ஏன் சதவீதம் தேவைப்படுகிறது தெரியுமா?
ஒரு எண் விவரத்தைச் சதவீதத்திற்கு
மாற்றச் சொல்லும் போது சதவீதத்தின் மீது நமக்கு எரிச்சல் ஏற்படுகிறதுதானே? யார் இந்தச்
சதவீதத்தைக் கண்டுபிடித்தார்கள் என்று திட்டித் தீர்த்து விடுகிறோம்தானே? ஆனால் இந்தச்
சதவீதம் இல்லையென்றால் நாம் பல உண்மைகளைத் தெரிந்து கொள்ளவே முடியாது.
எப்படி என்கிறீர்களா?
ஒரு நடைமுறை உதாரணத்தைச்
சொன்னால் உங்களுக்குப் புரிந்து விடும்.
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்
முகேஷ் அம்பானி. அவர் தன் மகள் இஷாவுக்கு 2018இல் திருமணம் செய்து வைத்தார். வைத்தார்
என்றால் உலகின் ஆடம்பரத் திருமணம் என்று சொல்லும் அளவுக்குச் செலவு செய்து திருமணம்
செய்து வைத்தார்.
முகேஷ் அம்பானியின் மகள்
இஷாவின் திருமணச் செலவு 700 கோடிக்கும் மேல் என்று பத்திரிகைகள் கணிப்பைச் சொல்லின.
இவ்வளவு செலவு செய்து ஒரு
திருமணத்தையா நடத்தினார்கள்? இந்தத் தொகை இருந்தால் ஐயாயிரம் திருமணங்களை எந்தக் குறையும்
இல்லாமல் செய்யலாமே என்று நீங்கள் நினைப்பதும் சொல்வதும் புரிகிறது.
இவ்வளவு தொகை செலவு செய்து
ஒரு திருமணத்தை நடத்த வேண்டுமா என்றும் நீங்கள் கேட்கலாம். இது உலகிற்கு ஆடம்பர திருமணமாகத்
தெரியலாம். ஆனால் அம்பானியிடம் இருக்கும் சொத்து மதிப்புக்கு இது ஒரு சாதாரண திருமணம்தான்.
அதெப்படி என்கிறீர்களா? இங்குதான் சதவீதக் கணக்குத் தேவைப்படுகிறது.
நமக்கு அத்தொகை பெரிதாக இருக்கலாம்.
ஆனால் அம்பானியின் சொத்து மதிப்புக்கு அது 0.2 சதவீதம் கூட தோராயமாக வராது என்கிறார்கள்.
அப்படியானால் அவரது சொத்து மதிப்பு எவ்வளவு இருக்கும் என்பதைத் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
தோராயமாக கணக்குப் போட்டால் மூன்றரை லட்சம் கோடிக்கும் மேல் அவரது சொத்து மதிப்பு இருக்கலாம்
என்று கூறப்படுகிறது. அந்தச் சொத்து மதிப்போடு ஒப்பிட்டால் இந்தத் தொகை அவருக்கு ஒரு
பெரிய தொகையே இல்லை என்பது தெரிய வருகிறதுதானே?
அதுவே இருபது லட்ச ரூபாய் சொத்து மதிப்புள்ள ஒருவர் பத்து லட்ச ரூபாய்
செலவு செய்து ஒரு திருமணத்தை நடத்துகிறார் என்றால் அது அவரது சொத்து மதிப்பில் எவ்வளவு
தெரியுமா? நீங்களே கணக்கிட்டுச் சொல்லுங்களேன். சரிதான் நீங்கள் கணக்கிட்டு இருப்பது.
அது 50 சதவீதம் ஆகும்.
இப்போது சொல்லுங்கள் ஒரு
திருமணத்திற்காக அதிகம் செலவிட்டு இருப்பது அம்பானியா? இருபது லட்ச சொத்துக்காரரா?
இருபது லட்ச சொத்துக்காரர்தானே.
அம்பானி 700 கோடிக்கு மேல்
செலவிட்டிருந்தாலும் 20 லட்ச ரூபாய் சொத்துக்காரர் 10 லட்சம் திருமணத்திற்காகச் செலவிட்டிருப்பது
அம்பானி செலவிட்டிருப்பதை விட பல மடங்கு அதிகமாகும். பல மடங்கு என்றால் 250 மடங்கு
அதிகமாகும்.
இப்போது உண்மையைச் சரியாகத்
தெரிந்து கொள்ள உங்களுக்கு எது உதவுகிறது? சதவீதக் கணக்குத்தானே. ஆகவேத்தான் சிரமமாக
இருந்தாலும் சதவீத கணக்குகளை நன்றாகப் போட கற்றுக் கொள்ளுங்கள்.
இதே போல இன்னொரு கதையையும்
சொல்வார்கள்.
ஓர் ஊரில் ஆலயம் கட்ட நிதி
திரட்டிய போது தினம் லட்ச ரூபாய் சம்பாதிக்கும் பணக்காரர் ஒருவர் ஆயிரம் ரூபாய் பணம்
தந்தாராம். அதே ஆலயம் கட்ட தினம் இரண்டு ரூபாய் சம்பாதிக்கும் மூதாட்டி ஒருவர் ஒரு
ரூபாய் தந்தாராம்.
இவ்விருவரில் ஆலயம் கட்ட
அதிகத் தொகை தந்தவராகக் கடவுள் மூதாட்டியைத்தான் தேர்ந்து கொண்டாராம். அது எப்படி என்று
சொல்லுங்கள்?
ஆம் நீங்கள் சொல்வது சரிதான்.
தொகையின் அடிப்படையில் ஆயிரம்
ரூபாய் அதிகம். ஒரு ரூபாய் குறைவு. ஆனால் அவர்கள் தினம் சம்பாதிக்கும் தொகையின் அடிப்படையில்
அவர்கள் வழங்கிய தொகையைச் சதவீதத்தில் பார்த்தால் பணக்காரர் வழங்கியது ஒரு சதவீதம்.
ஆனால் மூதாட்டி வழங்கியது 50 சதவீதம். அப்படியானால் மூதாட்டி வழங்கிய தொகைதானே அதிகம்.
அதாவது ஐம்பது மடங்கு அதிகம். இதை எப்படிக் கண்டுபிடித்தோம்? சதவீதத்தின் மூலம்தானே.
ஆகவே மீண்டும் ஒரு முறை சதவீதக் கணக்குகளைப் போட கற்றுக் கொள்ளுங்கள் என்று வலியுறுத்திச்
சொல்கிறேன் என்று கோவித்துக் கொள்ளாதீர்கள்.
அப்புறம் மற்றுமொரு சங்கதி,
இதைச் சொல்வதன் மூலமாகக் கோடிக் கணக்கில் செலவு செய்து திருமணம் செய்வதையோ அம்பானியின்
ஆடம்பர திருமணங்களையோ நான் ஆதரிப்பதாக முடிவு கட்டி விடாதீர்கள். சதவீதக் கணக்கின்
மேல் உங்களுக்கு ஒரு ஆர்வத்தை உண்டாக்கவோ மேற்படி உதாரணத்தைக் காட்டினேன். அம்பானி
உதாரணம் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் நீங்கள் ஆலயம் கட்ட நிதி கொடுத்த பணக்காரர்
மற்றும் மூதாட்டியின் உதாரணத்தை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள். என்ன சரிதானே?
மீண்டும் ஒரு பயனுள்ள தகவலோடு
நாளை இதே வலைப்பூவில் சந்திப்போம்.
நன்றி!
வணக்கம்!
*****
No comments:
Post a Comment