குழந்தைகளுக்குச் சேமிக்கவும் முதலீடு செய்யவும் கற்றுக் கொடுங்கள்!
குழந்தைகளிடம் சேமிப்புப்
பழக்கத்தை வளர்க்க குழந்தைகள் பெயரில் முதலீட்டைத் தொடங்குங்கள்.
ஓர் அஞ்சலகக் கணக்கை அல்லது
வங்கிக் கணக்கைக் குழந்தைகளின் பெயரில் தொடங்கி அவர்கள் சேமிக்கும் தொகை மற்றும் உறவினர்கள்
தரும் அன்பளிப்புத் தொகைகளை அதில் போட்டு வைக்கப் பழக்குங்கள்.
குழந்தைகளின் பெயரில் ஒரு
தொடர் வைப்பு (ஆர்.டி.) கணக்கை வங்கியிலோ அல்லது அஞ்சலகத்திலோ தொடங்கி மாதா மாதம் சேமித்து
வாருங்கள். குறைந்தபட்சம் மாதா மாதம் 10 ரூபாய் செலுத்தும் தொடர் வைப்புக் கணக்கைக்
கூட நீங்கள் அஞ்சலகத்தில் தொடங்கலாம். பெருந்தொகையைத்தான் சேமிக்க வேண்டும் என்றெல்லாம்
இல்லை. கையில் இருக்கும் தொகையைச் சேமிக்கப் பழக வேண்டும். இந்தப் பழக்கத்தைக் கற்றுக்
கொடுத்துப் பழக்கமாக்க வேண்டும்.
தொடர்ந்து சேமிக்கும் பணம்
எப்படி மிகப்பெரிய தொகையாக மாறுகிறது என்பதை வார்த்தைகளில் விவரிப்பதை விட இது போல
வாழ்க்கையில் ஒரு தொடர்வைப்புக் கணக்கைத் தொடங்கிச் சேமிக்கச் செய்வதன் மூலமாகக் குழந்தைகளின்
மனதில் ஆழமாகப் பதிய வைத்து விடலாம்.
தற்போது குழந்தைகளின் பெயரில்
பரஸ்பர நிதியில் மாதம் தோறும் முதலீடு செய்யும் வாய்ப்புகளும் உள்ளன. அவற்றையும் பயன்படுத்தி
இளம் வயதிலேயே முதலீட்டைத் தொடங்கும் அனுகூலத்தைக் குழந்தைகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கலாம்.
சிறுகச் சிறுக சேமிக்கும்
பணத்தின் மூலமாக ஒரு கிராம், இரண்டு கிராம், 5 கிராம் என தங்க நாணயங்கள் வாங்கும் பழக்கத்தையும்
குழந்தைகளிடம் உருவாக்குங்கள். ஒரு கிராம் தங்க நாணயம் வாங்குவதற்கான தொகையைச் சேமிப்பதற்கு
எவ்வளவு காலம் ஆகிறது என்பதைக் குழந்தைகள் அனுபவத்தில் அறிந்து கொள்ள இந்தச் செயல்முறை
உதவும். மந்திர ஜாலம் போல பணத்தைப் பெருக்க முடியாது என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளவும்
இந்த அனுபவம் பெரிதும் உதவும். பிற்காலத்தில் பாடுபட்டுச் சேர்த்த பணத்தாசையைத் தூண்டும்
திட்டங்களில் கட்டி ஏமாறாமல் இருக்கவும் இந்த அனுபவம் கூடுதலாகத் துணை நிற்கும்.
குழந்தைகளுக்கு என்று அரசின்
அற்புதமான திட்டங்கள் அவ்வபோது அறிவிக்கப்படுவதைக் கவனத்தில் கொண்டு அது போன்ற திட்டங்களிலும்
முதலீடு செய்து வாருங்கள். தற்போது பெண் குழந்தைகளுக்குச் செல்வமகள் திட்டமும், ஆண்
குழந்தைகளுக்குத் தங்கமகன் திட்டமும் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன. இது போன்ற
திட்டங்களில் அவசியம் உங்கள் குழந்தையின் பெயரில் ஒரு கணக்கைத் துவங்கி ஆண்டுதோறும்
குறிப்பிட்டத் தொகையைச் சேமித்து வாருங்கள்.
குழந்தைகளின் வருங்காலப்
பணத்தேவைக்கான பணத்தை ஒரே நாளில் உருவாக்கி விட முடியாது. சேமிப்பின் மூலமாகவும் முறையான
முதலீட்டின் மூலமாகவும் ஒவ்வொரு நாளும் உருவாக்கலாம். அப்படி உருவாக்கினால் அவர்களின்
திருமணம், உயர்கல்வி, சொந்த வீடு போன்றவற்றிக்கான செலவினங்களைக் கடனின்றி உருவாக்க
நாம் கற்றுக் கொடுத்தவர்களாவோம்.
இந்தக் கற்றல் அவர்கள் மனதிலும்
வாழ்க்கையிலும் நிலைத்து விட்டால் எந்தப் பொருளையும் அவர்கள் கடனுக்கு வாங்குவது பற்றி
யோசிக்க மாட்டார்கள். அவர்கள் விரும்பும் பொருளுக்கான பணத்தைப் பொறுமையாகச் சேர்த்த
பின்பே காத்திருந்து வாங்குவார்கள். சிறுக சிறுகச் சேமித்து பொருள் வாங்குபவர்கள் அநாவசியமான
அல்லது ஆடம்பரமான பொருட்களை உணர்ச்சி வேகத்தில் வாங்கி விட மாட்டார்கள். அவர்கள் பணத்தின்
மதிப்பையும் அருமையையும் தெரிந்தவர்களாக இருப்பார்கள்.
சரியான செலவினப் பழக்கம்
உருவாகுவதற்கும், கடன் வாங்குவது ஒரு பழக்கமாக உருவாகாமல் இருப்பதற்கும் சேமிப்புப்
பழக்கத்தைக் குழந்தைகளுக்கு இளமையிலிருந்து கற்றுக் கொடுப்பதும் பழக்கப்படுத்துவதும்
அவசியமாகும்.
மேற்படித் தகவலைச் சுருக்கமாகப்
பார்க்குமிடத்துக் குழந்தைகளுக்காகப் பின்வரும் கணக்குகளில் உகந்தவற்றைப் பெற்றோர்கள்
தொடங்கலாம்.
ü அஞ்சலகச் சேமிப்புக் கணக்கு
(சேவிங்ஸ் அக்கௌண்ட்)
ü வங்கிச் சேமிப்புக் கணக்கு
(சேவிங்ஸ் அக்கௌண்ட்)
ü அஞ்சலகத் தொடர் வைப்புக்
கணக்கு (ஆர்.டி. அக்கௌண்ட்)
ü வங்கி தொடர் வைப்புக் கணக்கு
(ஆர்.டி. அக்கௌண்ட்)
ü செல்வமகள் சேமிப்புத் திட்டம்
ü தங்கமகன் சேமிப்புத் திட்டம்
ü பரஸ்பர நிதித் திட்டம் (மியூட்சுவல்
பண்ட்)
ü தங்க நாணயங்கள் வாங்குதல்
இத்தகவல்கள் உங்களுக்குப்
பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
மீண்டும் ஒரு பயனுள்ள தகவலோடு
இதே வலைப்பூவில் (www.teachervijayaraman.blogspot.com) சந்திப்போம்.
நன்றி!
வணக்கம்!
*****
No comments:
Post a Comment