இளமையிலேயே ஆரம்பியுங்கள் முதலீட்டை!
முதலீட்டை இள வயதிலேயே ஆரம்பிக்க
வேண்டும். அப்போது மாதந்தோறும் சிறிய தொகையாகச் சேர்க்க ஆரம்பித்தாலும் சில தசாப்தங்களில்
(பத்தாண்டுகளில்) அது பெரிய தொகையாக வளர்ச்சி அடைந்து விடும்.
ஒருவர் முப்பது வயதில் மாதா
மாதம் ரூ. 5000 முதலீடு செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்த முதலீட்டுக்கு 8
சதவீத வட்டி என்று கணக்கு வைத்துக் கொண்டால் அவர் அடுத்த முப்பது வருடத்தில் அதாவது
அறுபதாவது வயதில் ரூ. 75 லட்சத்தைச் சேர்த்திருப்பார்.
இந்த இடத்தல் வட்டி வீதத்தைக்
கொஞ்சம் உயர்த்தினால் அதாவது 2 சதவீதம் உயர்த்தி 10 சதவீதம் வட்டி கிடைக்கும் வகையில்
முதலீடு செய்திருந்தால் அவருக்கு ஒரு கோடிக்கு மேல் கூடுதலாக 14 லட்சமும் கிடைக்கும்.
அதுவே இன்னும் 4 சதவீதம்
கூடுதலாகக் கிடைக்கும் வகையில் அதாவது 12 சதவீத வட்டிக் கிடைக்கும் முதலீட்டைச் செய்திருந்தால்
அவர் அறுபதாவது வயதில் ஒரு கோடியும் 77 லட்சமும் பெற்றிருப்பார்.
இந்த வட்டி வீதங்களில்
12 சதவீத வட்டி என்பது பண வீக்கத்தைத் தாண்டும் சரியான வட்டி வீதமாகும். அது போன்ற
வட்டி வீத வளர்ச்சி உள்ள முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்தால் முப்பது வருடங்களில்
நல்ல பலன் கிடைக்கும்.
இப்போது ஒருவர் தன்னுடைய
அறுபதாவது வயதில் 5 கோடி ரூபாயைச் சேர்க்க வேண்டும் என்றால் அவர் மாதா மாதம் எவ்வளவு
முதலீடு செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
வட்டி வீதத்தைப் பொருத்த
வரையில் 12 சதவீதத்திற்கு மேல் இருக்கும் வகையில் இருக்கும் வட்டி வீதமே பண வீக்கத்தை
எதிர்கொள்ளும் சரியான வட்டி வீதம் என்று பார்த்து விட்டதால் மாதந்தோறும் சேமிக்கும்
தொகைக்கு நாம் 12 சதவீத வட்டி வீதத்தையே கணக்கில் எடுத்துக் கொள்வோம்.
12 சதவீத வட்டி வீதத்தில்
அறுபது வயதில் ஒருவர் 5 கோடியைப் பெற வேண்டும் என்றால் அவர்,
25 வயதில் இருந்தால் மாதா
மாதம் சராசரியாக எட்டாயிரம் முதலீடு செய்ய வேண்டும்.
30 வயதில் இருந்தால் மாதா
மாதம் பதினைந்தாயிரம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்.
35 வயதில் இருந்தால் மாதா
மாதம் இருபத்து ஆறாயிரம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்.
40 வயதில் இருந்தால் மாதா
மாதம் ஐம்பதாயிரம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்.
45 வயது என்றால் மாதா மாதம்
ஒரு லட்சம் முதலீடு செய்ய வேண்டும்.
இதை ஓர் அட்டவணைப்படுத்திக்
கொண்டால் நீங்கள் இன்னும் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.
முதலீட்டு வயது |
மாதத் தொகை (ஆயிரங்களில்) |
20 |
4 |
25 |
8 |
30 |
15 |
35 |
26 |
40 |
50 |
45 |
100 |
இங்கே நீங்கள் ஒரு விசயத்தைக்
கவனிக்கலாம். ஒவ்வொரு ஐந்து வயதைத் தாண்டி முதலீட்டைத் துவங்கும் போது மாதா மாதம் ஒதுக்க
வேண்டிய முதலீட்டுத் தொகை சற்றேறக்குறைய இரட்டிப்பாகிறது.
ஏனென்றால் வயது அதிகரிக்க
அதிகரிக்க 60 வயதை நெருங்கும் கால அளவானது குறைகிறது. எனவே அதிக முதலீட்டைச் செய்ய
வேண்டியதாகிறது.
அதுவே இந்த மாத முதலீட்டை
இள வயதிலேயே 25 வயதிலேயே தொடங்கி விட்டால் மாதா மாதம் எட்டாயிரம் ரூபாயே போதுமானது.
அவ்வயதை இன்னும் குறைத்து 20 வயதிலேயே தொடங்கி விட்டால் மாதா மாதம் நான்காயிரம் ரூபாயே
போதுமானது. 15 வயதில் என்றால் இரண்டாயிரமே போதுமானது. பத்து வயதில் என்றால் ஆயிரம்
ரூபாயே போதுமானது. 45 வயதில் என்றால் ஒரு லட்ச ரூபாய் மாதா மாதம் முதலீடு செய்ய தேவைப்படுகிறது.
இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்
முதலீட்டை இளமையிலேயே தொடங்க வேண்டும் என்பதும், நல்ல வட்டி வீத வளர்ச்சியுள்ள முதலீடுகளில்
முதலீடு செய்ய வேண்டும் என்பதும்.
ஆகவேத்தான் முதலீடுகளை இளமையிலேயே
தொடங்குங்கள் என்று சொல்கிறேன். இந்த ஒரு விசயத்தில் ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது
என்பது அவ்வளவு சாலப் பொருத்தமாக அமையும் என்று சர்வ நிச்சயமாகச் சொல்லலாம். நீங்களும்
உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்!
*****
No comments:
Post a Comment