Tuesday 2 May 2023

பனை மரமே! பனை மரமே! – உயிர் நேயத்தின் உன்னதப் பாடல்!

பனை மரமே! பனை மரமே! – உயிர் நேயத்தின் உன்னதப் பாடல்!

“பனை மரமே! பனை மரமே! சிறிய பறவை நான்!” எனத் தொடங்கும் இப்பாடல் குழந்தைகளிடம் எழுப்பும் உணர்வுகள்தான் எத்தனை!

அன்பு, பரிவு, உதவும் மனப்பான்மை, உயிர் நேயம் என்று இப்பாடல் எழுப்பும் உணர்வுகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஒரு சிறகொடிந்த சிறிய பறவை மழைக்காலத்தில் தங்குவதற்காகப் பனை மரத்திடம் அடைக்கலம் கேட்கிறது. பனை மரம் அடைக்கலம் தர மறுக்கிறது. இதைப் பாடல் வரிகளாகப் பாடும் போது பனை மரத்திடம் குழந்தைகளுக்கு உண்டாகும் கோபம் இருக்கிறதே! கோபத்தைக் குழந்தைகளிடம்தான் ரசித்து ரசித்துப் பார்க்கலாம். அப்படிக் குழந்தைகள் கோபப்படுவார்கள் பனைமரத்திடம்.

அந்தச் சிறகொடித்த பறவை தன்னுடைய முயற்சியைத் தளர விடாமல் அடுத்ததாகத் தென்னை மரத்திடம் அடைக்கலம் கேட்கிறது. தென்னை மரமும் அடைக்கலம் தர மறுக்கிறது. இப்போது தென்னை மரத்திடம் குழந்தைகளுக்கு வரும் கோபத்தைப் பார்க்க வேண்டுமே!

மனம் தளராத பறவை இப்போது ஆலமரத்திடம் போய் அடைக்கலம் என்று நிற்கிறது. பனை மரம் போலவோ, தென்னை மரமோ போலவே நடந்து கொள்ளாமல் ஆல மரம் அடைக்கலம் தருகிறது. ஆலமரம் அடைக்கலம் தந்த உடன்  குழந்தைகளிடம் ஏற்படும் சந்தோஷம் இருக்கிறதே. அப்படியே துள்ளிக் குதிப்பார்கள். ‘ஓ’ என்று சத்தமிடுவார்கள். ஆலமரத்தை அவ்வளவு வாழ்த்துவார்கள்.

அடுத்ததாகப் பாடலில்,

மழைக்காலம் வருகிறது.

புயல் காற்று அடிக்கிறது.

சிறகொடிந்த பறவைக்கு உதவாத பனை மரமும் தென்னை மரமும் பெரும் காற்றில் வீழ்கின்றன. உதவிய ஆலமரம் நிலைத்து நிற்கிறது. மென்மேலும் தழைக்கிறது. இப்போது குழந்தைகள் ஆலமரத்திற்காக ஆர்பரிக்கத் தொடங்கி விடுவார்கள்.

இப்படிக் கதையுடன் கூடிய ஒரு பாடலாக அமைந்தது இப்பாடல். நாடகமாக நடித்தும் பாடக் கூடிய தன்மையைக் கொண்டது. இப்பாடல் குழந்தைகள் இயல்பாகப் பாடுவதற்கு உரிய வார்த்தைகளாலும் ஆனது. பாடும் போது வாக்கிய வாசிப்பைப் போன்று எந்த இடத்திலும் துருத்திக் கொண்டு இருக்காது. எப்படிப் பாடினாலும் ஏதோ ஒரு மெட்டுக்குள் வந்து பாடலாகி விடும்.

இந்த ஒரு பாடல் அன்பைக் குறித்த ஆயிரம் கதைகளுக்குச் சமம் என்று சொல்லலாம். உயிர்நேயம் குறித்த குழந்தைகளுக்கான உன்னத கவிதை என்றும் சொல்லலாம்.

சிறு குழந்தைகளுக்கான வகுப்பறைகளில் கட்டாயம் பாட வேண்டிய பாடல் வரிசையில் இந்தப் பாடலையும் சேர்த்துக் கொள்ளலாம். இனி அந்தப் பாடல்…

பனை மரமே! பனை மரமே!

பனை மரமே! பனை மரமே! சிறிய பறவை நான்!

மழைக்காலத்தில் தங்குவதற்கு இடம் தருவாயா?

சிறகொடிந்த பறவைக்கு நான் இடம் தர மாட்டேன்!

சீக்கிரமாய்ப் பறந்து சென்று மறைந்திடுவாயே!

 

தென்னை மரமே! தென்னை மரமே! சிறிய பறவை நான்!

மழைக்காலத்தில் தங்குவதற்கு இடம் தருவாயா?

சிறகொடிந்த பறவைக்கு நான் இடம் தர மாட்டேன்!

சீக்கிரமாய் ஓடிச் சென்று மறைந்திடுவாயே!

 

ஆல மரமே! ஆல மரமே! சிறிய பறவை நான்!

மழைக்காலத்தில் தங்குவதற்கு இடம் தருவாயா?

சிறகொடிந்த பறவைக்கு நான் இடம் தருவேனே!

சீக்கிரமாய்ப் பறந்து வந்து அமர்ந்து கொள்வாயே!

 

அன்றொரு நாள்

மேகம் கருத்தது

மின்னல் மின்னியது

இடி இடித்தது

பலத்த காற்று வீசியது

பலத்த மழை பெய்தது

 

சிறகொடிந்த பறவைக்கு இடம் தராத

பனைமரமோ வேரோடு சாய்ந்ததாம்

தென்னை மரமோ அடியோடு வீழ்ந்ததாம்

இடம் தந்த ஆலமரமோ நிலைத்து நின்றதாம்

செழித்து வளர்ந்ததாம்

பறவைகளெல்லாம் வந்து வாழ்த்தியதாம்

வாழ்வாங்கு வாழ்ந்ததாம்

*****

No comments:

Post a Comment