Thursday, 18 May 2023

ஞாபகத்திறனை அதிகரிக்க ஏழு வழிமுறைகள்!

ஞாபகத்திறனை அதிகரிக்க ஏழு வழிமுறைகள்!

எல்லாருக்கும் மறதி பெரும் பிரச்சனையாக இருக்கிறது. ஞாபகத்திறனைப் பெருக்க முடியாதா என்ற ஏக்கமும் இருக்கிறது. இந்த ஏக்கத்தைப் போக்க வல்லுநர்கள் ஏழு விதமான வழிமுறைகளைக் கூறுகிறார்கள். இந்த வழிமுறைகள் ஞாபகத்திறனை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன். மறதியைப் போக்குவதற்கும் உதவியாக இருக்கும் என்பதால் மறக்காமல் இந்த ஏழு வழிமுறைகளையும் பின்பற்றிப் பாருங்கள்.

1. உடலியக்கம் முக்கியம்

உடல் சார்ந்த இயக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள். அதற்கான வாய்ப்பில்லை என்றால் நீங்கள் உடற்பயிற்சியும் மூச்சுப் பயிற்சியும் அவசியம் செய்ய வேண்டும். உங்கள் மூளைக்கு எப்போதும் புதிய ரத்தமும் ஆக்சிஜன் நிறைந்த நல்ல ரத்தமும் தேவை. அப்போதுதான் உங்கள் மூறை நன்றாகச் சிந்திக்கும். நிகழ்வுகளை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளும். அதற்கு உடலியக்கம் சார்ந்த செயல்கள் தேவை. உங்கள் ரத்தம் ஓட்டத்தை அதுதானே நன்றாக இயங்கச் செய்யும்.

2. மூளை இயக்கமும் முக்கியம்

மனம் சார்ந்த இயக்கத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கணக்குகள் போட்டுப் பார்க்கலாம். புதிதாக எதையாவது கற்றுக் கொண்டு இருக்கலாம். சுருக்கமாகச் சொல்வதென்றால் உங்கள் மூளையை நீங்கள் இயக்கிக் கொண்டே இருக்க வேண்டும். உடற்பயிற்சி செய்ய செய்ய உடல் வலுவாவதைப் போலத்தான் மூளைக்கான பயிற்சிகள் செய்ய செய்ய நினைவாற்றலும் வலுவாக இருக்கும்.

3. இணக்கமும் முக்கியம்

அனைவருடனும் இணக்கமாகவும் அன்பாகவும் பேசுங்கள். மன அழுத்தமும் மன இறுக்கமும் இல்லாமல் இருக்க இதுதான் வழி. இதற்கும் ஞாபகத்திறனுக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம். மன இறுக்கம், மன அழுத்தம் - இந்த இரண்டும் இல்லாமல் இருந்தால் உங்கள் ஞாபகத் திறனுக்கு எந்தப் பழுதும் இருக்காது.

4. திட்டமிடலும் முக்கியம்

எந்தச் செயலைச் செய்யும் முன் அதைச் செய்வதற்கான கால அட்டவணையை உருவாக்கிக் கொள்ளுங்கள். செயல்முறைகளை எழுதிப் பார்த்துக் கொள்ளுங்கள். இதனால் நீங்கள் எப்படிச் செயல்படப் போகிறீர்கள் என்பதில் உங்களுக்கு நல்ல தெளிவு இருக்கும். குழப்பம் உண்டாவதற்கு வாய்ப்பே இல்லை. தெளிவாக இருக்கும் போது உங்கள் ஞாபகத்திறன் வலுவாக இருக்கும். குழப்பம்தான் ஞாபகத்திறனைக் காலி செய்யும்.

5. பழக்கமும் முக்கியம்

நீங்கள் பயன்படுத்தும் பொருட்களைக் குறிப்பிட்ட இடத்தில் வைத்து, எடுத்து, மீண்டும் வைத்து, எடுத்துப் பழகுங்கள். அந்த இடம் மாறாமல் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். எல்லா பொருட்களுக்கும் ஓரிடத்தை ஒதுக்கி வையுங்கள். இதனால் உங்களுக்கு எந்தப் பொருளை எங்கே வைத்தோம் என்ற மறதி ஏற்பட வாய்ப்பே இல்லை. மறதியைக் குறித்த யோசனை எழா விட்டால் உங்கள் ஞாபகத்திறன் நன்றாக இருப்பதாகத்தானே அர்த்தம்.

6. தூக்கமும் முக்கியம்

நன்றாகத் தூங்குங்கள். குறைந்தபட்சம் எட்டு மணி நேரம். இன்னும் இரண்டு மணி நேரம் கூடுதலாகத் தூங்கினாலும் பழுதில்லை. உங்கள் ஞாபகச் சக்தி அபாரமாக இருக்கும். நீங்கள் தூங்கும் மற்றும் விழிக்கும் நேரம் முறையாக இருப்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள். உதாரணமாக இரவு ஒன்பது மணிக்குப் படுத்து அதிகாலை ஐந்து மணிக்கு எழுகிறீர்கள் என்றால் அதில் தினசரி எந்த மாற்றமும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு நாள் இரவு பத்து மணிக்கும் மற்றொரு நாள் இரவு பதினோரு மணிக்கும் என்று உங்கள் உயிரியல் கடிகாரத்தைக் குழப்பி விடாதீர்கள். இந்தக் குழப்பம் உங்கள் ஞாபகப் பிசகில் நன்றாகவே பிரதிபலிக்கும்.

7. உணவுமுறையும் முக்கியம்

ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள். புகையோ, மதுவோ வேண்டாம். இந்த இரண்டும் ஞாபக சக்திக்கான வில்லன்கள். இந்த இரண்டு வில்லன்களுமே உங்கள் நரம்பு மண்டலத்தோடு நன்றாக கபட நாடகமாடி அந்த மண்டலம் முழுவதற்குமே வேட்டு வைக்கும் என்பதால் இந்த இரண்டு வில்லன்கள் பக்கமும் தலைவைத்துப் படுக்காதீர்கள். நம் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியம்தான் ஞாபகத்திறனின் ஆரோக்கியமும்.

இந்த ஏழு வழிமுறைகளையும் பின்பற்றினால் உங்களுக்கு ஏழேழு ஜென்மத்திற்கும் ஞாபக சக்தியில் எந்தக் குறைவும் இருக்காது. இதனால் உங்களுக்கு ஏழு பிறவி ஞாபகங்களும் வந்தாலும் கூட ஆச்சரியம் ஒன்றும் கிடையாது.

இத்தகவல்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

மீண்டும் ஒரு பயனுள்ள தகவலோடு நாளை இதே வலைப்பூவில் (www.teachervijayaraman.blogspot.com) சந்திப்போம்.

நன்றி!

வணக்கம்!

*****

No comments:

Post a Comment