சந்தோஷம் – எக்ஸ்பெக்ட் தி அன்எக்ஸ்பெக்டட்!
வாழ்க்கை ஒரு விசித்திரமான லாட்டரி. நாம் பிரம்மாண்டமான
கொண்டாட்டங்களிலும், விலையுயர்ந்த பார்ட்டிகளிலும் தேடிக்கொண்டிருக்கும் ஹேப்பினஸ்,
உண்மையில் ஒரு பழைய சந்தின் மூலையிலோ அல்லது அழுக்கு படிந்த நடைபாதையிலோ நமக்காகக்
காத்திருக்கலாம்.
சந்தோஷம் என்பது ஒரு ஹைடெக் மென்பொருள் அல்ல,
அது நம் அன்றாட வாழ்வின் துணிகளில் தைக்கப்பட்டிருக்கும் ஒரு சிறு கிழிசல் வழியே எட்டிப்பார்க்கும்
சூரிய ஒளி.
மொட்டை மரங்களுக்கு யாரோ ஒருவர் ஆசையாகப் பின்னிய
கம்பளி சட்டையை மாட்டி விடுகிறார். ஒரு சலிப்பான சிட்டி சாலை, சட்டென்று ஒரு ஆர்ட்
கேலரியாக மாறுகிறது. இதை யான் பம்பிங் என்கிறார்கள். இதைப் பற்றி நாளை விரிவாகவே பார்ப்போம்.
கல் சுவர்களுக்குப் பின்னால் இருக்கும் இதயங்கள்
இசையால் கரைகின்றன. அங்கே ராகம் தாளம் பார்க்கத் தேவையில்லை, உணர்வு போதும். அந்த இடமே
மகிழ்ச்சியால் நிரம்புகிறது. இதையும் விரிவாக நாளை மறுநாள் பார்ப்போம்.
வாழ்க்கையில் சில சமயம் நாம் எடுக்கும் ராங்
ரூட் தான் நம்மைச் சரியான இடத்திற்கு இட்டுச் செல்கிறது. இது ஓர் அபத்தம் போன்று தொன்றினாலும்,
சில நேரங்களில் சந்தோஷத்திற்குச் சரியாக செட் ஆகிறது.
அப்படித்தான், ரயில் நிலையத்தில் எதேச்சையாகச்
சந்திக்கும் ஒரு முன்பின் தெரியாத நபர், அடுத்த இருபது வருடங்களுக்கு உங்கள் உற்ற நண்பராக
மாறுகிறார். ரயில் சிநேகிதம் என்று இதைச் சாதாரணமாகக் கூறி விட முடியாது.
உலகம் முழுக்க இதுபோன்ற சின்னஞ்சிறு அற்புதங்கள்
நிறைய சிதறிக் கிடக்கின்றன.
ஆஸ்பத்திரி வாசனையும் ஊசிப் பயமும் நிறைந்த
வார்டுகளில், ஒரு ஜோக்கரின் சிரிப்பு மருந்தை விட வேகமாக வேலை செய்கிறது.
உடைந்து போன மண் பாண்டத்தை தங்கத்தால் ஒட்ட
வைக்கும் ஜப்பானியக் கலையானது விரிசல்கள் பலவீனம் அல்ல, அவை அழகின் அடையாளம் என்பதைச்
சொல்கிறது. மனதுக்கு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தருகிறது.
அண்டர்கிரவுண்ட் மெட்ரோவில் முகம் தெரியாத
மனிதர்கள் சட்டென்று கைகோர்த்து ஆடும் அந்தத் தன்னிச்சையான நடனம் மகிழ்ச்சியைக் கொப்புளிக்கச்
செய்கிறது.
இப்படி நிறைய இருக்கின்றன. ஒவ்வொன்றையும் பற்றி
ஒவ்வொரு நாளாகப் பார்ப்போம்.
ஆக, விசயம் என்னவென்றால், வாழ்க்கை என்பது
ஒரு ப்ரோக்ராம் செய்யப்பட்ட கம்ப்யூட்டர் அல்ல. அது ஓர் அழகான குழப்பம். நீங்கள் எப்போது
மிகச் சோர்வாக, இனி அவ்வளவுதான், என்று நினைக்கிறீர்களோ, அப்போதுதான் மேஜிக் உங்கள்
கதவைத் தட்டும்.
கதவைத் திறந்து வையுங்கள். சந்தோஷம் எதிர்பாராத
நேரத்தில் வரும்!
அது எப்படியெல்லாம் வருகிறது என்பதை ஒவ்வொரு
நாளாகப் பார்ப்போம்.
*****

No comments:
Post a Comment