Wednesday, 6 May 2026

கம்பிக்கு பின்னே ஒரு ராகம் – சிறைச் சாலைகளின் புதிய முகம்!

கம்பிக்கு பின்னே ஒரு ராகம் – சிறைச் சாலைகளின் புதிய முகம்!

ஒரு பள்ளி திறக்கப்படும் போது ஒரு சிறைச்சாலையின் கதவு மூடப்படுகிறது, என்றார் விக்டர் ஹியூகோ.

ஒரு நூலகம் திறக்கப்படும் போது ஒரு சிறைச்சாலையின் கதவு மூடப்படுகிறது, என்றார் விவேகானந்தர்.

இவற்றையும் மீறி சிறைச்சாலைக்குள் சென்றவர்களை மீட்பதற்கு ஏதேனும் வழிகள் இருக்கின்றனவா?

இருக்கின்றன என அடித்துச் சொல்கின்றன சில மனிதநேய முன்னெடுப்புகள்.

ஆம், சிறைச்சாலை என்றாலே நம் ஊர் சினிமாக்களில் காட்டப்படும் அந்த இருட்டு அறைகளும், கஞ்சி வாளிகளும் அல்ல. இப்போது அங்கே மியூசிக் ஆல்பங்களும், மாரத்தான் ஓட்டப்பந்தயங்களும் சத்தமில்லாமல் நடந்து கொண்டிருக்கின்றன. குற்றவாளி என்ற லேபிளைத் தாண்டி மனிதன் என்ற அடையாளத்தை மீட்டெடுக்கும் ஒரு மனிதாபிமான முயற்சி இது.

லண்டனின் வாண்ட்ஸ்வொர்த் சிறையில் ஒரு விசித்திரம். வாராவாரம் அங்கே கைதிகளும், தன்னார்வலர்களும் சேர்ந்து பாடுகிறார்கள். சுமார் 2,500 கைதிகள், 200 ரிகர்சல்கள் என லண்டன் அதிர்கிறது.

அந்த ரிகர்சல் அறையில் இருக்கும் இரண்டு மணி நேரம் நான் ஒரு கைதி அல்ல, நான் ஒரு மனிதன், என்கிறார் அங்குள்ள கைதி ஒருவர். இதில் ஒரு சைக்காலஜி இருக்கிறது. குழுவாகப் பாடும்போது மூளையில் எண்டார்பின் சுரக்கிறது. இது மன அழுத்தத்தைக் குறைத்து, நல்லுணர்வைத் தருகிறது.

அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் ஈஸ்ட் ஹில்ஸ் சிங்கர்ஸ் என்றொரு குரூப். இவர்களின் கதையை கன்டக்டிங் ஹோப் என்று ஆவணப்படமாகவே எடுத்திருக்கிறார்கள்.

ஓஹியோவில் ஹார்மனி ப்ராஜெக்ட் மூலம் வாரம் 1,000 பேருக்கும் மேல் அங்குள்ள சிறைச்சாலையில் பாடுகிறார்கள். இதில் ஹைலைட் என்னவென்றால், சில சமயம் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களே வந்து இவர்களுடன் உரையாடுகிறார்கள். இது ஒரு ஹீலிங் பிராசஸ்.

பாட்டை விட ஒரு படி மேலே போய் கைதிகளுக்கு மராத்தான்களும் நடத்தப்படுகின்றன. கலிபோர்னியாவின் சான் குவென்டின் சிறை. மிகவும் ஆபத்தான கைதிகள் இருக்கும் இடம். அங்கே ஒரு ரன்னிங் கிளப்பை ஆரம்பித்தார்கள்.

சிறை மைதானத்தைச் சுற்றி 105 முறை ஓடினால் ஒரு முழு மாரத்தான் அதாவது, 26.2 மைல்கள் அல்லது 42.1 கி.மீ.

வாராவாரம் திங்கட்கிழமை மாலை ட்ரைனிங்.

இது ஆரம்பித்து பதினைந்து ஆண்டுகள் ஆகி விட்டன. இன்று மூன்று மணி நேரத்திற்குள் மாரத்தானை முடிக்கும் அக்மார்க் அத்லெட்டுகளை இந்தச் சிறை உருவாக்கியிருக்கிறது. கைதிகள் இப்போதெல்லாம் தங்கள் எனர்ஜியை வன்முறைக்குப் பதில் ஓடுவதற்குப் பயன்படுத்துகிறார்கள்!

எப்படி இந்த மாற்றம் நிகழ்கிறது?

சிறை என்பது தண்டனைக்கான இடம் மட்டுமல்ல, அது ஒரு ரீ-புரோகிராமிங் சென்டர்.

புள்ளிவிவரங்கள் என்ன சொல்கின்றன தெரியுமா?

கைதிகளில் பெரும்பாலானோர் சமூகப் பின்னணி மற்றும் வறுமையால் உள்ளே வந்தவர்கள். இதுபோன்ற மியூசிக் மற்றும் ஸ்போர்ட்ஸ் புரோகிராம்களில் பங்கேற்கும் கைதிகள், விடுதலையான பிறகு மீண்டும் குற்றம் செய்து சிறைக்குத் திரும்பும் விகிதம்  பெருமளவு குறைகிறதாம்.

ஒருமுறை பிரிட்டன் மன்னர் சார்லஸ் டார்ட்மூர் சிறைக்குச் சென்றபோது கைதிகளின் பாடலைக் கேட்டு நெகிழ்ந்து போனார். கம்பிக்கு வெளியே இருப்பவர்களுக்கும், உள்ளே இருப்பவர்களுக்கும் இடையே இசை ஒரு பாலத்தை அமைக்கிறது.

வாழ்க்கை ஒரு வட்டம். சில சமயம் அந்த வட்டம் 105 லேப்களைக் கொண்ட மாரத்தான் ட்ராக்காகவும் இருக்கலாம். அங்கே இசையால் நிரம்பும் அறைகளும் இருக்கலாம். மார்க்ஸ் சொன்னது போல, இந்த உலகில் மாற்றம் மட்டுமே மாறாதது. கொஞ்சம் மனிதநேயத்தோடு அணுகினால் இந்த உலகில் மாறாதது எது?

*****

No comments:

Post a Comment