எப்படியெல்லாம் உங்களைக் குழப்புவார்கள் தெரியுமா?
ஒருவர்
மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் அவர் எப்படிக் கேட்டாலும் அவர் கேட்பதற்கு
ஒப்புக் கொள்ளாதீர்கள். ஆனால் உங்கள் ஒப்புதலைப் பெற அவர் எப்படியெல்லாம் பேசுவார்
தெரியுமா? உங்களை எப்படியெல்லாம் குழப்பி உங்கள் சம்மதத்தைப் பெற நினைப்பார் தெரியுமா?
வார்த்தைகளை அவர் எப்படியெல்லாம் ஆயுதமாகப் பயன்படுத்தி உங்களை வீழ்த்த நினைப்பார்
தெரியுமா?
1. கேட்டுப் பார்த்தல் :
உங்களை
ஒப்புக் கொள்ள வைக்க பயன்படுத்தப்படும் முதல் ஆயுதம் இதுதான். அதாவது கேட்டுப் பார்த்தல்.
ஏன் இதை ஒப்புக் கொள்ள மறுக்கிறீர்கள்? என் மேல் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? என்று
கேட்பார். எதற்காக என்றால் உங்களை ஒப்புக் கொள்ள வைக்கத்தான். இதுதான் கேட்டுப் பார்த்தல்.
2. கெஞ்சுதல் :
கெஞ்சுதல்
என்பது கேட்டுப் பார்த்துக் காரியம் ஆகாத போது உங்களை ஒப்புக் கொள்ள வைக்க கையாளப்படும்
இரண்டாவது ஆயுதம். என் நிலையைப் பாருங்கள், எனக்காக நீங்கள் இதை ஒப்புக் கொள்ளக் கூடாதா?
நீங்கள் ஒப்புக் கொண்டால்தான் எனக்கு வாழ்க்கையே என்று இந்த இரண்டாவது அஸ்திரம் ஏவப்படும்.
ஏன் இந்த ஆயுதம் ஏவப்படுகிறது என்பது இப்போது உங்களுக்குப் புரிகிறதா? உங்களை ஒப்புக்
கொள்ள வைக்கத்தான்.
3. ஒப்பீடு செய்தல் :
உங்களை
ஒப்புக் கொள்ள வைக்க கையாளப்படும் மூன்றாவது ஆயுதம்தான் ஒப்பீடு செய்தல். ஏன் இதை நீங்கள்
ஒப்புக் கொள்ள மறுக்கிறீர்கள்? அல்லது ஏன் இதை நீங்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள்?
இதையே உங்கள் அண்ணனோ அல்லது அக்காவோ கேட்டிருந்தால் இப்படி மறுத்திருப்பீர்களா? நான்
யாரோ ஒருவர் என்றுதானே மறுக்கிறீர்கள் என்று இந்த ஆயுதம் பிரயோகிக்கப்படும். இந்த ஒப்பீடு
உங்களை நிலைகுழையச் செய்து, நீங்கள் ஒப்புக் கொள்ள நேரிடலாம். ஆகவே இந்த ஆயுதத்தை நீங்கள்
புரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் இந்த ஆயுதத்தால் நீங்கள் உங்களை அறியாமலே வீழ்த்தப்பட்டிருப்பீர்கள்.
4. லஞ்சம் தருதல் :
மேற்படி
நாம் பார்த்த மூன்று ஆயுதங்களும் வேலைக்காகாத போது இந்த நான்காவது ஆயுதம் பிரயோகிக்கப்படும்.
நீங்கள் மட்டும் இதற்கு ஒத்துக் கொண்டால் உடனடியாக
உங்கள் வங்கிக் கணக்கிற்குப் பத்தாயிரம் பணத்தை பரிமாற்றம் செய்கிறோம் என்பதாகவோ, உங்களுக்குப்
பிடித்தமான தொலைக்காட்சி அல்லது அலைபேசி உங்கள் வீடு தேடி வரும் என்றோ இந்த ஆயுதமானது
கையாளப்படும். எதற்காக என்றால் உங்களது ஒப்புதல் அல்லது சம்மதத்துக்காகத்தான் அல்லது
நீங்கள் அவர்களது விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகத்தான்.
5. பேசி மயக்குதல் :
உங்களை
ஒப்புக் கொள்ள வைக்க கையாளப்படும் நைச்சியமான ஆயுதம் இதுவாகும். உங்களைப் பார்த்தால்
என் அண்ணனைப் போல இருக்கிறது. நீங்கள் மிகவும் நல்லவர். உங்களது திறமைக்கு நீங்கள்
இங்கு இருக்க வேண்டிய ஆளே இல்லை. இப்படியெல்லாம் பேசி மயக்கும் போது, நீங்கள் அப்படிப்
பேசுபவருக்குக் கேட்டதைச் செய்ய வேண்டும், கேட்கும்படி ஒப்புதலை அளிக்க வேண்டும் என்ற
மனநிலைக்கு வந்து விடுவீர்கள். நுட்பமாக நோக்கினால்தான் பேசி மயக்கும் இந்த ஆயுதத்துக்கு
நீங்கள் பலியாகியிருப்பது உங்களுக்கே புரியும். ஆகவே இந்த ஆயுதத்திடமும் நீங்கள் எச்சரிக்கையாக
இருக்க வேண்டும்.
6. நட்பாகப் பேசுதல் :
இதுவும்
ஒரு வகை நைச்சியமான ஆயுதமே. உங்கள் சம்மதம் அல்லது ஒப்புதலைப் பெற இந்த ஆயுதம் பயன்படுத்தப்படுகிறது
என்பது புரியாமலே நீங்கள் பலியாகுவீர்கள். அதாவது நீங்கள் ஒப்புக் கொண்டதை நாங்கள்
யாருக்கும் சொல்ல மாட்டோம். நீங்கள் யாருக்கும் பயப்பட வேண்டாம். உங்கள் சம்மதம் நாங்கள்
மட்டும் அறிந்த ரகசியமாக இருக்கும். இது சத்தியம். நாங்கள் எப்போதும் உங்கள் நண்பர்களாக,
உங்களுக்கு விசுவாசமானவர்களாக இருப்போம். இப்படியாக இந்த ஆயுதம் பயன்படுத்தப்படுகிறது.
7. மிரட்டல் :
உங்களை
ஒப்புக் கொள்ள வைக்க நைச்சியமான, சாமர்த்தியமான ஆயுதங்கள் பயனளிக்காத போது இந்த முரட்டுத்தனமான
ஆயுதமானது பயன்படுத்தப்படுகிறது. அதாவது நீங்கள் மட்டும் ஒப்புக் கொள்ளாவிட்டால் நடப்பதே
வேறு. உங்களது சம்மதம் வரா விட்டால் என்ன செய்வோம் என்பது எங்களுக்கே தெரியாது. மரியாதையாக
எங்கள் பக்கம் சேர்ந்து விடுங்கள், இல்லையென்றால் உயிருக்கு உத்தரவாதமில்லை. ஒழுங்கு
மரியாதையாக ஒப்புக் கொண்டு சம்மதித்து விடுங்கள் என்றவாறு இந்த ஆயுதமானது பிரயோகிக்கப்படுகிறது.
8. குழப்புதல் :
இது
ஒரு வகையான நைச்சியமும் மிரட்டலும் கலந்த ஆயுதம் எனலாம். உங்களைச் சம்மதிக்க வைக்கவோ,
ஒப்புக் கொள்ள வைக்கவோ இப்படிப்பட்ட ஆயுதமும் கையாளப்படும். அதாவது, இதற்கு ஒப்புக்
கொண்டு விட்டால் நீங்கள் உங்கள் வழியில் போகலாம், நான் என் வழியில் போகலாம். உங்களுக்கும்
பிரச்சனையில்லை, எனக்கும் பிரச்சனையில்லை. யாராலும் யாருக்கும் எந்தப் பிரச்சனையும்
இருக்கக் கூடாது பாருங்கள், என்றவாறு இந்த ஆயுதமானது பிரயோகம் செய்யப்படுகிறது.
9. பழி வாங்குதல் :
இது
அதிரடியான மிரட்டல் கலந்த ஆயுதமாகும். உங்களைச் சம்மதிக்க வைக்கவோ, ஒப்புக் கொள்ள வைக்கவோ
இந்த ஆயுதம் பிரயோகம் செய்யப்படும் விதம் அதிர்ச்சியைத் தூண்டும் விதமாக இருக்கும்.
அதாவது, இவ்வளவு சொல்லியும் நீங்கள் கேட்கவில்லை
என்றால் எங்கள் கூட்டத்தைக் கூட்டி வந்து உங்களை ஒன்றுமில்லாமல் செய்வோம், உங்களையும்
உங்கள் குடும்பத்தையும் சும்மா விட மாட்டோம், நன்றாக யோசித்துக் கொள்ளுங்கள் இதன் பின்விளைவுகள்
மிக மோசமாக இருக்கும் என்பது இவ்வகை ஆயுதப் பிரயோகத்திற்கு உதாரணமாகும்.
10. பரிதாபத்தைத் தூண்டுதல் :
சகலவிதமான
மேற்படி ஆயுதங்களும் பலனளிக்காத போது கடைசி ஆயுதமாக இது பிரயோகிக்கப்படுகிறது. அதாவது,
நீங்கள் மட்டும் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றால் குடும்பத்தோடு இறந்து போவதை விட
வேறு வழியில்லை, நீங்கள் இதற்கு சம்மத்திக்கவில்லை என்றால் அதன் பிறகு எங்களுக்கு வாழ்க்கையே
இல்லை. எங்களைப் பார்த்தால் உங்களுக்குப் பாவமாகத் தெரியவில்லையா? எங்களிடம் இரக்கம்
காட்ட மனமில்லையா? என்பது போல இந்த பரிதாபத்தைத் தூண்டும் ஆயுதமானது பிரயோகம் செய்யப்படுகிறது.
முடிவாக,
இப்படி
பத்து வகை வார்த்தை ஆயுதங்களைப் பயன்படுத்தி உங்களைக் குழப்பி, மருளச் செய்து உங்கள்
சம்மதத்தையோ, ஒப்புதலையோ பெற ஒருவர் முயற்சிக்கலாம். நீங்கள்தான் இவற்றையெல்லாம் புரிந்து
கொண்டு கவனமாகவும் எச்சரிக்கையாகவும் சம்மதம் தரக் கூடாததற்குச் சம்மதம் தராமலும்,
ஒப்புதல் தரக் கூடாததற்கு ஒப்புதல் தராமலும் இருக்க வேண்டும். இந்த ஆயுதங்களுக்குப்
பலியாகி ஒப்புதலோ, சம்மதமோ தந்தீர்கள் என்றால் அதன் பின் விளைவுகளை நீங்கள்தான் எதிர்கொள்ள
நேரிடும் என்பதுதான் அதைத் தொடர்ந்து வரும் எதார்த்தம்.
இத்தகவல்
உங்களுக்குப் பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். இது போன்ற பயனுள்ள தகவல்களுக்குத்
தொடர்ந்து இணைந்திருங்கள். நன்றி. வணக்கம்.
*****
No comments:
Post a Comment