அகந்தை வேண்டாமே! – உள்ளொளி பெருக்கும்
உன்னத கதை!
நாரதருக்குத்
தான்தான் மிகச்சிறந்த நாராயண பக்தர் என்ற அகந்தை ரொம்பவே உண்டு. இந்த விசயம் பகவான்
நாராயணனுக்கும் தெரியும். நாரதரின் அகந்தையை நீக்க வேண்டும் என்று நினைத்தார் நாராயணன்.
நாரதரை
அழைத்துத் தன்னுடைய மிகச் சிறந்த பக்தர் என்று சொல்லி ஒரு விவசாயியைப் பார்த்து வரச்
சொல்லி பூலோகத்துக்கு அனுப்பி வைத்தார் நாராயணன்.
மிகச்
சிறந்த அந்த நாராயணப் பக்தரைப் பார்க்கப் போனார் நாரதர்.
அந்த
விவசாயியோ காலையில் எழுந்ததும் நாராயணன் பெயரைச் சொல்லி விட்டுத் தன்னுடைய குடும்ப
வேலைகளையும் விவசாய வேலைகளையும் பார்க்க ஆரம்பித்து விட்டார். நாராயணனுக்குப் பூஜையோ,
படையலோ வேறு எதுவும் செய்யவில்லை. இடையில் ஒரு கனம் கூட நாராயணன் பெயரைச் சொல்லவில்லை.
வேலையெல்லாம் முடிந்து இரவு படுக்கப் போகும் போது மட்டும் நாராயணன் பெயரை உச்சரித்தார்.
அவ்வளவுதான் படுத்து உறங்கி விட்டார்.
நாரதருக்குக்
குழப்பமாக இருந்தது. நாள்தோறும் நாலாயிரம் முறை நாராயணன் பெயரைச் சொல்லும் தான் எங்கே?
நாளுக்கு இரண்டு முறை மட்டும் சொல்லும் இந்த விவசாயி எங்கே? இருந்தும் இந்த விவசாயியைப்
போய் நாராயணன் தன்னுடைய மிகச் சிறந்த பக்தர் என்று சொல்கிறாரே என்று யோசித்துக் கொண்டே
நாராயணனைப் பார்க்கச் சென்றார்.
நாரதர்
வந்ததும் நாராயணன் அவர் கையில் ஒரு எண்ணெய் கிண்ணத்தைக் கொடுத்து, இதைச் சிந்தாமல்
சிதறாமல் கையில் எடுத்துக் கொண்டு பூலோகத்தைச் சுற்றி வா என்று ஒரு வேலையைக் கொடுத்து
விட்டார்.
நாரதர்
தன்னுடைய சந்தேகத்தை ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு எண்ணெய் கிண்ணத்தை வாங்கிக் கொண்டு
அது சிந்தாமல் சிதறாமல் பூலோகத்தைச் சுற்றி வந்தார். அவருக்கு ஒரு நாள் ஆகி விட்டது.
நாராயணனிடம்
எண்ணெய் கிண்ணத்தோடு வந்த போது நாராயணன் நாரதரைப் பார்த்துக் கேட்டார், “இன்றைக்கு
எத்தனை முறை என்னுடைய பெயரை உச்சரித்தாய்?”
“எண்ணெய்
கிண்ணத்தைச் சிந்தாமல் சிதறாமல் எடுத்துக் கொண்டு வருவதே பெரும்பாடாகி விட்டது. இதில்
உங்கள் பெயரை வேறு சொல்வதா?” என்று நாரதர் சலித்துக் கொண்டார்.
இப்போது
நாராயணன் சொன்னார், “உன்னிடம் ஒரு வேலையைக் கொடுத்ததற்கே அதை மட்டும் பார்த்துக் கொண்டு,
என் பெயரை ஒரு முறை கூட உச்சரிக்க மறந்தாயே. அந்த விவசாயியைப் பார். குடும்பத்தையும்
பார்த்துக் கொண்டு விவசாய வேலைகளையும் பார்த்துக் கொண்டு நாளுக்கு இரண்டு முறை என்னுடைய
பெயரைச் சொல்கிறார். இப்போது நீயே சொல். யார் சிறந்த பக்தன் என்று?”
நாரதருக்குத்
தன்னுடைய தவறு புரிந்தது. தன்னை விட அந்த விவசாயியே சிறந்த பக்தர் என்பதைப் புரிந்து
கொண்டார். அன்றிலிருந்து தான்தான் நாராயணனின் மிகச் சிறந்த பக்தன் என்ற அகந்தையும்
அவரை விட்டு அகன்றது.
கடவுள்
ஒவ்வொரு பக்தரிடம் எதிர்பார்ப்பது இதைத்தானே. கடவுளே விரும்பாத இந்த அகந்தை எதற்கு?
அகந்தையை விட்டொழிப்போம். தன்னைப் போலவே பிறரையும் நினைப்போம். அனைவரையும் சமமாக மதிப்போம்.
அன்போடும் அரவணைப்போடும் வாழ்வோம்.
*****
No comments:
Post a Comment