Wednesday 3 May 2023

கல்விக்கடன் – அறிய வேண்டிய அரிய விவரங்கள்

கல்விக்கடன் – அறிய வேண்டிய அரிய விவரங்கள்

பனிரெண்டாம் வகுப்பு முடித்து மேற்படிப்புகளில் சேரும் மாணவர்கள் உயர்கல்விக்கெனப் பணம் கையிலிருக்கும் பட்சத்தில் கல்விக்கடன் பற்றி யோசிக்க வேண்டியதில்லை.

பணம் கையில் இல்லாத பட்சத்தில் கடன்காரர்களிடமிருந்து கடன் வாங்கி உயர்கல்வி பெறுவதை விட வங்கிகளில் கல்விக்கடன் பெற்று உயர்கல்வி பெறுவது நல்லது. சற்றேறக்குறைய தனிநபர் கடனுக்கான வட்டி விகிதத்தில்தான் கல்விக்கடன்கள் வழங்கப்படுகின்றன.

வட்டி மானியம் உண்டா?

பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 4 லட்சத்திற்குள் இருக்கும் பட்சத்தில் கல்விக்கடனுக்கு வட்டி மானியமும் கிடைப்பதால் உயர்கல்விக்கென வங்கிகள் மூலமாகக் கடன் பெறுவது ஏற்றதாக இருக்கும்.

தனியார் வங்கிகளை விட பொதுத்துறை வங்கிகளின் கல்விக்கடனுக்கான  வட்டி விகிதம் குறைவாக இருப்பதால் உயர்கல்வியைக் கல்விக்கடன் மூலமாகத் தொடர விரும்பும் மாணவர்கள் பொதுத்துறை வங்கிளை நாடுவது உசிதமாக இருக்கும்.

கல்விக்கடன் எவ்வளவு?

இந்தியாவில் படிக்கும் மாணவர்கள் மட்டுமல்லாது வெளிநாட்டிற்குச் சென்று மாணவர்களும் கல்விக்கடன் பெற முடியும்.

இந்தியாவில் படிக்கும் மாணவர்கள் அதிகபட்சமாக 30 லட்சம் வரையிலும் வெளிநாட்டில் பயிலும் மாணவர்கள் 1.5 கோடி வரை கல்விக்கடன் பெற முடியும்.

பெறுவது எப்படி?

உயர்கல்விக்கெனக் கல்லூரிகளில் சேருவதற்கு முன்பு கல்விக்கடனுக்காக விண்ணப்பிக்க இயலாது. சேர்ந்த பின்பு உயர்கல்வியில் படிப்பதற்கான உறுதிச் (போனபைட்) சான்றிதழ், கல்விச் செலவுப் பட்டியல் ஆகியவற்றைச் சமர்ப்பித்து கல்விக்கடன் கோரலாம்.

உயர்கல்வி படிக்கும் நிறுவனத்தின் அருகில் இருக்கும் வங்கிகளில்தான் கல்விக்கடன் கோர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தேவையான ஆவணங்கள் என்னென்ன?

ü பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

ü பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

ü ஆதார் அட்டை

ü இருப்பிடச் சான்றிதழ்

ü பெற்றோர்களின் ஆதார் அட்டை

ü பெற்றோர்களின் வருமானச் சான்றிதழ்

ü பெற்றோர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள்

இணைய வழியில் விண்ணப்பிக்க…

இணைய வழியில் கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்க அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவை தேவையானது. இணைய வழியில் கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்க நீங்கள் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://www.vidyalakshmi.co.in/Students/ 

மேலும் விவரங்கள் அறிய…

கல்விக்கடன் குறித்தும் அதற்கு வழங்கப்படும் மானியங்கள் குறித்தும் மேலதிக விவரங்கள் அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://www.education.gov.in/

திருப்பிச் செலுத்துவது எப்படி?

உயர்கல்வியை முடித்த மாணவர்கள் படிப்பை முடித்த காலத்திலிருந்து கல்விக்கடனைத் திருப்பிச் செலுத்த தொடங்கலாம். முடித்ததிலிருந்து ஓராண்டு சலுகை காலமும் உள்ளது. பணியில் சேர்ந்து ஐந்து ஆண்டு காலத்திற்குள் கல்விக்கடனைத் திருப்பிச் செலுத்துவது ஏற்றது. இன்னும் கூடுதலாக இரண்டாண்டுகள் என ஏழாண்டுகள் வரை கடனைத் திருப்பிச் செலுத்த வாய்ப்பும் உள்ளது.

கல்விக்கடன் குறித்த இத்தகவல்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். மற்றவர்களுக்கும் பயன் உள்ளதாக இருக்கும் என்று தாங்கள் கருதினால் இவ்விவரங்களை மற்றவர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள்.

*****

No comments:

Post a Comment