Saturday, 21 December 2024

எறும்பா? வெட்டுக்கிளியா? யார் நீங்கள்? (சிந்தனையைத் தூண்டும் சிறப்பான கதை)

எறும்பா? வெட்டுக்கிளியா? யார் நீங்கள்?

(சிந்தனையைத் தூண்டும் சிறப்பான கதை)

ஓடி அலையுற வயசுல எதுக்குப்பா காரும் ஆட்டோவும் என்றான் இளங்கோவன்.

என்னத்தெ கொண்டு வந்தோம், என்னத்தெ கொண்டு போகப் போறோம். கையில காசு இருக்கிறப்போ அலைஞ்சு திரிஞ்சு கஷ்டப்படணும்னு தலையெழுத்தா என்ன? என்பது சிவபாலனின் வாதம்.

இளங்கோவனுக்கு எங்கு செல்வதாக இருந்தாலும் பஸ், டிரெய்ன்தான். வீட்டுக்கும் அலுவலகத்துக்குப் போய் வர டிரெய்ன் பாஸ் போட்டு வைத்திருந்தார். சிவபாலன் அப்படியே இளங்கோவனுக்கு நேர் எதிர். செலவு விசயத்தில் அஞ்ச மாட்டார். தாறுமாறாகச் செலவு செய்தால்தான் மனசு அடங்கும். நாலு வீடு தள்ளியிருக்கும் கடைக்குப் போவதென்றாலும் ஆட்டோவில் போனால்தான் திருப்திப்படும்.

இளங்கோவன் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். சிவபாலன் கேட்பதாக இல்லை. வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும் என்பதில் குறியாக இருந்தார் சிவபாலன்.

இதோ இப்போது சிவபாலன் பஸ்ஸிலும் டிரெயினிலும் காத்திருந்து போகிறார். இளங்கோவன் எங்கு போவதாக இருந்தாலும் ஆட்டோவோ, காரோ புக் செய்து கொள்கிறார். அன்று அவர்கள் இருந்ததற்கும் இன்று அவர்கள் இருப்பதற்கு ஏன் இவ்வளவு மாறுதல் என்கிறீர்களா? இப்போது இரண்டு பேரும் ஓய்வு பெற்று விட்டார்கள். இந்தத் தள்ளாத வயதில் பஸ், ரயிலுக்குக் காத்திருந்து அல்லாடிக் கொண்டு போக முடியாது என்பது இளங்கோவனின் வாதம். சிவபாலனுக்கு அதை விட்டால் வேறு வழியில்லாத நிலை.

சம்பாதித்த காலத்தில் காசைத் தாறுமாறாகச் செலவு செய்ததால், தற்போது சிவபாலன் கையில் தம்புடிக் காசில்லை. ஓய்வுக்குப் பின்னும் அங்கங்கே கடைகளில் கணக்கெழுதிச் சம்பாதித்து அந்தச் சம்பாத்தியத்தில் கஷ்ட ஜீவனம் பண்ணிக் கொண்டிருக்கிறார். இளங்கோவன் சம்பாதித்த காலத்தில் சேமித்து வைத்தக் காசில் முதுமையை அதற்குரிய இயல்போடு சுகமாக எதிர்கொண்டு இருக்கிறார்.

இப்போது சிவபாலனுக்குப் பள்ளி வயதில் ஆசிரியர் சொல்லிக் கொடுத்த கதை ஒன்று ஞாபகம் வந்தது.

கோடைக்காலத்தில் எறும்புகள் மழைக்காலத்திற்கான உணவை உன்னிப்பாகச் சேகரித்துச் சேமித்துக் கொண்டிருந்தன. வெட்டுக்கிளிகளோ எந்த விதமான சேமிப்பையோ, சேகரிப்பையோ செய்யாமல் மகிழ்ச்சியாக ஆடிப் பாடிக் கொண்டிருந்தன. அத்தோடு நிற்காமல் எறும்புகளைப் பார்த்து மகிழ்ச்சியாக ஆடிப் பாடி சந்தோசமாக இருக்காமல், ஏன் இப்படி கஷ்டப்படுகிறீர்கள் என்று கேலி பேசின. ஆனால் காலம் அப்படியேவா போய்க் கொண்டிருக்கும்? காலம் மாறியது.

கோடைக்காலம் முடிந்து மழைக்காலம் வந்த போது வெட்டுக்கிளிகள் உண்ணுவதற்கு உணவு இல்லாமல் அல்லல்பட்டன. எறும்புகள் சேமித்து வைத்த உணவைத் தின்றபடி மழைக்காலத்தைச் சுகமாக எதிர்கொண்டன.

இங்கே யார் எறும்பு? யார் வெட்டுக்கிளி? என்பது இப்போது சிவபாலனுக்குப் புரிந்தது. நீங்களும் எறும்பாக இருங்கள். வெட்டுக்கிளியாக இருக்காதீர்கள். அதாவது இளங்கோவனாக இருங்கள். சிவபாலனாக இருக்காதீர்கள்.

சம்பாதிக்கும் காலத்தில் முதுமைக் காலத்திற்குச் சேமிக்கத் தொடங்குங்கள். சேமித்து வைத்ததை நல்ல விதமாக முதலீடு செய்து வைத்திருங்கள். அலைந்து திரிந்து வேலைகளைச் செய்வதற்கான வாய்ப்புகளைத் தரும் இளமையில் அப்படி இருந்து, ஓய்வு கொள்ள வேண்டிய முதுமைக் காலத்தில் முதுமைக்கான வசதிகளை இளமைக் காலத்தில் திரட்டிக் கொள்ளுங்கள். முதுமையை மகிழ்வோடும் மன நிறைவோடும் எதிர்கொள்ளுங்கள். இக்கதையும் தகவலும் உங்களுக்குப் பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறேன். இது போன்ற பயனுள்ள தகவல்களுக்குத் தொடர்ந்து இணைந்திருங்கள். நன்றி! வணக்கம்!

*****

No comments:

Post a Comment