிக்!

சில சமயம் இது ஒரு மாபெரும் திருவிழாவாக மாறிவிடுகிறது.

பிட்ஸ்பர்க்கில் இருக்கும் ஆண்டி வார்ஹோல் பாலத்தையே கம்பளியால் போர்த்தினார்கள். இதுதான் உலகிலேயே பெரிய யான் பாம்.

நியூயார்க்கில் ஒரு பெட்ரோல் பங்கையே 600 யார்டு துணிகளால் அலங்கரித்து ஒரு மியூசியம் போல மாற்றினார்கள்.

இங்கே தனிமனிதர் முக்கியமில்லை, ஒரு குழுவாக அமர்ந்து மாதக்கணக்கில் பின்னி, ஒரே நாளில் ஓர் ஊரையே கலர்புல் ஆக்குவதில் இருக்கும் அந்தத் திரில்தான் ஹைலைட்.

இது வெறும் அலங்காரம் மட்டும் அல்ல, ஒரு போராட்டக் கருவியாகவும் கூட பயன்படுகிறது. எப்படி என்கிறீர்களா?

மரங்களை வெட்டப் போகிறார்களா? அந்த மரத்திற்கு அழகான கம்பளி சட்டையைப் போடுங்கள். அப்படி, டெக்சாஸின் மாண்ட்ரோஸ் பகுதியில் முதிர்ந்த ஓக் மரங்களை வெட்ட எதிர்ப்புத் தெரிவித்து அவற்றை யான் பாம்பிங் மூலம் காப்பாற்றப் போராடியிருக்கிறார்கள். கம்பளி பின்னுவது ஏதோ பாட்டிகளுக்கு உரிய வேலை என்று நினைத்தவர்களுக்கு, இது ஒரு புரட்சிக்கலை என்று நிரூபித்துவிட்டார்கள் அந்தக் கலைஞர்கள்.

சிமெண்ட் காடுகளுக்குள் நாம் தொலைத்துக் கொண்டிருக்கும் வாழ்க்கையை, ஒரு நூலால் மீட்டெடுக்க முடியும் என்பது எவ்வளவு பெரிய ஆச்சரியம்!

உங்கள் வீட்டு வாசலில் இருக்கும் கம்பம் இன்று காலையில் திடீரென கலர்புல் ஸ்வெட்டர் போட்டிருந்தால் ஆச்சரியப்படாதீர்கள். அது ஒரு மென்மையான யுத்தம்!

இதற்காகப் புதிய துணிகளை, புதுப்புது நூல்களை வாங்க வேண்டும் என்று அவசியமில்லை. பழைய பயன்படாத துணிகளைக் கூட மீளுருவாக்க முறையில் பயன்படுத்தலாம். கொஞ்சம் மூளையைத் தட்டி விட்டால் ஐடியாவுக்கா பஞ்சம்?

ஒரு சின்ன கலை உலகையும் மனதையும் மாற்றுமானால், அதை முயன்று பார்ப்பதில் என்ன தவறு இருக்கப் போகிறது? முயன்று பாருங்களேன். உங்கள் ஊரிலும் ஒரு புரட்சியோ, மாற்றமோ உருவாகட்டும்.

*****

No comments:

Post a Comment